Dorothy: என்னை விமானத்தில் ஏற்ற மறுத்தபோது அதிர்ச்சியாக இருந்தது - ஜீவா சுப்ரமணியம் பேட்டி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் டோரதி படத்திற்கு நல்ல பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் நடிகை திருநங்கை ஜீவா சுப்ரமணியம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து, அழுத்தமான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

டோரதிக்கு வாழ்த்து சொல்லி, இப்படம் தொடர்பாகவும், டோரதி கதை அவருடைய மனதுக்கு எத்தனை நெருக்கமானது என்பது குறித்தும் பேசினோம்.

Dorothy | டோரதி

நம்மிடையே பேசியவர், "டோரதி படத்திற்கு நல்ல பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. என்னுடைய கதாபாத்திரத்திற்கு சினிமா ரசிகர்கள் மத்தியிலும் திரைத்துறையிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

சமீபத்தில் டோரதி காட்சியைப் பார்க்க சென்றிருந்தபோது, என்னை அப்படியே தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். உள்ளிருந்து வெளிவரும்போது அரங்கமே கைதட்டி ஆரவாரம் செய்தது.

அதோடு சினிமாவிலிருந்து இயக்குநர் சுதா கொங்கரா, கிருஷ்ண காயத்ரி, பிஜாய் நம்பியார், ஏ.ஆர். முருகதாஸ், பிக் பாஸ் பரணி, பாடகர் சத்யன் எனப் பல முன்னணித் திரைப் பிரபலங்களும் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதுவரை என் உழைப்பு எங்கும் மதிக்கப்பட்டதே இல்லை. ஆனால், என்னை யாராவது பாவம் பார்த்து வாய்ப்புத் தருவதை விட, என் திறமைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்றே நினைப்பேன்.

என்னை சரியாக அடையாளம் கண்டு எனக்கு வாய்ப்பளித்தவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். கார்த்திக் சுப்புராஜின் படத்தில் நான் ஏற்கெனவே பணியாற்றியிருக்கிறேன். கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா முதல் பாகத்தில் மறைந்த நடிகர் பாலாசிங் சாருக்கு அசிஸ்டன்ட்டாக நான் பணியாற்றியிருக்கிறேன்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்குள் இருந்தது. அதற்கான அழைப்பு டோரதியில் வந்தது. ஆடிஷன் அழைப்பு வந்ததும், அந்தப் பாத்திரத்திற்காக உடனடியாக 13 கிலோ வரை உடல் எடையைக் கூட்டினேன்.

வாய்ப்பு தள்ளிப்போய்க்கொண்டே இருந்ததால், நானே இரட்டை மூக்குத்தி குத்தி, பழைய காட்டன் புடவை கட்டி, கொண்டை போட்டு ஒரு போட்டோஷூட் செய்து அனுப்பினேன். அதைப் பார்த்த பிறகுதான் என்னை வரவழைத்து மேக்கப் போட்டுப் பார்த்துத் தேர்வு செய்தார்கள்.

பிறகு, படப்பிடிப்புத் தளத்தில்தான் கார்த்திக் சுப்பராஜை நேரில் பார்த்தேன். ஆரம்பத்தில் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக இருப்பாரோ என்று பயந்தேன். ஆனால் அவர் நடிகர்களிடம் வேலை வாங்கும் விதம் ரொம்பவே அற்புதமாக இருக்கும்" என்றார் உற்சாகத்துடன்.

Jeeva Subramaniam - Dorothy
Jeeva Subramaniam - Dorothy

"படத்தின் வேலைகள் முடிந்தப் பிறகு படக்குழுவினருக்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ஒரு காட்சியை ஏற்பாடு செய்திருந்தார். டோரதியில் அப்படியே என்னை பார்த்தேன்.

தயாரிப்புக் குழுவில் நாங்கள் ஒரு பத்து பேர் மட்டுமே முதலில் படம் பார்த்தோம். படம் முடிந்து சனந்த் உள்ளிட்ட மற்றவர்கள் வெளியே சென்றுவிட்டார்கள்.

என்னால் என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டேன். பிறகு கார்த்திக் சுப்பராஜைக் கட்டிப்பிடித்து நெகிழ்ந்தேன். அப்போது அவர், அடுத்ததாக நாம் டொரண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவுக்குப் போகிறோம் அக்கா என்ற தகவலைச் சொன்னார்.

எனக்கு அது மிகப்பெரிய அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. என் வாழ்க்கையில் படப்பிடிப்பிற்காக சென்னையைத் தாண்டி வெளியூர் போயிருக்கிறேன்.

ஆனால், டோரதிக்காக என்னை கனடா கூட்டிச் சென்றார்கள். என்னை அங்கு அழைத்துச் சென்று கௌரவப்படுத்தி, உலகச் சினிமா எப்படிப்பட்டது என்பதை என் கண்முன்னே காட்டினார்கள்.

அங்குள்ள கலைஞர்களைப் பார்த்த பிறகு, ஒரு நடிகையாக இன்னும் என் அறிவை எவ்வளவு வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன்" என்றவர், "எல்லாரும் எனக்கு எல்லாம் சுலபமாக கிடைத்துவிட்டது என்று நினைக்கிறார்கள். ஆனால், கடந்த மார்ச் மாதத்தில் இருந்து எனக்கு வேலை எதுவுமில்லை. வீட்டு வாடகை செலுத்துவதற்குக் கூட பணமில்லை.

Jeeva Subramaniam - Dorothy
Jeeva Subramaniam - Dorothy

இன்ஸ்டாகிராம் புரமோஷன் மூலமாகத்தான் பணம் சம்பாதிக்கிறேன். கஷ்டத்தைச் சொல்லி யாரிடமும் வேலை கேட்க எனக்கு விருப்பமில்லை. அதுமட்டுமல்ல, இப்போது என்னுடைய மொபைல் நம்பரைப் பரப்பிவிட்டிருக்கிறார்கள்.

இதுவரை 18,000 எண்களை பிளாக் செய்து வைத்துள்ளேன். போன் செய்தும் மெசேஜ் அனுப்பியும் மிகவும் கொச்சையாகப் பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள்" என்றார்.

தொடர்ந்து அவர், டொரண்டோ திரைப்பட விழாவுக்காக கனடா சென்றிருந்தபோது அவருக்கு ஏற்பட்ட சிரமங்கள் பற்றி பகிர்ந்துக் கொண்டார்.

அவர், "கனடாவில் விழா முடிந்து துபாய் வழியாக இந்தியா திரும்பும்போது, விமான நிலையத்தில், மூன்றாம் பாலினத்தவருக்கு அனுமதி இல்லை என்று கூறி என்னை விமானத்தில் ஏற்ற மறுத்துவிட்டார்கள்.

அந்த நேரத்தில் இப்படிச் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. விஷயம் தெரிந்ததும் கார்த்திக் சுப்பராஜ், என்ன நடந்தாலும் நான் கூட நிற்கிறேன். எவ்வளவு செலவானாலும் அக்கா பத்திரமாக வந்து சேரட்டும் என்று கூறி ஜெர்மனி வழியாக எனக்கு மாற்றுத் டிக்கெட் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

படம் ரிலீஸாவதற்கு முன்பே இதனைப் பேசியிருந்தால் விளம்பரத்திற்காகச் செய்கிறார்கள் என்று தவறாகப் பேசுவார்கள் என்பதால்தான் அப்போது இதனைப் பற்றி பேசவில்லை. 2026-ஆம் ஆண்டிலும்கூட இந்த மாதிரியான பிற்போக்கான விஷயங்கள் நடப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

துபாய் வழியாகப் பயணிக்கும் எமிரேட்ஸ் விமானங்களில் இப்படி ஒரு விதிமுறை இருப்பது, பிரச்னை வந்த பிறகு கூகுளில் தேடிப் பார்த்தபோதுதான் எனக்குத் தெரியவந்தது.

Jeeva Subramaniam - Dorothy
Jeeva Subramaniam - Dorothy

என் அடையாளச் சான்றுகளில் பாலினம் குறிப்பிடப்படும் இடத்தில் மூன்றாம் பாலினத்தைக் குறிக்கும் X மார்க் இருக்கும். ஆனால், அப்படிப்பட்ட அடையாளச் சான்று வைத்திருப்பவர்களுக்கு துபாயில் அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.

இப்படி ஒரு விதிமுறை இருந்தால் அதை முன்பே வெளிப்படையாக அறிவித்திருக்க வேண்டும். எதுவுமே சொல்லாமல் கடைசி நிமிடத்தில் தடுத்து நிறுத்துவது எந்த வகையில் நியாயம்?

எனக்குத் தெரிந்து கனடாவில் வாழும் திருநங்கை தோழிகளிடம் இதுபற்றிக் கேட்டபோது, அவர்கள் இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க தங்களுடைய பாலின அடையாளத்தையே மாற்றிவிட்டதாகச் சொன்னார்கள்.

ஆனால், சுய அடையாளத்தை வெளிப்படையாகக் காட்டுவதற்காகத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டோம். அதை விட்டுவிட்டு மீண்டும் என் அடையாளத்தை எப்படி மாற்றிக்கொள்ள முடியும். நான் என்னுடைய அனைத்து அடையாள அட்டைகளிலும் திருநங்கை என்றுதான் வைத்திருக்கிறேன். அதை மாற்ற எனக்கு விருப்பமில்லை. இந்த விஷயம் வெளியே வர வேண்டும்.

Jeeva Subramaniam - Dorothy
Jeeva Subramaniam - Dorothy

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதைப் பார்த்து உரிய நடவடிக்கை எடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்" என்றவர், இப்போது சினிமாவில் கிடைத்து வரும் பாராட்டுகள் அவருக்குள் ஏற்படுத்தியிருக்கும் மகிழ்ச்சி குறித்து, "2016 சென்னை வெள்ளத்தில் அனைத்தையும் இழந்து சுற்றித் திரிந்த என்னை இந்தச் சினிமாதான் வாழ வைத்திருக்கிறது.

சினிமாவுக்கு உண்மையா இருந்தால் அது நம்மை ஒருபோதும் கைவிடாது. இன்று டோரதி படத்தையும், படத்தில் வரும் முத்துமணி பாடலையும் தமிழ்நாடு, தெலுங்கு மாநிலங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் உள்ள திருநங்கை மக்கள் தங்களின் அடையாளமாகக் கொண்டாடி வருகிறார்கள். அதுவே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி" எனப் பகிர்ந்து முடித்துக் கொண்டார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.