கண்ணதாசன் ஒரு தமிழ்ப் பித்தன் - எளிய மக்களின் இதயத்தில் தமிழை வாழ வைத்த கவிஞன்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
“பித்தன்” என்ற சொல் பொதுவாக ஒரு குறையாகக் கருதப்படுகிறது. ஆனால் சில பித்தங்கள் உலகத்தை மாற்றுகின்றன. நாட்டுப்பற்று பித்தம் பாரதியாரை உருவாக்கியது. சுதந்திரப் பித்தம் காந்தியை உருவாக்கியது. அதுபோல தமிழ்ப் பித்தம் கண்ணதாசனை உருவாக்கியது. தமிழ் மொழிக்காக வாழ்ந்தவர்கள் பலா். தமிழ் மொழியைப் புகழ்ந்தவர்கள் பலர். ஆனால் தமிழ் மொழியையே தனது மூச்சாகவும், பேச்சாகவும், வாழ்க்கையாகவும் மாற்றியவர் கண்ணதாசன். பொதுவாக ஒரு கவிஞன் கவிதை எழுதுவான். ஆனால் கண்ணதாசன் வாழ்க்கையையே கவிதையாக எழுதினார். மற்றவர்கள் வார்த்தைகளைத் தேடினர். கண்ணதாசனை வார்த்தைகளே தேடின.
தமிழ் மொழியின் பெருமையைப் பற்றி பேசும்போது நாம் சங்க காலத்தை நோக்கிச் செல்கிறோம். ஆனால் கண்ணதாசன் தமிழின் பெருமையை சாதாரண மனிதனின் கண்ணீரிலும், சிரிப்பிலும், காதலிலும், ஏக்கத்திலும் கண்டார். ஒருமுறை அவர் கூறினார். “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை”. இந்த வரிகள் ஒரு மனிதனின் அகங்காரம் அல்ல, ஒரு படைப்பாளியின் நம்பிக்கை. இன்று கண்ணதாசன் உடலால் நம்மிடையே இல்லை, ஆனால் அவரது பாடல்கள் உயிருடன் இருக்கின்றன. அந்த வகையில் அவர் சொன்னது உண்மையாகிவிட்டது.
கண்ணதாசன் தமிழை மேடையில் வைத்து வணங்கவில்லை. மக்களின் இதயத்தில் வைத்து வாழ வைத்தார். அவர் எழுதிய பாடல்களைப் பாருங்கள். காதலன் பாடுகிறான், தாய் பாடுகிறாள், தொழிலாளி பாடுகிறான், தத்துவஞானி பாடுகிறான். ஏழை பாடுகிறான், பணக்காரன் பாடுகிறான். ஏனெனில் கண்ணதாசன் அனைவருக்குமான கவிஞா். பலா் இலக்கியத்தை மக்களிடம் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் கண்ணதாசன் மக்களின் வாழ்க்கையையே இலக்கியமாக மாற்றினார்.
அவருடைய பாடல்களில் காதல் இருக்கிறது. ஆனால் அது வெறும் கனவு அல்ல, வாழ்க்கையின் உண்மை. அவருடைய பாடல்களில் தத்துவம் இருக்கிறது. ஆனால் அது நுால்களில் கட்டப்பட்ட சிந்தனை அல்ல. தெருவில் நடக்கும் மனிதனின் அனுபவம். அவருடைய பாடல்களில் ஆன்மிகம் இருக்கிறது. ஆனால் அது மனிதனைப் பிரிப்பதற்காக அல்ல. மனிதனை புரிந்துகொள்ள வைப்பதற்காக.

கண்ணதாசனின் மிகப்பெரிய சிறப்பு அவர் தன்னை மறைக்கவில்லை. தன் தவறுகளையும் எழுதினார். தன் தோல்விகளையும் எழுதினார். தன் பலவீனங்களையும் எழுதினார். அதனால் அவரது கவிதைகளைப் படிக்கும்போது ஒரு கவிஞனை அல்ல, ஒரு மனிதனை நாம் காண்கிறோம். தமிழ் மொழி அவருக்கு ஒரு பாடப்பொருள் அல்ல, ஒரு உயிர். தமிழ் அவருக்கு ஒரு தொடர்பு சாதனம் அல்ல. ஒரு தோழன். தமிழ் அவருக்கு ஒரு இலக்கியம் அல்ல. ஒரு வாழ்க்கை. அதனால்தான் அவர் எழுதிய ஒவ்வொரு வரியும் நேராக இதயத்தைத் தொடுகிறது.
கண்ணதாசனைப் பற்றி பேசும்போது எனக்கு ஒரு புதிய சிந்தனை தோன்றுகிறது. சங்க காலத்தில் தமிழ் இருந்தது. கம்பன் காலத்தில் தமிழ் இருந்தது. பாரதி காலத்தில் தமிழ் இருந்தது. ஆனால் இருபதாம் நுாற்றாண்டில் ஒரு சாதாரண மனிதனின் வீட்டுக்குள் தமிழ் பாடிக்கொண்டே நுழைந்தது. என்றால், அந்த வாசலைத் திறந்தவர் கண்ணதாசன். ஒரு மொழிக்காக வாழ்வது உயர்வு. ஆனால் ஒரு மொழியாகவே வாழ்வது அரிது. அந்த அரிய மனிதர்தான் கண்ணதாசன். எனவே கண்ணதாசன் ஒரு கவிஞர் மட்டுமல்ல. ஒரு காலத்தின் குரல். ஒரு பாடலாசிரியா் மட்டுமல்ல. ஒரு தலைமுறையின் உணர்வு. ஒரு தமிழறிஞர் மட்டுமல்ல, தமிழே பித்துப்பிடித்த ஒரு தமிழன்.
நிறைவாக நான் கூற விரும்புவது கண்ணதாசன் தமிழை எழுதவில்லை, தமிழே கண்ணதாசனை எழுதியது. கண்ணதாசன் தமிழைப் பாடவில்லை, தமிழே கண்ணதாசனை பாடியது.ஆகவே கண்ணதாசன் ஒரு தமிழ்க் கவிஞர் அல்ல, தமிழுக்கே பித்துப்பிடித்த ஒரு தமிழ்ப் பித்தன்.
ஆசிரியா்,
பா.நுாருல்லா
அல்அமீன் மேல்நிலைப்பள்ளி
மதுரை
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..!
இந்த வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப்பில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

