மயிலாடுதுறை: திமுக தொழிற்சங்க நிர்வாகியான அரசு பஸ் கண்டக்டர் வெட்டிக் கொலை; போலீஸ் விசாரணை

மயிலாடுதுறை அருகே உள்ள ஆனந்ததாண்டவபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(வயது 45). இவர் அரசு பஸ்ஸில் கண்டக்டராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

தமிழ்ச்செல்வன், திமுக தொழிற்சங்கமான, தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக இருந்தார். இவர் நேற்று இரவு 11 மணியளவில் பணி முடிந்து தனது டூவீலரில் வீடு திரும்பியுள்ளார். ஆற்காடு செல்லும் சாலையில் சென்றபோது மர்ம நபர்கள் தமிழ்ச்செல்வனைக் கொடூரமாக வெட்டி படுகொலை செய்தனர்.

கொலை செய்யப்பட்ட தமிழ்ச்செல்வன்

தமிழ்ச்செல்வன், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் விசாரித்துள்ளனர். அப்போது ஆற்காடு சாலையில் தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அலறியடித்து ஓடினர்.

தலை, முகம், கை என வெட்டுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த தமிழ்ச்செல்வன் உடலைப் பார்த்து கதறினர். இந்தக் கொலை குறித்து மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், கொலையாளிகளை விரைவாகக் கண்டுபிடித்து கைது செய்யக் கோரி, விசிக மாவட்ட செயலாளர் மோகன்குமார் தலைமையில் உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் கட்சியினர் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கொலையாளிகளை விரைவில் பிடித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

murder

படுகொலை செய்யப்பட்ட தமிழ்ச்செல்வனின் தந்தை ராஜகோபால் முன்னாள் திமுக ஒன்றிய கவுன்சிலர், தாய் ராணி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்விரோதம் எதுவும் இல்லாத நிலையில் தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

பெண் விவகாரம் ஒன்றில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருவதாகச் சொல்கிறார்கள். தமிழ்ச்செல்வன் கொலை மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.