புதுச்சேரி: காவல்துறை SP மீது பாலியல் வன்கொடுமை வழக்கு; நீதிமன்றத்தின் கண்டிப்பால் பணிந்த அரசு

புதுச்சேரியின் பிராந்தியங்களில் ஒன்றான காரைக்காலில் காவல்துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர் சுப்பிரமணியன். பதவி உயர்வு அடிப்படையில் எஸ்.பியான சுப்பிரமணியன், காரைக்காலில் பணியாற்றினார்.

அப்போது, `புதுச்சேரி காவல்துறையில் காவலராகப் பணிபுரியும் தன்னுடைய மகளுக்கு எஸ்.பி சுப்பிரமணியன் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்தார்.

அதனால் என் மகள் தற்கொலைக்கு முயற்சித்தார். அதற்குக் காரணமான எஸ்.பி சுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ஒரு பெண் காவலரின் தாய் காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதையடுத்து அந்தப் புகாரின் அடிப்படையில் விசாகா குழு அமைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.

சென்னை உயர் நீதிமன்றம்

அதேசமயம் எஸ்.பி சுப்பிரமணியனும் புதுச்சேரிக்கு மாற்றலானார். அதையடுத்து தான் கொடுத்த புகாரின் மீது காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று, பெண் காவலரின் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், எஸ்.பி மீதான பாலியல் புகாரை விரைந்து விசாரித்து நான்கு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தது.

அதன்பிறகும் புதுச்சேரி காவல்துறை விசாரணை எதையும் மேற்கொள்ளாததால், மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் பெண் காவலரின் தாய். அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி லட்சுமிநாராயணன், ``இந்த வழக்கில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?

கும்பகர்ணத் தூக்கத்திலிருந்து எழுந்திருங்கள். குற்றவாளிகளைப் பாதுகாக்க முயற்சிக்கிறீர்களா?” என்று புதுச்சேரி அரசையும், காவல்துறையையும் கடுமையாக விமர்சித்த அவர், ``விசாகா குழு அறிக்கையின் அடிப்படையில் உடனே நடவடிக்கை எடுக்காவிட்டால், தலைமைச் செயலர் நேரில் ஆஜராக நேரிடும்” என்று கடுமையாக உத்தரவிட்டிருந்தார். அதையடுத்து எஸ்.பி சுப்பிரமணியனை சஸ்பெண்ட் செய்தது புதுச்சேரி காவல்துறை தலைமை.

அதையடுத்து கடந்த 27-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது புதுச்சேரி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எஸ்.பி சுப்பிரமணியனை சஸ்பெண்ட் செய்திருப்பதுடன், பெண் காவலரின் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமும் கேட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

அப்போது புகார்தாரரான பெண் காவலரின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எஸ்.பி சுப்பிரமணியன் மீது இன்னும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

எஸ்.பி. சுப்பிரமணியன்
எஸ்.பி. சுப்பிரமணியன்

அதையடுத்து, ``பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.பி சுப்பிரமணியன் மீது வழக்குப் பதிவு செய்யப்படுமா… இல்லையா? வழக்குப் பதிவு செய்ய முடியாது என்றால் நேரடியாகச் சொல்லுங்கள்” என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த வழக்கு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து புதுச்சேரி டி.ஜி.பி-யும், சீனியர் எஸ்.பி-யும் செப்டம்பர் 30-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், நீதிமன்றத்தின் விமர்சனத்துக்கு உள்ளாக நேரிடும் என்பதால் எஸ்.பி மீது எஃப்.ஐ.ஆர் போடுவதற்கு பச்சைக் கொடி காட்டியது புதுச்சேரி அரசு.

அதையடுத்து இன்று காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் எஸ்.பி. சுப்பிரமணியன் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. புதுச்சேரி காவல்துறையில் சட்டம் ஒழுங்குப் பிரிவில் எஸ்.பி-யாக இருந்த ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.