மன்னார்குடி: ”விவசாயிகளைப் பற்றி கவலையில்லை“ - பாமணி ஆற்றில் நகராட்சி கழிவு நீர்; விவசாயிகள் வேதனை

மன்னார்குடி பாமணி ஆறு காவிரி கிளை ஆறுகளில் ஒன்று. மன்னார்குடியில் இருந்து செல்லும் பாமணி ஆறு பல பகுதிகளைக் கடந்து முத்துப்பேட்டை வரை சென்று கடலில் கலக்கிறது.

பாமணி ஆற்று நீரை நம்பி பல ஆயிரகணக்கான ஏக்கர் விவசாயம் நிலம் பயன்பெறுகிறது. மன்னார்குடி பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கும் இந்த ஆறு காரணமாக இருக்கிறது.

மன்னார்குடி பாமணி ஆற்றில் விவசாயிகள்

பாமணி ஆறு, சேரன்குளம் ஷட்டர்ஸில் இருந்து வெளியேறும் நீர் கருப்பாக இருந்துள்ளது. மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது. இந்த நீரை பாசனத்திற்கு விவசாயிகள் பயன்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் மன்னார்குடி நகராட்சி நிர்வாகம், பாமணி ஆற்றில் கழிவு நீரைத் திறந்து விடுவதை அறிந்து விவசாயிகள் உள்ளிட்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து விவசாயிகள் நகராட்சி நிர்வாகத்தை முறையிட்டுள்ளனர். இந்த விவகாரம் மன்னார்குடியில் சலசலப்பைக் கிளப்பியிருக்கிறது.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் பேசினோம், பாமணி ஆற்றில் வரும் தண்ணீரை நம்பி சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்காமல் தாமதமாகவே திறக்கப்பட்டது.

தற்போது பாமணி ஆற்றில் வரும் தண்ணீர் மூலம் விவசாயிகள் சம்பா நேரடி விதைப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கழிவு நீர்

இந்நிலையில், மன்னார்குடி நகராட்சி பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீரை நகராட்சி நிர்வாகம் பாமணி ஆற்றில் கலக்கச் செய்துள்ளனர். இதனால் தண்ணீர் கருப்பாக வருகிறது. நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடையில் வரும் கழிவு நீர் வந்து சேர்கின்ற இடத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான கட்டடப் பணிகள் நடக்கிறது.

இதனால் கழிவு நீர் செல்வதற்கு வாய்ப்பில்லாததால் அதிகாரிகள் கழிவு நீரை பாமணி ஆற்றில் திறந்து விட்டுள்ளனர். இதனால் தண்ணீர் கருப்பாக வந்துள்ளது. ஆற்று நீருடன் கழிவு நீரும் கலந்ததால் பயிர்கள் பாதிப்படையும்.

ஆற்றையும், விவசாயிகளையும் பற்றி கொஞ்சம் கூட கவலையில்லாமல் நகராட்சி நிர்வாகம் இதைச் செய்துள்ளனர். கழிவு நீர் கலந்த தண்ணீரைப் பயன்படுத்துவதால் பயிர்கள் மட்டுமல்ல மக்களுக்கும் நோய் தொற்று உண்டாகும் அபாயம் ஏற்படும் என நகராட்சி ஆணையர் மற்றும் மன்னார்குடி நீர்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தோம். இதற்கு தீர்வு காணவில்லை என்றால் விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு முடிவு செய்தோம்.

பாமணி ஆறு

இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, நாளை கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஆற்றையும், விவசாயத்தையும் காக்க வேண்டும் என்றனர்.

இந்நிலையில், பாமணி ஆற்றில் கழிவு நீர் கலப்பத்தை நகராட்சி நிர்வாகம் தடுத்து சுத்தம் செய்கின்ற பணியினையும் மேற்கொண்டு வருகின்றனர். விவசாயிகள், இது எங்களுக்கு நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.