PVR: `எப்போ படத்தை போடுவீங்க? - 17 நிமிட விளம்பரம்: ரூ.75,000 அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்!

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல திரையரங்கு ஒன்று (PVR), படத்தின் தொடக்கத்தில் 22 நிமிடங்கள் வரை வர்த்தக விளம்பரங்கள் மற்றும் விளம்பரப் படங்களைத் திரையிட்டு காலதாமதம் செய்ததற்காக, ரூ. 75,000 வழங்க வேண்டும் என ஹைதராபாத் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி, 33 வயதான நபர் ஒருவர் தனுஷ் மற்றும் நாகர்ஜுனா நடிப்பில் வெளியான ‘குபேரா’ திரைப்படத்தைப் பார்ப்பதற்காக இரவு 10:35 மணி காட்சிக்கு இரண்டு டிக்கெட்டுகளைப் பதிவு செய்திருந்தார். அவரும் அவரது நண்பரும் இரவு 10:30 மணிக்கே திரையரங்கிற்குள் சென்று அமர்ந்துவிட்டனர். இருப்பினும், 17 நிமிடங்கள் தொடர்ச்சியாக விளம்பரங்களும், பிற படங்களின் விளம்பர முன்னோட்டங்களும் மட்டுமே திரையிடப்பட்டிருக்கிறது.

திரையரங்கம்

இந்தத் தேவையில்லாத தாமதத்தால் தனது திட்டமிட்ட பணிகள் பாதிக்கப்பட்டு, வழக்கமாக வீட்டிற்குச் செல்லும் நேரத்தை விட ஒரு மணி நேரம் தாமதமாக, அதாவது அதிகாலை 3 மணிக்குத் தான் வீட்டிற்குச் செல்ல முடிந்தது என்று நுகர்வோர் ஆணையத்தில் அவர் புகார் அளித்தார். மேலும், இந்தச் செயல் சேவைக் குறைபாடு ஆகும் என்றும் அவர் குற்றம்சாட்டினார். இந்த வழக்கை விசாரித்த ஹைதராபாத் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், செப்டம்பர் 11, 2026 அன்று இறுதி உத்தரவைப் பிறப்பித்தது.

அதில், மனுதாரரின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட ஆணையம், ``திரையரங்கின் இந்தச் செயல் நியாயமற்ற வர்த்தக நடைமுறை. பொது விழிப்புணர்வு படங்களை இரண்டு நிமிடங்கள் வரை மட்டுமே திரையிட வேண்டும் என்ற அரசின் வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. திரையரங்குகள் முற்றிலும் விளம்பரங்களைச் திரையிடக் கூடாது எனக் கூறவில்லை. ஆனால், வர்த்தக லாபத்திற்காகத் தொடர்ச்சியாக விளம்பரங்களை ஒளிபரப்பி, திரைப்படத்தின் நேரத்தைத் தாமதப்படுத்தியதையே குற்றமாகக் கருதப்படுகிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

கோர்ட் தீர்ப்பு
கோர்ட் தீர்ப்பு

மேலும், ``ரூ.20,000 மன உலைச்சல் மற்றும் அசௌகரியத்திற்கு இழப்பீடாகப் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு வழங்கப்பட வேண்டும். ரூ. 5,000 வழக்குச் செலவுத் தொகையாக நுகர்வோருக்கு வழங்கப்பட வேண்டும். ரூ. 50,000 திரையரங்கு மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் மாவட்ட நுகர்வோர் நல நிதிக்கு அபராதமாகச் செலுத்தப்பட வேண்டும்." என மொத்தம் ரூ.75 ஆயிரம் அபராதமும் விதித்திருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.