`எங்களை யாரும் பாலியல் கொடுமை செய்யவில்லை; எல்லாம் கட்டுக்கதை- பஞ்சாப் பல்கலை., மாணவிகள் விளக்கம்
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பக்வரா என்ற இடத்தில் இருக்கும் லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரு மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், அதில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்தி வெளியானது. இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. பல்கலைக்கழகத்தில் தீவைக்கப்பட்டது. பொருட்கள் அடித்து உடைக்கப்பட்டது. இதனால் அங்கு அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் பெண்கள் தங்களுக்கு அது போன்ற எதுவும் நடக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளனர். இது குறித்து பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டாக்டர் மோனிகா குலாட்டி மாணவிகளிடம் பேசும் வீடியோவை வெளியிட்டார்.
அந்த வீடியோவில், பெண்கள் விடுதி 3-ன் அறை எண். 504 இல் வசிக்கும் மூன்று மாணவிகளைக் குறிப்பிட்டார். அவர்கள்தான் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அந்த அறையில் வசிக்கும் மாணவிகள் அத்தகைய சம்பவம் எதுவும் அங்கு நடக்கவில்லை என்று மறுத்தனர்.
வீடியோவில், டாக்டர் குலாட்டி, ``விடுதி 3ல் உள்ள அறை எண் 504 இல் வசிக்கும் பெண்கள் எங்களிடம் கூறியதை நீங்கள் கேட்க விரும்புகிறேன்" என்று கூறினார். முதல் மாணவி, "நாங்கள் அறை எண் 504 இல் வசிப்பவர்கள். எங்கள் அறையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. நாங்கள் கடந்த இரண்டு மாதங்களாக இங்கு வசிக்கிறோம், தயவுசெய்து, போலீஸார் மற்றும் மாணவர்களே, எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம். எங்கள் அறையில் அப்படி எதுவும் நடக்கவில்லை, எங்களுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை. எல்லாம் கட்டுக்கதை" என்று கூறினார்.
இரண்டாவது மாணவி கூறுகையில், "இன்று நாங்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம், மேலும் சிக்கலை எதிர்கொண்டால், நாங்கள் எங்கள் பெற்றோரிடம் இதனை தெரிவிக்க வேண்டிவரும். தயவுசெய்து எங்களை துன்புறுத்தாதீர்கள்." என்று தெரிவித்தார். மூன்றாமவர், "போலீஸார் எங்கள் அறைக்கு திரும்பத் திரும்ப வருவதை நிறுத்த வேண்டும். இல்லையெனில், நாங்கள் எங்கள் பெற்றோரை அழைப்போம்." என்று தெரிவித்தார். டாக்டர் குலாட்டி மேலும் கூறுகையில்,நடந்துகொண்டிருக்கும் போராட்டங்கள் மற்றும் அமைதியின்மை மற்றும் இட்டுக்கட்டப்பட்ட வதந்திகள் மூலம் பல்கலைக்கழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த சதி நடக்கிறது. இதில் சமூக விரோத சக்திகள் மற்றும் தனிப்பட்ட நலன்களைக் கொண்ட நபர்கள் இதன் பின்னணியில் உள்ளனர்," என்று அவர் கூறினார்.
அதேசமயம் ஒரு தனி வீடியோவை மூன்று மாணவிகளும் வெளியிட்டுள்ளனர். அதில் மூன்று மாணவிகளும் என்ன சொல்ல வேண்டும் என்பது குறித்து தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும், அவர்களின் வாக்குமூலம் தங்களுக்குத் தெரியாமலோ அல்லது ஒப்புதல் இல்லாமலோ பயன்படுத்தப்பட்டதாகக் கூறினர். பல்கலைக்கழகத்தில் கட்டுமானப்பணியில் ஈடுபட்ட தொழிலாளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகவும், அந்த மாணவியை பல்கலைக்கழக நிர்வாகம் வீட்டிற்கு அனுப்பியதாகவும், அம்மாணவி தற்கொலை செய்துகொண்டதாகவும் செய்தி வெளியானது. ஆனால் ஆரம்பத்தில் இருந்தே இது வதந்தி என்று பல்கலைக்கழகம் கூறிக்கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

