கேரள திருவோணம் பம்பர் லாட்டரி குலுக்கல்: கண்ணூரில் விற்ற லாட்டரிக்கு ரூ.30 கோடி பம்பர் பரிசு!
கேரள அரசின் லாட்டரித்துறை சார்பில் சித்திரை விஷூ, ஆயுதபூஜை, திருவோணம் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு பம்பர் பரிசுகளுடன் கூடிய லாட்டரி வெளியிட்டு விற்பனை செய்வது வழக்கம்.
கடந்தமுறை வரை ஓணம் பண்டிகைக்கு 25 கோடி ரூபாய் பம்பர் பரிசு அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு 30 கோடி ரூபாய் பம்பர் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த முறை ஓணம் சிறப்பு லாட்டரி 90 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டன.
ஒரு டிக்கெட் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அச்சிடப்பட்ட அனைத்து லாட்டரிச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. பாலக்காடு மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 20 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாயின. 2026-ம் ஆண்டுக்கான திருவோணம் பம்பர் லாட்டரி குலுக்கல் இன்று திருவனந்தபுரம் கார்கி பவனில் அமைச்சர் கே.முரளிதரன் முன்னிலையில் நடந்தது.
அதில் TL 360615 என்ற எண் கொண்ட லாட்டரி ரூ.30 கோடி பம்பர் பரிசை வென்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த அதிர்ஷ்ட டிக்கெட் கண்ணூர் மாவட்டத்தில் விற்பனையானது தெரியவந்துள்ளது. பரிசுபெற்ற அதிஷ்டசாலி யார் என்பது இதுவரை தெரியவில்லை. அவரை கேரளமே தேடி வருகிறது.
இரண்டாம் பரிசு தலா ரூ.1 கோடி வீதம் 20 பேருக்கு வழங்கப்படுகிறது. ஒருகோடி ரூபாய் பரிசுபெற்ற 3 டிக்கெட்டுகள் பழவங்காடி, கல்லம்பலம், வைட்டிலா ஆகிய பகுதிகளில் உள்ள பகவதி ஏஜென்சி மூலம் விற்பனையாகியுள்ளன.
மூன்றாம் பரிசாக தலா ரூ.25 லட்சம் வீதம் 20 பேருக்கும், நான்காம் பரிசாக தலா ரூ.5 லட்சம் வீதம் 10 பேருக்கும், ஐந்தாம் பரிசாக தலா ரூ.2 லட்சம் வீதம் 10 பேருக்கும் வழங்கப்படுகின்றன.
இதுதவிர ரூ.5,000, ரூ.2,000, ரூ.1,000 மற்றும் ரூ.500 என ஏராளமான ஆறுதல் மற்றும் சிறு பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரூ.30 கோடி பரிசுபெற்ற லாட்டரிச் சீட்டு கண்ணூர் மாவட்டம் சக்கரக்கல் பகுதியில் செயல்பட்டு வரும் ‘முத்து ஏஜென்சி’ உரிமையாளர் அனீஷ் என்பவரால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 18 ஆண்டுகளாக லாட்டரி விற்பனை தொழிலில் ஈடுபட்டு வரும் அனீஷ், கண்ணூர் பகுதியில் 4 மொத்த விற்பனை கடைகள் உட்பட மொத்தம் 6 லாட்டரி விற்பனை நிலையங்களை நடத்தி வருகிறார்.
இவர் விற்ற டிக்கெட்டுக்கு பம்பர் பரிசு விழுவது இது முதல் முறையல்ல; இதற்கு முன்பும் இவரிடம் விற்கப்பட்ட டிக்கெட் ஒன்றுக்கு கிறிஸ்துமஸ் - புத்தாண்டு பம்பர் மெகா பரிசு கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


