Meesaya Murukku 2 Review: கமர்ஷியல் பார்முலாவில் காணாமல்போகும் இசை அரசியல்! படமாக எப்படி?

சென்னையில் வசித்து வரும் `ஜென் - சி இளைஞரான டிஜே ஜீவாவிற்கு (ஹிப் ஹாப் தமிழா ஆதி) இசைத்துறையில் சாதிக்க வேண்டும் எனப் பேரார்வம். சுயாதீன இசைக்கலைஞராக வேண்டும் என்கிற இவரின் கனவுக்கு நெப்போடிசம், சுயாதீன இசைத்துறையிலுள்ள அரசியல் ஆகியவை தடையாகின்றன. அவரைப் போலவே அவரின் தந்தை டைகர் ரவி (பாபா பாஸ்கர்), தாத்தா கானா தாஸ் (கருணாஸ்) ஆகியோர் இசைத்துறையில் சாதிக்கப் போராடியவர்கள் என்பது வெளிப்பட, மூன்று தலைமுறையின் வெற்றிக்காகப் போராடத் தொடங்குகிறார் ஜீவா. இவர்கள் மூவருமே வெற்றியடைந்தார்களா என்பதை காமெடி + எமோஷனல் வாத்தியங்களின் வால்யூமை ஏற்றிச் சொல்லியிருக்கிறது ஹிப் ஹாப் தமிழா டீம்.
மீசைய முறுக்கு 2 விமர்சனம் | Meesaya Murukku 2 Review

கானா தாஸ், டைகர் ரவி, டிஜே ஜீவா என 70ஸ், 90ஸ், 2K என மூன்று தோற்றங்களில் வருகிறார் ஹிப் ஹாப் தமிழா ஆதி. வாய்ப்பு மறுக்கப்படும் கானா தாஸ், குடும்பத்திற்காகக் கனவைத் தியாகம் செய்யும் டைகர் ரவி ஆகிய கதாபாத்திரங்களில் மாஸ், எமோஷனல் முகத்தைத் தாராளமாகக் காட்டுகிறார். டிஜே ஜீவா கதாபாத்திரத்திற்கு எமோஷனலைத் தாண்டி காமெடியையும் துணைக்குக் கையில் எடுத்திருக்கும் ஆதி, இந்த மூன்று கதாபாத்திரங்களுக்கும் தேவையான பங்களிப்பைத் தந்திருக்கிறார். ஆனால், சென்னை வட்டார வழக்கு மட்டும் துருத்தலாகவே தெரிகிறது.

கதையில் முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரமாக இல்லாததால், கேதிகா சர்மா தான் இருப்பதாகப் பதிவு மட்டுமே செய்கிறார். இசையில என்ன மேல கீழே எனப் பாகுபாட்டைக் கேள்வி கேட்கும் கதாபாத்திரத்தில் வரும் ரம்யா ரங்கநாதன், அதில் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பைத் தந்து பாராட்டுகளைப் பெறுகிறார். கேமியோ அளவிலான கதாபாத்திரத்தில் வந்தாலும் கவனம் பெறுகிறார் நடிகை சைத்ரா ஜே.ஆச்சார்.

மீசைய முறுக்கு 2 விமர்சனம் | Meesaya Murukku 2 Review
மீசைய முறுக்கு 2 விமர்சனம் | Meesaya Murukku 2 Review

காமெடி ஆர்கெஸ்ட்ராவுக்குப் பொறுப்பேற்றிருக்கும் ஹர்ஷத் கான், விஜய் வரதராஜ், யோகி பாபு ஆகியோர் கலகலப்பூட்டுகிறார்கள். இது சில இடங்களில் டப்பாசு! ஆனால், பெரும்பாலான இடங்களில் டிம்மு டிப்பு மட்டுமே அடிக்கிறது. பாசத்தோடு கலகலப்பையும் கலந்துவிட்ட கதாபாத்திரங்களில் வரும் பாபா பாஸ்கர் மற்றும் கருணாஸ், குறைவில்லாத நடிப்பைத் தந்து கெலிக்கிறார்கள். இவர்களைத் தாண்டி நாசர், கருணாகரன், பகவதி பெருமாள், ஷா ரா ஆகியோர் வருகிறார்கள், அவ்வளவே! இதனைத் தாண்டி சில இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் முகங்கள், சர்ப்ரைஸ் கதாபாத்திரங்கள் அட்டெண்டன்ஸ் போடுகிறார்கள்.

கலர்ஃபுல் விஷூவல்களைத் தந்து ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம் இதைக் கலகல படமாகக் கொண்டு சென்றிருக்கிறார். அத்தோடு சில பீரியட் காட்சிகளிலும் நல்லதொரு பணியைச் செய்திருக்கிறார். முதல் அரை மணி நேரத்திலேயே கதையைச் சொல்லிவிடுகிறது படம். ஆனால், அதன் பிறகு அந்த ஏரியா பக்கமே செல்லாமல் காமெடி, எமோஷனல் என நெடுநேரம் ஹெவி டிராஃபிக்கில் சிக்க வைத்துக் கூட்டிச் சென்றிருக்கிறார்கள் படத்தொகுப்பாளர்கள் ஃபென்னி ஆலிவர் மற்றும் திருமலை ராஜன்.

மீசைய முறுக்கு 2 விமர்சனம் | Meesaya Murukku 2 Review
மீசைய முறுக்கு 2 விமர்சனம் | Meesaya Murukku 2 Review

ஆரா 10/10, கோயிந்தம்மா, பப்பாளி பழமே, அடி போடி, போடா படிச்சிருக்கேன் என ஹிப்ஹாப் தமிழா பிளேலிஸ்ட், முழுமையான வைப்! வலுவான காட்சிகள் இல்லாததால், பின்னணி இசையில் எமோஷனல் ஸ்கோர் பலமாக இருந்தும் வெளிச்சம் கிடைக்காமல் போயிருக்கிறது.

சுயாதீன இசைக்கலைஞனாக வேண்டும் எனக் கனவு கொண்டிருக்கும் `ஜென் சி கதாநாயகன் ஜீவா, அவருடைய வாய்ப்புக்குத் தடையாக வரும் நெப்போடிசம், அத்துறை சார்ந்த அரசியல் தலையீடுகள், ஜீவாவின் கனவுக்குப் பக்கபலமாக இருக்கும் கடந்த தலைமுறைகளின் இசைக்கலைஞர்கள் ஆகிய சேப்டர்களை வைத்து இந்த `மீசைய முறுக்கு 2-வைக் கொண்டு போயிருக்கிறார் இயக்குநர் ஹிப் ஹாப் தமிழா.

70-களில் கானா பாடல்கள் மீதிருந்த பார்வை குறித்துப் படத்தின் முதல் சில நிமிடங்கள் பேசுகின்றன. அவை சுவாரஸ்யத்துடன் நகர்வதால் நம் கவனத்தை முறுக்கிவிடுகிறது. அக்காட்சிகள் சில நிமிடங்களில் முடிவுக்கு வர, 2026-ல் சுயாதீன இசைக்கலைஞராக நினைக்கும் கதாநாயகனின் பயணத்திற்குப் படம் நகர்கிறது. ஆனால், அங்கே அவர் வாய்ப்புகளுக்கு எப்படி முயல்கிறார் என்பதைப் பற்றிய விவரிப்பு தராமல், அவருக்கு இசை மீதிருக்கும் ஆர்வத்தை மட்டும் சொல்லிவிட்டு டேக் டைவர்ஷன் எடுக்கிறது திரைக்கதை.

மீசைய முறுக்கு 2 விமர்சனம் | Meesaya Murukku 2 Review
மீசைய முறுக்கு 2 விமர்சனம் | Meesaya Murukku 2 Review

பிறகு காமெடி, காதல் எனக் கதைக்கு வெகு தொலைவிலிருக்கும் விஷயங்களுக்கு அதிக கவனம் தந்திருப்பது பேஜாரு! ஒரு சில காமெடிகள் மட்டும் நம்மைச் சோர்வடைய விடாமல் கைகொடுக்கின்றன. இப்படியாகவே பாடல், காமெடி, காதல் என ஒரு வழியாகப் படம் இடைவேளை வரை செல்கிறது. மீசைய முறுக்கு முதல் பாதியின் ரெஃபரன்ஸ்கள் உள்ளிட்ட சில விஷயங்கள் இடைவேளைக் காட்சியைக் கொஞ்சம் தியேட்டர் வைப்பிற்கு மாற்றுகின்றன.

அதற்குப் பிறகு கதையின் மையத்திற்குத் திரும்பும் இரண்டாம் பாதி, எமோஷனல் வாத்தியங்களை இசைக்கத் தொடங்குகிறது. நாயகனின் கனவை நோக்கி நகரும் போராட்டத்தைச் சொல்லும் காட்சிகள் தேவையான எமோஷனல் மீட்டரைப் பிடிக்கின்றன. இந்த இடங்களில் சுயாதீன இசைத்துறையில் நிறைந்திருக்கும் அரசியலை நோக்கியும் படம் கேள்வி எழுப்புகிறது. ஆனால், இங்கே குடும்பப் பிரச்னையைப் பேசுவதா, சமூகப் பிரச்னையைப் பேசுவதா எனக் குழம்புகிறது திரைக்கதை. அதேபோல, தன்பாலின ஈர்ப்பாளர்களைக் கேலி செய்யும் விதமாகப் பாடலையும், காட்சிகளையும் இணைத்திருப்பது வெரி ராங் ப்ரோ! பிறகு, இதனைச் சமாளிப்பதற்குச் சில வசனங்களைச் சேர்த்தாலும் இது நியாயமில்லையே சார்!

மீசைய முறுக்கு 2 விமர்சனம் | Meesaya Murukku 2 Review
மீசைய முறுக்கு 2 விமர்சனம் | Meesaya Murukku 2 Review
ஓரிரு இடங்களில் க்ளாப்ஸ் வாங்கினாலும், நமக்குத் தெரிந்த இக்கதையைக் கொஞ்சம் தெரியாத ரூட்டில் சொல்லியிருந்தால் `மீசைய முறுக்கு 2 நிச்சயம் ஒரு ரவுண்டு வந்திருக்கும்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.