இதுவரை உலகில் யாருமே செய்யாத சாதனை.. ஸ்மிருதி மந்தனாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் புதிய வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். ஜப்பானின் நகாயோவில் நடைபெற்று வரும் 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில், தங்கப்பதக்கத்துக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் இலங்கையும் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் தொடக்க வீராங்கனையாகக் களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா வழக்கம் போல அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இப்போட்டியில் 13 ரன்களைக் கடந்தபோது, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 11,000 ரன்களைக் கடந்த உலகின் முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்தார். இந்த இறுதிப்போட்டியில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர், 45 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் உள்பட 79 ரன்களைக் குவித்து அசத்தினார்.
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 30 வயதான ஸ்மிருதி மந்தனா, கடந்த 2013 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை அவர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என அனைத்திலும் சேர்த்து மொத்தம் 11,066 ரன்களுக்கு மேல் குவித்து இந்தச் சாதனையை எட்டியுள்ளார்.
இதற்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் 10,868 ரன்களுடன் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது ஸ்மிருதி மந்தனா அந்தச் சாதனையை முறியடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவரின் இந்த வரலாற்றுச் சாதனைக்குத் கிரிக்கெட் உலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


