ஈரான்: பதற்றத்தை ஏற்படுத்திய மர்ம ஒளி; வானில் பறந்தது ஏலியன் UFO விண்கலமா? உண்மை என்ன..?

செப்டம்பர் 20, 2026 அன்று ஈரானின் தலைநகரான டெஹ்ரானின் இரவு வானில் பல வண்ணங்களில் மின்னியபடி பறந்த ஒரு மர்மப் பொருள் தொடர்பான வீடியோக்கள் X உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி, உலகம் முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

அந்தப் பொருளில் இருந்து சிவப்பு, பச்சை, நீலம் என பல வண்ணங்களிலான எல்.இ.டி விளக்குகள் விட்டு விட்டு எரிந்தபடி இருந்தன. அந்த வீடியோக்களில், அப்பொருளின் சரியான அளவு, அது பறந்த வேகம் அல்லது பூமிக்கும் அதற்குமான தூரம் போன்றவற்றை துல்லியமாக கணிக்க முடியவில்லை.

Iran

சாதாரண ஒரு வீடியோ உலகளவில் இவ்வளவு பெரிய செய்தியாக மாற இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.

1. போர் பதற்றம்

தற்போது ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே பெரும் போர் பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்கப் படைகள் மீது ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ள இந்த சூழ்நிலையில், வானில் ஒரு மர்மப் பொருள் தென்பட்டது மக்களிடையே பீதியையும், இது ஏதேனும் நவீன ஆயுதமாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

2. 50 ஆண்டு கால மர்மத்தின் தொடர்ச்சி

சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு, செப்டம்பர் 19, 1976 அன்றும் இதே டெஹ்ரான் வானில் ஒரு மிகப்பெரிய மர்மப் பொருள் (UFO) தென்பட்டது. அதனை இடைமறித்து அழிக்க ஈரானின் F-4 போர் விமானங்கள் அனுப்பப்பட்டன. உலக UFO வரலாற்றில் மிகவும் பிரபலமான அந்தச் சம்பவம் நடந்து சரியாக 50 ஆண்டுகள் நிறைவடையும் அதே வாரத்தில் மீண்டும் இப்படி ஒரு வெளிச்சம் தோன்றியதுதான் விவாதங்களைச் சூடாக்கியுள்ளது.

இந்த மர்மப் பொருள் குறித்து இணையவாசிகளும், நிபுணர்களும் பல காரணங்களை முன்வைக்கின்றனர்.

  • இது ஒரு நவீன ராணுவ உளவு ட்ரோனாகவோ அல்லது பல ட்ரோன்கள் ஒன்றாக இணைந்து பறக்கும் அமைப்பாகவோ இருக்கலாம்.

  • இரவில் பறக்கவிடப்படும் அதிநவீன எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்ட சாதாரண பட்டமாகக்கூட இது இருக்கலாம் எனவும் சிலர் கூறுகின்றனர்.

  • இரவு நேரத்தில் மிகத் தொலைவில் செல்லும் விமானங்களை செல்போன் கேமராவில் ஜூம் செய்து எடுக்கும்போது, ஒளியின் சிதறலால் அது மங்கலாகவும், மர்மப் பொருள் போலவும் தோற்றமளித்திருக்கலாம்.

  • பலரும் இதை UFO என்று அழைக்கின்றனர். UFO என்றால் உடனே ஏலியன்கள் வருகிறார்கள் என்று அர்த்தமல்ல; வானில் பறக்கும் ஒரு பொருளை இன்னதென்று அடையாளப்படுத்த முடியாவிட்டால் அது UFO (Unidentified Flying Object) என்று அழைக்கப்படும்.

ஈரான் UFO
Aliens

இப்படிப் பல காரணங்களை பலரும் சொன்னாலும் இதுவரை ஈரானிய விமானப் போக்குவரத்துத் துறையோ அல்லது ராணுவமோ, இந்தப் பொருளை அடையாளம் காணவோ அல்லது இதை ஒரு அச்சுறுத்தலாகவோ அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. வீடியோவின் நம்பகத்தன்மையும் இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை.

தற்போதைய போர்ச் சூழலையும், தொழில்நுட்ப வளர்ச்சியையும் வைத்துப் பார்க்கும்போது, இது வேற்று கிரகவாசிகளின் விண்கலமாக இருக்க வாய்ப்பில்லை. மாறாக, இது ஒரு ராணுவ ட்ரோனாகவோ அல்லது சாதாரண தொழில்நுட்பமாகவோ இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. எனினும், அதிகாரபூர்வ விளக்கங்கள் வெளிவரும் வரை, இந்த `டெஹ்ரான் மர்ம விளக்குகள்’ இணையத்தில் ஒரு சுவாரஸ்யமான விவாதப் பொருளாகவே தொடரும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.