சென்னை: போக்சோ வழக்கில் சிக்கிய போலீஸ் எஸ்.ஐ கொலை - ஆண் நண்பருடன் மனைவி சிக்கிய `அதிர்ச்சி பின்னணி!
சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில் வசித்து வந்தவர் ராஜ் (58), இவர் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் எஸ்.ஐ-யாகப் பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் கருகிய நிலையில் உயிரிழந்து கிடந்தார் ராஜ். அவர் தற்கொலை செய்து கொண்டதாக ராஜின் மனைவி செல்வராணி கதறி துடித்தார். இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீஸார், ராஜின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் ராஜ், தூக்க மாத்திரைகளை சாப்பிட்டிருப்பதும் அவரின் கழுத்து நெரிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் சந்தேகமடைந்த நுங்கம்பாக்கம் போலீஸார், செல்வராணியிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். அதனால் செல்வராணியின் மீது போலீஸாரின் சந்தேகப்பார்வை விழுந்தது.
இதையடுத்து செல்வராணியின் வீடு அமைந்துள்ள பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமராக்களையும் அவரின் செல்போன் அழைப்புகளையும் போலீஸார் ஆய்வுக்குட்படுத்தினர். அப்போது சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு இளைஞர் ஒருவர், போலீஸ் எஸ்.ஐ வீட்டுக்கு வந்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அந்த இளைஞருடன் செல்வராணி அடிக்கடி போனில் பேசியதும் தெரியவந்தது. அந்த இளைஞர் குறித்து என்று போலீஸார் விசாரித்தபோது அவர் செல்வராணியின் ஆண் நண்பர் தேவநாதன் என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து தேவநாதனைப் பிடித்து போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீஸார் கூறுகையில், ``போலீஸ் எஸ்.ஐ ராஜை அவரின் மனைவி செல்வராணியும் செல்வராணியின் ஆண் நண்பர் தேவநாதனும் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்திருப்பது எங்களின் விசாரணையில் தெரியவந்தது. கொலை குறித்து செல்வராணியிடம் விசாரித்தபோது தனக்கும் கணவர் ராஜிக்கும் 26 வயது வித்தியாசம். இதுதான் இந்தக் கொலைக்கு முக்கிய காரணம் என்று கூறினார். மேலும் செல்வராணி கூறிய இன்னொரு தகவல் எங்களை அதிர்ச்சியடைய வைத்தது. அதுதொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகிறோம்என்றனர்.

இந்த வழக்கு குறித்து விசாரணை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ``கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்.ஐ ராஜ், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் 1992-ல் காவலராகப் பணியில் சேர்ந்தார். தற்போது சென்னை மாநகர ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் எஸ்.ஐ.யாகப் பணியாற்றி வந்தார். இவரின் மனைவி செல்வராணி. இவருக்கு ஏற்கெனவே வேறு ஒருவருடன் திருமணமாகி அவரைப் பிரிந்து ஒரு குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வந்தார். செல்வராணியை திருமணம் செய்து கொண்ட போலீஸ் எஸ்.ஐ ராஜ், அவரோடு சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. இந்தநிலையில் செல்வராணி, வழக்கறிஞருக்குப் படிக்க ஆசைப்பட்டதால், அவரை திருமணத்துக்குப் பிறகு ராஜ் படிக்க வைத்தார். இந்தச் சமயத்தில்தான் ராஜிக்கும் செல்வராணிக்கும் வயது வித்தியாசம் காரணமாக தாம்பத்யம் தொடர்பாக சில பிரச்னைகள் ஏற்பட்டிருக்கின்றன.
இந்தச் சூழலில் செல்வராணிக்கும் அவர் குடியிருந்த வீட்டின் அருகே வசித்த கடலூர் மாவட்டம், திருவந்திபுரத்தைச் சேர்ந்த தேவநாதன் என்பவருக்கும் திருமணத்தை மீறிய நட்பு ஏற்பட்டிருக்கிறது. அதை போலீஸ் எஸ்.ஐ ராஜ், கண்டித்திருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த செல்வராணியும் தேவநாதனும் சேர்ந்து போலீஸ் எஸ்.ஐ-ராஜை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்தச் சமயத்தில்தான் போலீஸ் எஸ்.ஐ ராஜ் மீது பக்கத்து வீட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த குற்றச்சாட்டில் ஆயிரம் விளக்கும் அனைத்து மகளிர் போலீஸார், போக்சோ வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அந்த வழக்கால் ராஜ், கடும் மனஉளைச்சலுக்குள்ளானார். அதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள செல்வராணியும் தேவநாதனும் திட்டமிட்டனர். ராஜை கொலை செய்து விட்டு அவர் மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிவிடலாம் எனவும் இருவரும் பிளான் போட்டிருக்கிறார்கள். இதற்காக ராஜை கொலை செய்ய தூக்க மாத்திரைகளை சாப்பாட்டிலும் காபியிலும் கலந்து கொடுத்திருக்கிறார் செல்வராணி. ஆனால் அந்த உணவையும் காபியையும் கசப்பாக இருப்பதாகக் கூறி ராஜ் சாப்பிடவில்லை.

அதனால் அவரைக் கொலை செய்ய முடியவில்லை. சம்பவத்தன்று செல்வராணி, பாகற்காய் குழம்பு வைத்திருக்கிறார். அதில், தூக்க மாத்திரைகளைக் கலந்து ராஜிக்கு கொடுத்திருக்கிறார். பாகற்காய் கசப்பாக இருக்கும் என்பதால் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு தூங்க சென்றுவிட்டார் ராஜ். அதன்பிறகு தேவநாதனுக்கு போன் செய்த செல்வராணி, பெட்ரோல் வாங்கிக் கொண்டு வரும்படி கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து தேவநாதனும் பெட்ரோலை செல்வராணியிடம் கொடுத்திருக்கிறார். தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டதால் அயர்ந்து துங்கிய ராஜ் மீது பெட்ரோலை ஊற்றி தீயை வைத்து உயிரோடு எரித்திருக்கிறார்கள். பின்னர் ராஜ், தற்கொலை செய்து கொண்டதாக செல்வராணி அழுது நாடகமாடியிருக்கிறார். ஆனால் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் உண்மை தெரிந்ததால் செல்வராணியையும் அவருக்கு உதவிய தேவநாதனையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம். அதே நேரத்தில் இந்தத் தம்பதியினரின் மூன்று குழந்தைகளும் ஆதரவின்றி நிற்கிறார்கள் என்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


