சிலிண்டர் கிடைக்காமல் சிரமப்பட்ட கோவை ரூ.1 இட்லி பாட்டி; உதவிக்கரம் நீட்டிய அமைச்சர் சம்பத்

கோவை மாவட்டம் வடிவேலம்பாளையம் பகுதியில் ஏழை, எளிய தொழிலாளர்களின் பசி தீர்க்கும் வகையில் பல ஆண்டுகளாக வெறும் 1 ரூபாய்க்கு கமலாத்தாள் பாட்டி இட்லி வழங்கி வருகிறார்.

பாட்டியின் இந்தச் சேவைக்காக தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வந்த இலவச சமையல் எரிவாயு உருளைகள் தற்போது சரியாகக் கிடைக்காமல் இருந்து வந்தது. இதனால் பாட்டி விறகுகளைச் சேகரித்தும், வீட்டிலுள்ள சிறிய அடுப்பைப் பயன்படுத்தியும் இட்லி சுட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

விறகு அடுப்பின் கடும் வெப்பத்திலும், புகைக்கும் நடுவே நின்று குறைந்த அளவிலான இட்லிகளையே சுடும் கமலாத்தாள் பாட்டியயின் உடல் உழைப்பும், அதற்காகச் செலவிடும் நேரமும் இரட்டிப்பாகியது.

இருப்பினும் முதுமை மற்றும் உடல்நலக் குறைவு உள்ளிட்ட பிரச்னைகளைத் தாண்டி, ஒரு ரூபாய்க்கு இட்லி தருவதை நிறுத்தி விடாமல் தொடர்ந்து வந்தார்.

கமலாத்தாள்

இதனிடையே தொடர்ந்து கியாஸ் சிலிண்டர் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கமலாத்தாள் பாட்டி கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமாரிடம் மனு அளித்தார்.

இது குறித்து கமலாத்தாள் பாட்டி கூறியதாவது, ”ஐம்பது வருசமா இட்லி சுடுறேன். எப்பவும் என் இட்லி ஒரு ரூபாய்தான். இந்த 2 மாசமா சிலிண்டர் கிடைக்காம தட்டுப்பாட இருக்கு. இதனால இட்லி சரியா சுட முடியல. கடைக்கு வரவங்க ஏன் இட்லி சுடுவதில்லை பாட்டினு கேட்குறாங்க.

கேஸ் இல்ல சாமினு நான் சொல்லிட்டு இருக்கேன். காசு இருக்குறவங்க வேற கடைக்குப் போயி சாப்பிடுவாங்க. காசு இல்லாத ரொம்ப ஏழைக எப்படிச் சாப்பிடுவாங்க? பசியோடு வரவங்களை வெறும் வயிற்றோடு அனுப்பறது கஷ்டமா இருக்கு.

கேஸ் ஆயிரத்து நூறு ரூபாக்கு விக்குது. அதை வாங்கி இட்லி சுட்டு ஒரு ரூபாய்க்குத் தர முடியுமா? இருந்தாலும் என்னால முடிந்தளவு இட்லி சுட்டு தரேன். எனக்கு தந்திட்டு இருந்த கேஸ் மீண்டும் கிடைச்சா நல்லாயிருக்கும்” என்றார்.

கமலாத்தாள்
கமலாத்தாள்

இந்தக் காட்சிகள் வைரலான நிலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் அறிவுறுத்தலின்பேரில், ஒரு ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாளுக்கு இன்று முதல் தடையின்றி கட்டணமில்லா சிலிண்டர் வழங்க மாவட்ட ஆட்சியர் பவன்குமார் உத்தரவிட்டுள்ளார். இது கமலாத்தாள் பாட்டிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.