BB Tamil 10: மிருகத்தனத்தை வெளிப்படுத்தியது யார்? மணிவண்ணன் எலிமினேஷன் - இது சரியா பாஸ்? | 2nd Week
காமன்மேன் சுற்றில் தகுதி பெற்று பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த மணிவண்ணன் இந்த வாரம் வெளியேற்றப்பட்டிருக்கிறார். சில இடங்களில் இடக்காக பேசி மாட்டிக் கொண்டாலும் வீட்டின் கலகலப்பிற்கு காரணமாக இருந்தவர் மணிவண்ணன். ஜனநாயக அறையிலும் எதிரணி ஆட்களை கேள்வி கேட்டு கதி கலங்க வைத்தவர்.
மிக்சர் பார்ட்டிகள் வெளியேறாமல் சர்வைவ் ஆவதும், சற்று செயலாக இருக்கும் போட்டியாளர்கள் வெளியேறுவதும் பிக் பாஸ் வீட்டின் வழக்கமான விஷயம்தானே?
இரண்டாவது வாரத்தில் என்ன நடந்தது?
“நான் உங்களை சண்டை போடச் சொல்ல. ஆனா ஒருத்தரையொருத்தர் சேலன்ஜ் பண்ணுங்க’ என்று கடந்த வாரத்தின் இறுதியில் விசே கொளுத்திப் போட்டு விட்டுச் சென்றார். “அப்படியா.. இனிமே பாருங்க” என்று உக்கிரம் வரவழைத்துக் கொண்ட மோடில் போட்டியாளர்கள் மாறினார்கள்.
பத்தாவது சீசனுக்கும் கேப்டன் பதவிக்கும் ராசியே இல்லை. ஆட்சிக் கவிழ்ப்புகள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. ஆளும் அணியில் உள்ளவர்களே தலைவருக்கு உற்சாகமாக ஆப்பு வைக்கிறார்கள். நாற்காலியின் கீழ் வெடிகுண்டு வைக்கிறார்கள்.
இந்த வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் முனியம்மாள். ‘நீ லீடர் பதவிக்கு லாயக்கே இல்லை” என்று ஷாதிகாவையும், ஷமாவையும் முதலில் விமர்சித்தவர் இவர்தான். அடாவடித்தனம், துடுக்குத்தனம் போன்றவைகளை தாண்டி முனியம்மாளின் வெள்ளந்தித்தனமான பேச்சும் குறும்பும் கவர்கிறது. வெளியே வெள்ளந்தி என்றாலும் உள்ளுக்குள் அபாயகரமான புத்திசாலி.
முனியம்மாள் ஒருவேளை நிஜமான சட்டசபைக்குச் சென்றால் என்னவாகும்? அவர் பேசிய அனைத்தும் ‘அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும்’.
அடாவடி பட்டம் அன்சருக்கா அல்லது ஆனந்திக்கா?
இந்தச் சமயத்தில்தான் ஆனந்தியின் என்ட்ரி. ‘வைல்ட் கார்டில் உள்ளே வருபவர்கள், ஆரம்பத்தில் ஃபயராக இருப்பதும், சிறிது நாட்களிலேயே தீய்ஞ்சு போன ஒயராக மாறி விடுவதும் உலக வழக்கந்தானே? ‘ஒரு நாள் முதல்வன்’ என்று அர்ஜூன் ரேஞ்சிற்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட வினோத்திடம் “நீங்க அவ்ளோ ஒண்ணும் வொர்த் இல்ல” என்று அதிரடியாக நோஸ் கட் செய்தார் ஆனந்தி.
“நீ ஓவர்லாப் பண்ணி பேசறடா.. அதனால நீ பேசறது வெளில தெரியல” என்று லட்சுமி பிரியாவையும் போகிற போக்கில் ஓர் உதை விட்டார் ஆனந்தி. காண்டான லட்சுமி பிரியா, தனது பரம வைரியாக ஆனந்தியை அப்போதில் இருந்தே பாவிக்க ஆரம்பித்து விட்டார்.
“லூஸூ.. இது வந்து நமக்கு அட்வைஸ் பண்ணுது” என்று அனத்திய லட்சுமிபிரியாவிடம் “புதுசா வந்திருக்காங்கள்ல.. எஸ்டாபிளிஷ் பண்ண டிரை பண்ணுவாங்க. நீ ஃப்ரீயா விடு” என்று ராகவ் கூலாக சொன்ன அட்வைஸ் நிஜம். குறைவாக பேசினாலும் சரியாக பேசுகிறார் ராகவ்.

கிச்சன் ஏரியா என்பது எப்போதுமே சண்டைகளுக்கான விதைகளை உற்பத்தி செய்கிற இடம். இதில் ஆனந்தியும் வந்து இணைந்த போது எளிதாக பற்றிக் கொண்டது. அடுப்பு எரிகிறதோ இல்லையோ, அந்த ஏரியாவில் இருந்து புகைச்சல் வந்து கொண்டே இருந்தது. அன்சர் வைத்திருக்கும் ‘அடாவடி’ என்கிற அடைமொழியை ஆனந்திக்கு தானம் தந்து விடலாம். அந்த அளவிற்கு தனது செயல்களாலும் உடல்மொழியாலும், கிச்சன் டீம் மேட்களான லட்சுமிபிரியாவையும் முத்தழகியையும் இடது கையால் கையாண்டார் ஆனந்தி.
உன் சமையல் அறையில், நான் உப்பா சர்க்கரையா?
லட்சுமிபிரியாவும் முத்தழகியும் நட்பாகி ஒரு கூட்டணியில் இருக்கிறார்கள். எனவே ஆனந்தியின் அலப்பறைகள் அவர்களுக்கு எரிச்சலைத் தந்தன. இது லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் அப்பட்டமாக எதிரொலித்தது. “பட்டு.. சேமியா.. பத்து பாக்கெட் எழுது.. செல்லம்… கோதுமை ரெண்டு பாக்கெட் எழுது’ என்று மருமகளுக்கு குறிப்பு தரும் மாமியார் பாணியில் அவசரம் அவசரமாக அடுக்கிக் கொண்டே சென்றார் ஆனந்தி. முத்தழகிக்கும் ஆனந்திக்கும் சிங்க் ஆகவேயில்லை. ஆனந்தி ‘பட்டு.. பட்டு’ என்று எரிச்சலை அடக்கிக் கொண்டு அழைப்பதெல்லாம் பட் பட்டென்று தலையில் அடிப்பது போலவே இருந்தது.
இந்த டாஸ்க்கை திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்த சக போட்டியாளர்கள் ‘உப்பும் சர்க்கரையும் கிடைக்குமா, இல்லை… இந்த வாரமும் பத்திய சாப்பாடுதானா?” என்று பயந்தபடி அமர்ந்திருந்தார்கள். ஆனால் ஆனந்தியின் பதட்டத்தை இவர்கள் சிரித்தபடி வேடிக்கை பார்த்தது ரசிக்கத்தக்கதாக இல்லை. ஏனெனில் உணவு என்பது அனைவரும் சம்பந்தப்பட்ட விஷயம். “கொடுத்த பாயிண்ட்டுக்குள்ள எல்லா பொருளையும் எடுத்துட்டேன்ல. கைத்தட்டுங்கடா வென்றுகளா” என்றபடி ஆனந்தி நடந்து சென்றது மாஸான காட்சி.
எப்படியோ ஆனந்தி வந்தனின் மூலம் புதிய கலகங்கள் ஆரம்பித்திருக்கின்றன. அதுவரை ஃபோகஸில் இருந்த முனியம்மாள் கூட பின்னால் சென்று விட்டார்.

வீட்டின் தலைவருக்கான போட்டியில் அன்சரும் ஷமாவும் மோதியதில் ஷமா வெற்றி பெற்றது நல்ல விஷயம். வீட்டின் இரண்டாவது பெண் தலைவர். காமன்மேன் ஆடிஷன் சுற்றில் பார்த்த போது ஷமா மெயின் ஆட்டத்திற்கு வருவாரா என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் உள்ளே வந்த பின் தன் திறமையை நிரூபித்து வருகிறார் ஷமா. ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தில் அவரது இமேஜ் நொறுங்கி விட்டதை பிறகு பார்ப்போம்.
பெண்களுக்குள் ஒரு புகைச்சல் ஏற்பட்டால் அதை அவர்கள் மூலிகை பெட்ரோல் ஊற்றி நாளுக்கு நாள் வளர்த்துக் கொண்டே செல்கிறார்கள். லட்சுமிபிரியாவிற்கும் ஆனந்திற்குமான பகை அப்படித்தான் பயணிக்கிறது. ஆனால் ஆண்கள் டீமில் ஏதாவது உரசல் நிகழ்ந்தால் அடுத்த நிமிடமே இலகுவாக அணைந்து விடுகிறது.
ஜேசன் தந்த ரிவ்யூ ஸ்டார் சரியல்ல என்பதை உணர்த்தும் விதமாக ‘பைத்தியக்காரன்’ என்று வார்த்தையை விட்டு விட்டார் பிருத்வி. ‘யாரை பைத்தியக்காரன்னு சொல்ற’ என்று மோதுவது போல் வந்து கேட்டார் ஜேசன். அக்னி நட்சத்திரம் படத்தின் ‘கார்த்திக் - பிரபு’ போல இருவருக்கும் உக்கிரமான சண்டை நடக்கும் என்று தோன்றியது. ஆனால் அப்படி ஆகவில்லை. ‘ஸாரி’ என்று பிருத்வி சொல்ல, அடுத்த நிமிடமே ஜேசனும் கைகுலுக்கி அணைத்துச் சென்றார். (இந்த மாதிரி நடந்தா நான் எப்படிய்யா ஃபுட்டேஜ் தேத்தறது?” -பிக் பாஸின் மைண்ட்வாய்ஸ்)
ஜேசனுக்கும் ஷமாவிற்கும் இடையே நடக்கும் போர்
அம்மையப்பனை சுற்றி வந்து ஞானப்பழம் வாங்கிய விநாயகரைப் போல, Knockout டாஸ்க்கில் மற்றவர்களிடம் டீல் பேசியே இறுதி வரை வந்து எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் வாங்கி விட்டார் முகேஷ். ‘எனக்கு வாந்தி வர்ற மாதிரி இருக்கு’ என்று நைசாக வெளியே வந்து காயினை ஒட்டி தனது எதிரியின் புகைப்படத்தை கிழித்தெறிந்தார் லட்சுமிபிரியா. (இந்த நடிப்பையெல்லாம் சீரியல்ல காட்டியிருக்கலாமே?!) ஒரு மாதிரியான விஷபாட்டிலாக இருக்கிறார் LP.
‘ஒரு கதை சொல்லட்டுமா?’ டாஸ்க், வலுக்கட்டாயமான உருக்கத்துடன் கூடிய ஃபிளாஷ்பேக்கை சொல்வதாக இருந்தாலும் போட்டியாளர்களின் இன்னொரு பக்க பரிமாணங்கள் தென்பட்டன. ஜேசன் சொன்ன கதை உணர்ச்சிகரமாக இருந்தாலும் வேண்டுமென்றே லிவரை இழுத்து வம்பிழுத்தார் ஷமா. இருவருக்குள்ளும் ஒரு அறிவிக்கப்படாத போர் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. எனவே டாஸ்க் முடிந்ததும் இருவருக்கும் மோதல் நிகழ்ந்தது.

“நீ மத்தவங்களை டிரிக்கர் பண்ற மாதிரி பேசற” என்று ஆனந்தியிடம் நேரடியாக விமர்சனம் வைத்த ராகவ்வின் நேர்மை நன்று. ஆனால் அதை எதிர்பார்க்காத ஆனந்தி, கண்கலங்கியபடி செல்ல ‘என்ன கொடுமை சரவணன்’ என்று நொந்து போனார் ராகவ். ஒரு பக்கம் அடாவடிகளையும் செய்து கொண்டு, இன்னொரு பக்கம் தன் மேல் வரும் சிறுவிமர்சனத்தையும் தாங்க முடியாத குணாதிசயத்தைக் கொண்டிருக்கிறார் ஆனந்தி. அவர் மட்டுமல்ல, ஏறத்தாழ மனிதர்களே இப்படித்தான் இருக்கிறார்கள். தனக்கு வந்தால் மட்டுமே ரத்தம்.
வின்னர் படத்தில் வடிவேலு, வீட்டின் மேற்கூரையில் உள்ள துளையின் வழியாக தலையை நுழைத்து எட்டிப் பார்த்து ‘என்னா … தம்பி… எங்க போறே?” என்று பிரசாந்தை விசாரிப்பது போல Cheese House Task என்றொரு டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். பொம்மை டாஸ்க் போல இரண்டாவது வாரத்திலேயே இத்தனை உக்கிரமான ஆட்டத்தை ஆரம்பித்து ஷோவை எப்படியாவது பிக்அப் செய்ய வைக்கும் முயற்சியில் இருக்கிறார்கள் போல.
இதில் பிரதானமாக இரண்டு விஷயங்கள் நடந்தன. ஏற்கெனவே எலியும் புலியுமாக இருக்கிற ஷமாவிற்கும் ஜேசனுக்கும் இடையில் பெரிய மோதல் வந்தது. துளைக்குள் நுழைந்திருக்கிற ஜேசனின் கால்களைப் பிடித்து ஷமா இழுக்க, மௌனமாக வெளியே வந்த ஜேசன், பிறகு மூர்க்கமாக செயல்பட்டு ஷமாவை வலுக்கட்டாயமாக இழுக்க, Cheese உருகி இரண்டாக பிளந்து வந்தது. (சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா படுபாவிப்பசங்களா?!).
அப்படியும் ஆவேசம் அடங்காமல், பள்ளிக்கு செல்ல மறுத்து அடம் செய்யும் குழந்தையை தூக்கிச் செல்வதைப் போல ஒற்றைக்கையால் ஷமாவை தூக்கிக் கொண்டு வெளியே வந்தார் ஜேசன். மற்ற பெண்களாக இருந்தால் அழுது ஊரைக் கூட்டியிருப்பார்கள். ஆனா ஷமா இதை ஸ்போர்டிவ்வாக எதிர்கொண்டார்.
லட்சுமிபிரியாவிற்கும் ஆனந்திக்கும் இடையில் பனிப்போர்
இரண்டாவது சம்பவம். LP vs ஆனந்தி. LP யாரையோ பிடித்து இழுக்க முயன்று பச்சைக்குதிரை மாதிரி குனிய, கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரின் கழுத்தில் காலை வைத்து ஏற முயன்றார் ஆனந்தி. நல்ல வேளையாக LP-க்கு ஒன்றும் ஆகவில்லை.
இன்னொரு சமயத்தில், மேலே தொங்கிக் கொண்டிருந்த ஆனந்தியின் கால்களைப் பிடித்து LP இழுக்க, பொதோ் என்று கீழே விழுந்தார் ஆனந்தி. “காலைப் பிடிச்சு இழுத்தா கீழே விழுவாங்கன்னு எனக்குத் தெரியாது” என்று கடைசி வரை சாதித்தார் LP. ஆக இரண்டும் ஒன்றுக்கொன்று சளைக்காத விஷபாட்டில்களாக இருக்கின்றன. இந்த லட்சணத்தில் “எனக்கு அடிபட்ட போது எல்லோரும் வந்து விசாரிச்சாங்க. நீங்க ஏன் வரலை?” என்று பிராது வேறு தந்து கொண்டிருந்தார் ஆனந்தி. இந்த சீஸ் டாஸ்க்கில் பிருத்வி வெற்றி பெற்றார்.
அடுத்த நாளில் மைக் மாட்டாத முனியம்மாளுக்கு மீசை வரைந்து கொள்ள வேண்டும் என்கிற சுவாரசியமான தண்டனையை தந்தார் லீடர் ஷமா. முதலில் தயங்கினாலும் பிறகு ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டு ஆண் வேடமிட்டு ‘hi dude.. என்னடா மச்சான்’ என்கிற ரேஞ்சிற்கு முனியம்மாள் செய்த அலப்பறைகள் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருந்தன. இவர் என்னதான அராஜகம் செய்தாலும், வெள்ளந்திச் சிரிப்புடன் பேசி மழுப்பி விடுவதால் பார்வையாளர்களின் ஆதரவு பெருகுகிறது. எனவேதான் இவரை எப்படி ஹாண்டில் செய்வது என்று மற்ற போட்டியாளர்கள் தயங்குகிறார்கள்.

எதிரணிக்குத் தாவி அதிர்ச்சி வைத்தியம் தந்த ஆளும் அணி
இந்த நாளின் ஜனநாயக விவாதம் ஆரம்பித்தது. ஆரம்பத்திலேயே எதிரணிக்குத் தாவி அலப்பறையை ஆரம்பித்தார் முனியம்மாள். கழுவாமல் வைக்கப்பட்டு விட்ட ஒரு தட்டுக்காக ஒரு மணி நேரம் விவாதித்தார்கள்.
கிச்சன் டீமில் ஆனந்தி செய்த அலப்பறைகள் விசாரணைக்கு வந்த போது அவர் தலைவர் மீது அதிருப்தியடைந்து எதிரணிக்குத் தாவினார். இப்படியாக ஆளும் அணியும் எதிரணியும் இணைந்து பல தாக்குதல்களை நடத்தினாலும் அசராமல் சமாளித்த ஷமா, ஒரு விஷயத்தில் பயங்கரமாக சொதப்பினார். அவருடைய ஆட்சி கவிழ்வதற்கு அதுவே காரணமாக அமைந்து விட்டது.
Cheese house டாஸ்க்கின் போது தனது தலைவர் பதவியை வைத்து அதிகார துஷ்பிரயோகம் செய்தார் ஷமா. ‘எனக்கு நீ உதவி செய்தால், உன்னை கதை சொல்ல அனுப்பாமல் நாமினேஷனில் இருந்து தப்பிக்க வைப்பேன்’ என்பது மாதிரியான சலுகையை டாஸ்க்கின் போது அவினாஷிடம் கேட்டு விட்டார் ஷமா. அதை ஜாவித் கேள்வி நேரத்தில் சரியாக முன்வைக்க கிடுக்குப் பிடியில் சிக்கிக் கொண்டார் ஷமா.
ஷமாவின் அசட்டுப் பிடிவாதமும் கிடைத்த தோல்வியும்
“லீடருக்கான அட்வான்டேஜ்ஜாக அதைப் பார்த்தேன்” என்று ஷமா மழுப்பினாலும் அது அதிகார துஷ்பிரயோகம் என்பதை கடைசி வரை ஒப்புக் கொள்ளவேயில்லை. ஏற்கெனவே ஷமா மீது பயங்கர காண்டில் இருந்த ஜேசன், ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான வேலையில் இறங்கி பலரிடம் கையெழுத்து சேகரித்தார்.
ஷமாவின் இந்த அடாவடிசெயல் காரணமாக வினோத், சாந்தினி உள்ளிட்டோர்களும் வேறு வழியின்றி எதிரணிக்குச் சென்றார்கள். “நீங்க மன்னிப்பு கேப்பீங்கன்னு பார்த்தேன். அது நடக்கலை” என்று சரியான காரணத்தைச் சொல்லி விட்டு சென்றார் ராகவ்.
ஷமாவின் பதவி பறிபோனதற்கு காரணம், தான் செய்த தவறை ஒப்புக் கொள்ளாத ஈகோதான். கடந்த வாரத்தில் ஷாதிகா முடிவை மாற்றி மாற்றி எடுத்து தடுமாறியதால், தான் அவ்வாறு இருக்கக்கூடாது என்று நினைத்து ஷமா தவறாக அடம்பிடித்து விட்டாரோ, என்னமோ. தலைவராக இருந்தாலும், தான் செய்ததது என்பதை உணர்ந்து விட்டால் அதை நேர்மையாக ஒப்புக் காெள்வதுதான் அறம்.
‘ஒரு தடவ முடிவு பண்ணிட்டா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’ என்கிற பன்ச் டயலாக் எல்லாம் சினிமாவில் மட்டுமே நிகழும் அபத்தம்.

‘ஷமாவின் லீடர்ஷிப்பில் குறைகளே இல்லை’ என்று எதிரணியே பாராட்டும் அளவிற்கு கடுமையாக உழைத்தார் ஷமா. எந்தப் பிரச்சினையென்றாலும் சளைக்காமல் ஓடி ஓடி தீர்த்துக் கொண்டிருந்தார். ஆனால் தன்னுடைய பிழையை கடைசி வரை நேர்மையாக ஒப்புக் கொள்ளாதது பெரிய சறுக்கல்.
“நான் சொன்ன கருத்துகள் நிகழ்ச்சியை பற்றியது மட்டுமே’ - டிபென்ஸிவ் மோடில் விசே
நாள் 12
முனியம்மாள் வெள்ளந்தியாக பேசினாலும் அன்சர் - மணிவண்ணன் ஆகியோருக்கு இடையே இருக்கிற நட்புக்கூட்டணியை சரியாக டீகோட் செய்து அசத்தினார். Leaders Exit List டாஸ்க்கில் குறைந்த வாக்குகள் பெற்று பரிதாபமாக எலிமினேட் ஆனார் ஜாவித்.
“மேடைல எனக்கு பேச 60 செகண்ட் கொடுத்தாங்க. ஆனா 30 செகண்ட்லேயே பேசி முடிச்சிட்டேன்’ என்று ஆரம்பத்தில் தன்னம்பிக்கையாக பேசிய ஜாவித், ஆட்டத்தில் அவ்வளவாக வெளிப்படவேயில்லை.
நாள் 13.
வீக்கெண்ட் பஞ்சாயத்து நாள். “பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி நான் இங்கு பேசிய கருத்துக்கள் அநாவசியமான சர்ச்சைகளை வெளியில் ஏற்படுத்துகின்றன. நான் பேசியது முழுக்க இந்த ஆட்டம் தொடர்பானது மட்டுமே. இதையெல்லாம் நீங்களா புரிஞ்சுப்பீங்கன்னு நெனச்சேன்” என்று ஷோவின் ஆரம்பத்திலேயே disclaimer-உடன் வரவேண்டிய நிலைமை விஜய்சேதுபதிக்கு.
“தேவாங்குன்னு உன்னை அவன் போன மாசம் திட்டினதா சொல்றே. ஆனா இன்னிக்கு வந்து ஏன் அடிச்சே?” என்கிற கேள்விக்கு “நான் நேத்துதான் தேவாங்கு எப்படி இருக்கும்ன்னு பார்த்தேன்’ என்கிற பழைய ஜோக் மாதிரி, ஒரு கேம் ஷோவில் கற்பனையாக உருவாக்கப்பட்ட ஆளும் அணியைப் பற்றிய விமர்சனத்தை, தங்களுடையதாக தாங்களே எடுத்துக் கொண்டு அதைப் பற்றி வசைபாடுவதற்கு முரட்டுத்தனமான கிறுக்குத்தனம் நிறைய இருக்க வேண்டும்.
சிறையிலிருந்து திரும்பிய முனியம்மாள் “பிக் பாஸ்.. இந்த ஜெயில் டிரெஸ்ஸ நானே வெச்சுக்கறேன். திரும்பத் தர மாட்டேன். தேவைப்படும்” என்று சொன்ன நக்கல் வசனம் சுவாரசியமானது. எதிர்ப்பின் மூலம்தான் தன்னுடைய இருப்பு அங்கு நன்றாக வெளிப்படுகிறது என்கிற சூட்சும ஸ்ட்ராட்டஜியை கிராமத்து முனியம்மாள் ஆரம்பத்திலேயே பிடித்துக் கொண்ட உத்தி வியப்பூட்டுகிறது.
உப்பில்லாத பிரச்சினைக்கு அரைமணி நேர விசாரணை
வார விசாரணையை ஆரம்பித்த விசே, லக்ஸரி ஷாப்பிங் டாஸ்க்கில் ஆனந்தி உப்பை ஏன் தோ்ந்தெடுக்கவில்லை என்பதை வைத்து அரைமணி நேரம் ஒட்டினார். இதுவொன்று உப்புப் பெறாத பிரச்சினை இல்லைதான். அதற்காக எவ்வளவு நேரம் ஐயா?
எந்தவொரு பிரச்சினையிலும் கருத்து சொல்லாமல், “பாயிண்ட் வரட்டும். பேசறோம்” என்கிற மாதிரி வாயில் துண்டை வைத்து அடைத்துக் கொண்டிருந்த சில போட்டியாளர்களிடம் “எதையாவது பேசித் தொலைங்கய்யா.. உங்களுக்குன்னு ஒரு ஒப்பினியன் இருக்கும்ல. சரியோ, தப்போ.. அதை சொல்லுங்க. இப்படியே கடைசி வரை அமைதியா இருந்து சைடு கேப்புல நாட்களை ஓட்டிடலாம்ன்னு நினைக்காதீங்க” என்று விசே கடிந்து கொண்டது அவசியமானது.
‘ஆளும் அணியிலேயே இருந்து கொண்டு ஆட்சிக்கு ஆப்பு வைக்காதீர்கள். தலைவர் மீது புகார் இருந்தால் அதை அணி சார்ந்த சந்திப்புகளில் வெளி்ப்படுத்துங்கள். ஜனநாயக அறையில் தனிப்பட்ட முறையில் பழிவாங்காதீர்கள்’ என்று கடந்த வாரமே விசே தெளிப்படுத்தியும் கூட, இந்த வாரமும் அதே விஷயம்தான் நடந்தது. ஆரம்பத்திலேயே எதிரணிக்குத் தாவிய முனியம்மாளைப் பார்த்து பலரும் அப்படி தாவி விட்டார்கள். ஷமா மீதுள்ள தனிப்பட்ட விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு ஆட்சிக் கவிழ்ப்பிற்கு கொலைவெறியுடன் செயல்பட்டார் ஜேசன். இந்த விஷயங்களையெல்லாம் மீண்டும் ஒருமுறை கண்டித்தார் விசே.

லாஜிக்காக கேள்வி கேட்டு மாட்டிக் கொண்ட ஷமா
‘திடகாத்திரமான ஆண்களோடு பலவீனமானவர்கள் அல்லது பெண்கள் எப்படி போட்டி போட முடியும்?’ என்கிற லாஜிக்கான கேள்வியை முன்வைத்தார் ஷமா. “ஏம்மா.. நீங்க இந்த ஷோவை பார்த்துட்டுதானே வந்தீங்க.. நீங்களே ஏன் ஒருத்தரை வீக்கா நெனக்கறீங்க?” என்று ஷமாவிற்கு கறாரான பதில் தந்தார் விசே.
உள்ளூர் போட்டிகள் முதல் சர்வதேச போட்டிகள் வரை ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியாகவே நிகழும். இயற்கை அமைப்பின் படி ஆண் உடல் அளவில் கூடுதல் பலத்துடன் இருக்கிறான். பெண் மனோபலம் அதிகம் கொண்டவளாக இருக்கிறாள். சமமான உடல் பலம் உள்ளவர்களை விளையாட்டில் மோதச் செய்வதுதான் அடிப்படையான விதி. ஆனால் பிக் பாஸ் வீட்டில் பொதுவான விதிகளுக்கு இடம் இல்லை. அந்த ஃபார்மட் அப்படி எனவே விசேவும் அதையொட்டிதான் பேச முடியும்.
வீக்கெண்ட் பஞ்சாயத்தின் இரண்டாவது நாள்
முந்தைய எபிசோடில் ஷமாவிடம் கடுமையாக பேசி விட்டதால், இன்று அதற்கு மருந்து போடும் விதமாக ‘ஆர் யூ ஓகே பேபி?’ என்று விசே கேட்க, ஷமாவிற்கு பயங்கரமான குஷி. ஜேசன் ஷமாவை குழந்தை போல் தூக்கிக் கொண்டு வந்ததை ‘ஸ்போர்ட்டிவ்வா எடுத்துக்கிட்டது சிறப்பு’ என்று பாராட்டினார் விசே.
டாஸ்க்கில் மிருகத்தனத்தை வெளிப்படுத்தியது யார்?
சீஸ் ஹவுஸ் டாஸ்க்கில் ‘ஷமாவின் ஆட்டம் மிருகத்தனமாக இருந்தது’ என்று ஜேசன் கூறியதையொட்டி “அவங்க ஆடினது அப்படி இருந்ததா.. நீங்க நடந்துக்கிட்டது அப்படியிருந்ததா?” என்று விசே கேட்க ஜெர்க் ஆனார் ஜேசன். ஷமா காலைப் பிடித்து இழுத்தது, எல்லோரும் பின்பற்றிய விஷயம்தான். ஆனால் ஷமாவின் மீதுள்ள முன்விரோதம் காரணமாக மிகையாக எதிர்வினையாற்றி விட்டார் ஜேசன். ஷமாவை மூர்க்கத்தனமாக பிடித்து இழுத்து, பெரிய விலங்கு சிறிய விலங்கை வேட்டையாடி வாயில் கவ்விக் கொண்டு வருவதைப் போன்று இருந்தது அவரது செய்கை.
ஜேசனிடம் உள்ள ஒரு நல்ல பழக்கம் என்னவென்றால், தான் செய்தது தவறு என்றால் அதை உடனே ஒப்புக் கொண்டு விடுவார். எனவே இப்போதும் அதையே செய்தார். ஒருவரை நமக்கு பிடிக்காமல் போய் விட்டால், சூழல் கருதி அவர் மீதுள்ள கோபத்தை அடக்கிக் கொண்டே வருவோம். ஏதாவது ஒரு கட்டத்தில் அந்தக் கசப்பு நிரம்பி வழிந்து தன்னிச்சையாக பொங்கி வந்து விடும். உணர்ச்சி வயப்பட்டு ஒருவரை காயப்படுத்தி விடுவது, கொலை செய்து விடுவது போன்ற ஆபத்துக்கள் இப்படித்தான் நிகழ்கின்றன. சிறைத்தண்டனை பெற்றவர்களைக் கேட்டால் தெரியும் “அந்த ஒரு நிமிஷம் ஆத்திரப்பட்டு அவசரப்பட்டுட்டேன்” என்று நொந்து கொள்வார்கள். ஒருவர் மீது கோபம் மனதில் உருவாகும் ஆரம்பத்திலேயே சரி செய்து கொள்வது நமக்கு நல்லது.

ரத்தம் vs தக்காளி சட்னி தத்துவத்தை சரியாக பின்பற்றும் ஆனந்தி
அடுத்ததாக ஆனந்தி பஞ்சாயத்து. சக போட்டியாளர்களுக்கு மட்டுமல்லாது, பெரும்பாலான பார்வையாளர்களுக்கும் ஆனந்தி எரிச்சலூட்டும் நபராக இருப்பார் என்று தோன்றுகிறது. மற்றவர்களை முகத்தில் அடித்தது போல் அடாவடியாக பேசி விடும் ஆனந்தி, தன் மீது சிறிய சொல் வந்து விழுந்தாலும் தாங்கிக் கொள்ள முடியாமல் கண்கலங்கி புலம்ப ஆரம்பித்து விடுகிறார். “எனக்குப் பசிக்குது. காலைல இருந்து சாப்பிடலை..” என்பது போன்ற விக்டிம் கார்டை கையில் எடுக்கிறார்.
LP தன்னைப் பிடித்து இழுத்ததையே தொடர்ந்து பெரிதாக சொல்லிக் கொண்டிருக்கும் ஆனந்தி, தான் அவர் மீது கால் வைத்து ஏறியதைப் பற்றி நினைத்துப் பார்க்கவேயில்லை. விசே இதைப் பற்றி விசாரிக்கும் போது “அவங்க கழுத்துல நான் காலை வைக்கவேயில்ல” என்று ஆணித்தரமாக மழுப்பினார் ஆனந்தி. இதனால் எரிச்சலான விசே “குறும்படம் போட்டு பார்க்கலாமா.. உங்களுக்கு வந்தா ரத்தம்.. மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா.. உக்காருங்க.. டைம் இல்ல” என்று ஆனந்தியை ஆஃப் செய்த போது பார்வையாளர்களுக்கு ஆனந்தமாக இருந்திருக்கும்.
ஏற்கெனவே குறிப்பிட்டது மாதிரி LP-யும் ஒருவகை விஷபாட்டில்தான். “காலைப் பிடிச்சு இழுத்தா நீங்க அப்படி விழுவீங்கன்னு தெரியாது” என்பதையே தொடர்ந்து சொல்லி மழுப்பினார். இதையும் சுட்டிக் காட்டிய விசே “ஒருத்தர் எப்படி விழுவாங்கன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று மடக்கிய போது பதில் வரவில்லை.
எலிமினேஷன் நேரம்.
தன்னிடம் இருக்கும் எவிக்ஷன் ஃப்ரீ பாஸை வைத்து பிருத்வியை காப்பாற்றினார் முகேஷ். இதற்கான காரணமாக “டாஸ்க்ல ஒரு ஒட்டுலதான் அவன் தோத்துப் போனான்” என்று முகேஷ் சொன்னதை மனமார பாராட்டினார் விசே.
ஜாவித்தின் கமெண்ட்டால் ஜெர்க் ஆன லட்சுமிபிரியா
வாரத்தின் இடையில் வெளியேறிய ஜாவித் மேடைக்கு வந்தார். “வீடியோ முதல்ல பார்க்கறீங்களா?” என்று கேட்கப்பட்ட போது “இல்ல. மொதல்ல உள்ள இருக்கறவங்களை சரியா கேள்வி கேட்கணும்” என்று ஆவேசப்பட்டார். (அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு!). ஷாதிகாவை பாராட்டிய ஜாவித், LP, தன்யா, முகேஷையெல்லாம் ‘இரட்டை வேடம் போடுகிறவர்கள்’ என்று கிழித்தெறிந்தார். “நான் உங்க கிட்ட ஃபிளிர்ட் பண்ண டிரை பண்ல. உண்மையான பிரெண்டாத்தான் நெனச்சேன்.. நீங்க இன்னொருத்தரை கூட வெச்சிக்கிட்டு கேம் ஆடறீங்க” என்று ஜாவித் அதிரடியாக புகார் சொல்ல, LP-க்கு பயங்கர அதிர்ச்சி. “யாரை நம்பறதுன்னே தெரியல தாஸண்ணா’ என்கிற ரேஞ்சிற்கு நொந்து போனார்.
“ஜாவித் வெளியே போனாலும் ஸ்டேஜ்ல நின்னு சாவின்யா மாதிரிதான் பேசுவான்” என்று முன்னர் LP சொல்ல, “அவன் அப்படில்லாம் பேச மாட்டான்” என்று யூகித்தார் முத்தழகி. ஆனால் LP யூகித்ததுதான் சரியாக நடந்தது. எலிமினேட் ஆகிச் செல்கிறவர்கள், இத்தனை வன்மத்துடன் தங்களின் அபிப்ராயங்களைச் சொல்ல வேண்டியதில்லை. வீடு தரும் அழுத்தம்தான் போட்டியாளர்களைப் பேச வைக்கிறது. அந்த நிலையில் நின்று யோசித்து பாசிட்டிவ்வான கமெண்ட்டுகளை சொல்லலாம். கடுமையான விமர்சனங்களைக் கூட நகைச்சுவை கலந்து சொல்லலாம்.
கதை சொல்லட்டுமா டாஸ்க் பற்றி பேசிய விசே “குறைந்த நேரத்துல சுவாரசியமா கதை சொல்றதுதான் அந்த டாஸ்க்கே. அதுவொரு சவால். ஆனா அந்த கேமை நீங்க கெடுத்திட்டீங்க” என்று போட்டியாளர்கள் செய்த தவறுகளை சுட்டிக் காட்டினார்.
“யாரு சுவாரசியமா பேசலை?” என்கிற கேள்விக்கு ஷமா, அஷ்மிதா என்று அதே பெயர்களையே பலரும் ரீப்பிட் செய்தார்கள். “வேற யாரு?” என்று விசே மடக்கிய போது திருதிருவென்று விழித்தார் குமரன்.
இது பிக் பாஸ் வீட்டில் தொன்று தொட்டு இருக்கிற பழக்கம். ஒருவர் ஒரு பெயரைச் சொல்லி ஆரம்பித்து விட்டால், ‘குரங்கு - தொப்பி’ கதையாக மற்றவர்களும் அதையே ஃபாலோ செய்வார்கள்.

மணிவண்ணன் எலிமினேஷன் - இது சரியா பாஸ்?
பிருத்வி காப்பாற்றப்பட்ட நிலையில் எலிமினேஷன் பிராசஸ் ஆரம்பித்தது. பெரும்பாலோனோர் யூகித்தது போல் அஷ்மிதா அல்லாமல் மணிவண்ணன் வெளியேறியதில் பலருக்கும் அதிர்ச்சி. பெரிதும் அலட்டிக் கொள்ளாமல் சிரித்தபடி வெளியேறிய மணிவண்ணன், மேடைக்குச் சென்ற போதும் பாசிட்டிவ் மொழியில் மற்றவர்களுக்கு ஊக்கம் தந்தபடி வெளியேறியது சிறப்பு.
‘யாருடைய லீடர்ஷிப் சிறப்பாக இருந்தது, ஷமாவா அல்லது முகேஷா?’ என்கிற கேள்விக்கு பலரும் ஷமா என்றே பதில் சொன்னார்கள். இந்த இருவரில் ஒருவரை அடுத்த வார தலைவருக்கான போட்டிக்கு தகுதிப்படுத்தலாம் என்று சொன்ன போது முகேஷிற்கு வாக்களித்து தேர்ந்தெடுத்தார்கள். இதெல்லாம் என்ன லாஜிக்கோ?!
“இனிமேல் ஆட்சியைக் கவிழ்க்கற வேலையை செய்ய முடியாது. தலைவர் மேல புகார் இருந்தா அதை மீட்டிங்கில் சொல்லுங்க. தலைவர் பதவியிலிருந்து விலக முடியாது. இரு அணிகளுக்கு இடையேதான் போட்டி இருக்கணும்” என்றெல்லாம் ஜனநாயக அறைக்கான விதிகளை தெளிவுப்படுத்தி விட்டு விடைபெற்றார் விசே.
சுவாரசியமான போட்டியாளர்கள் உள்ளே வருவார்களா?
குமரன், அஷ்மிதா, சாந்தினி போன்றவர்கள் இன்னமும் கூட தங்களின் ஆட்டத்தை ஆரம்பிக்கவேயில்லை.
முத்தழகி, பிருத்வி, அவினாஷ், முகேஷ் போன்றவர்கள் நடுவாந்திர நிலையில் இருக்கிறார்கள்.
‘ஜென்டில்மேன்’ என்று சாவின்யாவால் பாராட்டப்பட்ட ராகவ், குறைவாக பேசினாலும் சரியாகப் பேசுகிறார். ஆனால் அது அவரின் இருப்பை வெளிப்படுத்துவதற்கு போதாது.
இந்த சீசனின் முக்கியமான போர்க்களம், ‘ஜனநாயக அறை விவாதம்’ என்கிற போது முத்துக்குமரன், மஞ்சரி போன்ற சிறந்த பேச்சாளர்கள், போட்டியாளர்களாக இருந்திருந்தால் களை கட்டியிருக்கும். தர்க்கம், சமயோசிதம், நகைச்சுவை போன்றவற்றை கலந்து கட்டி பேசுவதில் இவர்கள் வல்லவர்களாக இருந்தார்கள். அப்படியொரு திறமைசாமி வைல்ட் கார்ட் என்ட்ரியில் வருவாரா?
மணிவண்ணனின் எவிக்ஷன் நியாயமானதா? அவருக்குப் பதில் வேறு யார் வெளியேறியிருக்க வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்க மக்களே.!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


