Calligraphy: கையெழுத்துக் கலையில் முத்திரை பதிக்கும் மதுரை இளைஞர்!

கையெழுத்தின் நளினத்தைக் காட்டும் நரேந்திர மூர்த்தி!

சித்திரையும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்ற ஔவையின் கூற்றுக்கிணங்க, மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியில் நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் நரேந்திர மூர்த்தி மதனகோபால், கேலிகிராபி (Calligraphy) என்ற கையெழுத்துக் கலையில் மூன்றுமுறை உலக “பென்” (Pen) சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருக்கிறார். பள்ளிப்படிப்பிலிருந்தே இக்கலையை முறையாகக் கற்று இச்சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். தற்போது தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வருவதோடு @naren_penmanship என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரின் கையெழுத்துக்கலையான “கேலிகிராபி” படைப்புகளைப் பதிவிட்டு வருகிறார். அவர் நம்மிடையே பகிர்ந்துகொண்டது,

கேலிகிராபி எழுத்துமுறை என்றால் என்ன?

எழுத்து என்பது வெறும் உதிரிப்பூக்களல்ல! அது ஒரு அழகான கலை வடிவம். எந்த மொழியாக இருந்தாலும் அதன் எழுத்துப்பூக்களை நேர்த்தியாகவும், பார்வைக்குக் கவர்ச்சியாகவும் வடிவமைக்கும் கலையே “கேலிகிராபி.”

காப்பர் பிளேட்(Copperplate), ஸ்பென்சேரியன்(Spencerian), இட்டாலிக்(Italic), ரோமன் கேபிடல்ஸ்(Roman Capitals), ஃபவுண்டேஷனல் ஹேண்ட்(Foundational Hand), கர்சிவ்(Cursive) எனப் பல பாணிகள் இந்தக் கலையில் உண்டு. ஒவ்வொரு பாணிக்கும் தனித்தனி ஒழுங்கு, எழுத்தளவு மற்றும் சாய்மானம் உண்டு. கூர்மையான மற்றும் பட்டையான பேனா முனைகளைக் கொண்டே அவை எழுதப்படுகின்றன. அப்படி எழுதும்போது இந்தக் கலை எனக்குள் ஆழ்கடல் அமைதியையும், பொறுமையையும் கற்றுத்தருகிறது.

கேலிகிராபியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எப்போது வந்தது?

எனக்குக் கேலிகிராபியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் என் அப்பாவிடமிருந்தே வந்தது. என் அப்பாவும் உலக “பென்” சாம்பியன் பட்டத்தை வென்றவர். எனது அப்பா மதுரை பெருங்குடியில் “எலக்ட்ரிக்கல்” கடை நடத்தி வருகிறார். அப்பாவின் கல்லூரிக் காலங்களிலிருந்தே வித்தியாசமாக எழுதும் பழக்கம் இருந்தது. பின்னர் இணையதளத்தின் மூலம் “கேலிகிராபி” எழுத்துமுறையை முறையாகப் பயின்றார். 2009, 2010, 2011 என தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பல பிரிவுகளில் அப்பா, உலக “பென்” சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே இந்தக் கேலிகிராபி எழுத்துமுறையின் மீது எனக்கு ஈர்ப்பு வர ஆரம்பித்தது. அதற்குக் காரணம் அப்பாதான். இதில் அவரே எனக்குக் “குரு”

கேலிகிராபியை முறையாகக் கற்க ஆன காலம் என்ன?

நாமெல்லாம் சிறுவயதிலிருந்தே தினந்தோறும் எழுதுகிறோம். கையெழுத்தை அழகாக்க நமக்குப் பள்ளியில் இரண்டு கோடு, நான்கு கோடு போட்ட நோட்டில் பயிற்சி எல்லாம் கொடுப்பார்கள். ஆனால் நம் கையெழுத்து அழகாக மாறுவதில்லை.

காரணம் சரியான வழிமுறையும், தொடர் பயிற்சியும் இல்லாததுதான். என் அப்பாவின் முழுமையான வழிகாட்டுதலோடு 13 வயதிலிருந்தே பயிற்சி பெற்று மூன்று மாதங்களில் கற்றேன். பின் தொடர் பயிற்சிக்குப் பின்னர், 2018ஆம் ஆண்டு நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, 18 வயதிற்குட்பட்டோருக்கான உலகளாவிய “கர்சிவ் ரைட்டிங்” (Cursive Writing) போட்டியில் இரண்டாமிடம் பிடித்தேன். இந்தக் கையெழுத்துப்போட்டி World Handwriting Contest 1991ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் அமெரிக்காவைச் சேர்ந்த Ms. Kate Gladstone https://handwritingrepair.info என்ற அம்மையாரால் சர்வதேச அளவில் வழிநடத்தப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக 2021 மற்றும் 2022ஆம் அண்டுகளில் “ஆர்டிஸ்டிக்ஸ்டைல்” (Artistic Style) பிரிவுகளில் முதலிடமும், இரண்டாமிடமும் பெற்று வாழ்நாள் சாதனையாளராக (Lifetime Triple Crown Winner) உயர்ந்துள்ளேன். 2021ஆம் ஆண்டு “Global Handwriting School” நடத்திய “Global Handwriting Olympiad” போட்டியில் 15 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்று, மூன்று வெவ்வேறு பிரிவுகளில் (Calligraphy, Printed Handwriting, Cursive Handwriting) “Grand Master” பட்டங்களை வென்றுள்ளேன். 2023ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியாவின் மிகப்பெரிய கையெழுத்துப் போட்டியான “National Penman Championship” என்ற தேசிய அளவிலான போட்டியில் முதலிடம் வென்று சாதனைப் படைத்துள்ளேன்.

கேலிகிராபி எழுத்துமுறையின் தனித்துவமும் பயன்பாடுகள் என்னென்ன?

காலம் கடக்க கடக்க என்னதான் அச்சு உலகிற்கு நாம் மாறிவந்தாலும் கையெழுத்திற்கு இருக்கும் மதிப்பும் அங்கீகாரமும் என்றைக்கும் தனித்துவமான ஒன்று. கையெழுத்திற்கென்று எப்போதும் ஒரு உயிரோட்டம் உண்டு. ஒரு வெள்ளைக் காகிதத்தில் நம்முடைய சாதாரண கையெழுத்தில் எழுதிக்கொடுப்பதற்கும், கேலிகிராபி மூலம் எழுதிக்கொடுப்பதற்கும் இருக்கும் வேறுபாடும், அதைப் பார்த்து ரசிக்கும் பார்வையாளரின் எண்ண ஓட்டமுமே இதற்கு இருக்கும் தனித்துவம்.

அமெரிக்க வெள்ளை மாளிகையில் இன்றும் கையெழுத்துக் கலைஞர்களுக்கென அரசுப் பணி இருக்கிறது. பிறநாட்டு அதிபர்களுக்கு வாழ்த்து மடல், அழைப்பிதழ், பாராட்டுச் சான்றிதழ் எழுதுவதற்கும் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவின் அரசியல் சாசன சட்டத்தை திரு. பிரேம்பிஹாரி நாராயண்ராய்சாதா அவர்கள் தன் கைகளால்தான் எழுதினார்.

நம் தமிழ்நாட்டின் மதுரையில் பழங்காலத்தில் வாழ்ந்த கையெழுத்துக் கலைஞர்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டும் விதமாக “எழுத்தாணிக்காரத்தெரு” இன்றளவும் இருக்கிறது. எத்தனை பேருக்குத் தெரியும்? அச்சு ஊடகம் வருவதற்கு முன்னால் திருமணம், கிராம விழா, கலைநிகழ்ச்சிகள், பரிசுப் பொருள்கள், வாழ்த்து அட்டைகள், அழைப்பிதழ்கள், ஓலைச்சுவடிகளில் என எல்லாவற்றிலும் எழுத்தாணி, தூரிகை கொண்டே கைப்பட நேர்த்தியாக எழுதினர்.

இந்த எழுத்துக்கலைக்கு (கேலிகிராபி) நீங்கள் ஆற்றிய பங்குகள் என்னென்ன?

நான் இக்கலையை முழுமையாகக் கற்றுக்கொண்ட பிறகு, எனது வீட்டிற்கு அருகிலுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், அழகான கையெழுத்துடைய மாணவர்களைக் கண்டாலோ அவர்களுக்கு எனது முழுமையான வழிகாட்டுதலைக் கொடுத்து, இந்தக் கலையை கற்றுக்கொள்ளவும் பயிற்சிபெறவும் ஊக்கப்படுத்தி வருகிறேன். பொருளாதார நிலை கருதி இக்கலையைக் கைவிட்டு வேறு வேலை தேடி சென்றவர்கள் ஏராளம். நான் தனியார் வங்கிக்கு வேலைக்குச் சென்றிருந்தாலும் எனது ஓய்வு நேரங்களிலும், விடுமுறை நாள்களிலும் எனது கையெழுத்துக்கலையின் மூலம் பல படைப்புகளை எழுதி வருகிறேன்.

இந்த எழுத்துக்கலையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச்செல்ல உங்கள் பங்களிப்பு?

இன்றைக்குப் பேனா பிடித்து எழுதுவதே அரிதாகிவிட்டது. தட்டச்சு செய்யும் வார்த்தைகள் விழிகளை மட்டுமே தொடும். ஆனால் கைகளால் எழுதும் கடிதம் இதயத்தைத் தொடும். டிஜிட்டல் உலகிற்குள் மறைந்துவரும் இந்த அரிய கையெழுத்துக்கலையை அழியாமல் மீட்டு, அதை அடுத்த தலைமுறைக்கு முறையாகக் கற்றுக்கொடுத்து, கொண்டு சேர்ப்பதே என் முதன்மையான நோக்கம்.

இக்கலையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அரசின் ஆதரவும், அதற்கான அங்கீகாரமும் இருந்தால் மேலை நாடுகள் போல நாமும் அரசுப்பணி வழங்கி அக்கலைஞர்களை அடையாளப்படுத்தலாம். அரசின் முக்கியச் சான்றிதழ்கள், தலைவர்களுக்குக் கடிதங்கள், வாழ்த்துமடல் என அனைத்திலும் கேலிகிராபியைப் பயன்படுத்தி எழுதலாம்.

உலக நாடுகள் இக்கலைக்குப் போட்டிகள் நடத்துவது போல், நம் தமிழ் நாடும் இக்கலைஞர்களை சரியாக இனம் கண்டுகொண்டு முறையான பயிற்சி வழங்கி போட்டிகள் நடத்தி அங்கீகரிக்க வேண்டும்" எனக் கூறினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.