மதுரை: பள்ளி மாணவன் இறப்பு விவகாரத்தில் நீதி கேட்டு போராடியவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு!
மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியை சேர்ந்தவர் 11-ம் வகுப்பு பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன். இவர் கடந்த வாரம் முட்புதர் குட்டை ஒன்றில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் மரணத்தை கொலை வழக்காக மாற்ற வேண்டும், விசாரணை அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டும், விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரி ஒரு வாரமாக அவரது உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பள்ளி மாணவன் தமிழ்செல்வனுக்கு நீதி கேட்டு மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்த முயன்றதால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் கதவினை பூட்டிய நிலையில்
அவ்வமைப்பை சேர்ந்த இளைஞர்கள் பூட்டப்பட்டிருந்த கதவுகள் மீது ஏறி குதித்து ஆட்சியர் அலுவலகத்துக்குள் சரமாரியாக ஓடி வந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து துணை ஆணையர் கார்த்திக் தலைமையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் கலைந்து செல்லாத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து இழுத்துச் சென்றனர்.
இதனால் காவல்துறையினருக்கும் இளைஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும் ஆட்சியர் அலுவலகம் வளாகத்திற்குள் அமர்ந்து நீதி வேண்டும் என்கிற கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லாததால் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கை,கால்களை பிடித்து தூக்கி சென்று பேருந்துகளில் ஏற்றி கைது செய்து அழைத்து சென்றனர்.

கைது நடவடிக்கையின் போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் கடும் தள்ளுமுள்ளும் வாக்குவாதமும் ஏற்பட்டது.
கைது செய்த 52 பேரையும் தனியார் மண்டபத்தில் அடைத்த வைத்த போலீசார் அவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த தல்லாக்குளம் காவல் நிலைய போலீசார் மூன்று நாட்கள் நேரில் ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


