ரணபலி, எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக், மைசா... பாலிவுட் டு டோலிவுட் - ராஷ்மிகாவின் ரசனையான லைன்அப்!
இந்தாண்டில் பாலிவுட்டில் ஷாகித் கபூருடன் நடித்திருக்கும் காக்டெயில் 2 , இப்போது ஒடிடி-யிலும் வரவேற்பை அள்ளி வருவதில் மகிழ்கிறார், ராஷ்மிகா மந்தனா. திருமணத்திற்கு பின் படங்களை கவனமுடன் தேர்வு செய்து நடித்து வரும் ராஷ்மிகா, நடிப்பில் அடுத்தடுத்த கட்டத்துக்கு முன்னேறி வருகிறார். அவரது லைன் அப்கள் பிரமிக்க வைக்கின்றன. சோலோ பர்ஃபாமென்ஸ் ஆக இருந்தாலும் சரி, இரண்டு மூன்று நாயகிகளுடன் சேர்ந்து நடித்தாலும் சரி தன்னுடைய கதாபாத்திரம் மக்களிடையே ஒரு தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும் என நினைத்தால், அப்படி கதையை ராஷ்மிகா தேர்வு செய்து விடுகிறார். இந்தியில் அவர் கிர்த்தி சனூனுடன் நடித்த காக்டெயில் 2வை கூட உதாரணமாக சொல்லலாம்.
ராஷ்மிகா, இப்போது நடித்து வரும் ஹீரோயின் சென்ட்ரிக்கான மைசாவை அறிமுக இயக்குநரான ரவீந்திர புல்லே இயக்கி வருகிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்கள். பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ஆக்ஷன் திரைப்படங்களின் எல்லைகளை மட்டுமன்றி, இந்திய சினிமாவின் ஆக்ஷன் காட்சிகளுக்கான தரத்தையே புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் இந்த படம் உருவாகி வருகிறது என்கிறார்கள். ஒளிப்பதிவை ஷ்ரேயாஸ் பி. கிருஷ்ணா மேற்கொள்ள, இசையை ஜேக்ஸ் பிஜாய் அமைத்துள்ளார். சர்வதேச ஸ்டன்ட் மாஸ்டரான ஆண்டி லாங் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். கேச்சா காம்பாக்டீ ஸ்டன்ட் பணிகளை கவனித்துள்ளார். இதன் படப்பிடிப்பில்தான் அதிரடி காட்சியில் நடித்தபோது ராஷ்மிகா மந்தனாவுக்கு சமீபத்தில் காயம் ஏற்பட்டது. ஆறேழு வாரங்கள் ஓய்விற்கு பின் மீண்டும் மைசாவில் பங்கேற்று தனது போர்ஷனை முடித்து கொடுத்துள்ளார் ராஷ்மிகா. நவம்பர் முதல் வாரத்தில் திரைக்கு கொண்டு வருகிறார்கள்.

இதற்கிடையே காதல் கணவர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்திருக்கும் ரணபலி அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாகிறது. இது விஜய் தேவரகொண்டாவின் 14வது படமாகும். 1850களில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. 1850–1900 காலகட்டத்தில் நிகழ்ந்த பல உண்மைச் சம்பவங்கள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் திட்டமிட்டு வரலாற்றில் தவறாக சித்திரிக்கப்பட்டது. அந்த சம்பவங்கள் மற்றும் தவறாக பழிசுமத்தப்பட்ட மனிதர்கள் ஆகியவற்றை இந்தப் படம் பேசும். இது ஒரு வாழ்க்கை வரலாற்றுப் படம் அல்ல. பாடநூலில் இடம்பெற்ற வரலாற்றை மீண்டும் சொல்லும் முயற்சியும் அல்ல. பல உண்மைச் சான்றுகள், வாய்மொழி வரலாறுகள் மற்றும் காலப்போக்கில் ஒடுக்கப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு மறைக்கப்பட்ட காலத்தை சினிமா வடிவில் மீள் உருவாக்கம் செய்வதுதான் ‘ரணபலி என்கிறார்கள்
ராஷ்மிகா மந்தனா ’ஜெயம்மா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘தி மம்மி’ படத்தின் மூலம் பிரபலமான அர்னால்ட் வோஸ்லூ, சர் தியோடோர் ஹெக்டர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது தவிர மைசாவிற்கு முன்னரே அட்லியின் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் ராக்காவிலும் நடித்து வருகிறார். இதில் ஏற்கெனவே தீபிகா படுகோனே, ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர், ஜான்வி கபூரும் உள்ளனர். ஆனாலும் ராஷ்மிகாவின் கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நிற்கும் என்கிறது பட யூனிட்.

இந்நிலையில் தான் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பயோபிக்கில் சுப்புலட்சுமியாக நடிக்க உள்ளார் ராஷ்மிகா. டோலிவுட்டில் ஜெர்சி, கிங்டம், மேஜிக் ஆகிய படங்களை இயக்கிய கெளதம் தின்னூரி இயக்க, அல்லு அரவிந்த் தயாரிக்கிறார். சுப்புலட்சுமியாக நடிப்பதால், ரொம்பவே உருகும் ராஷ்மிகா, அம்மா, உங்க வாழ்க்கையில ஒரு சின்ன பகுதியா இருக்குறதுக்கு என்னை தேர்ந்தெடுத்ததுக்காக நான் எப்பவுமே உங்களுக்குக் கடமைப்பட்டிருப்பேன். என பட விழா மேடையிலேயே நெகிழ்ந்து மகிழ்ந்து சொல்லியிருப்பது, ராஷ்மிகா அந்த கதாபாத்திரத்தின் மேல் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையையும் சொல்லாமல் சொல்லியது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

