“விருப்பமிருந்தால் வழி உண்டு” சேலம், கோயம்புத்தூர் குடிநீர், பாசன வசதி குறித்து விவாதம் | அணை ஓசை 36

காவிரி – மேட்டூர் திட்டம் தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கிய இடத்தைப் பெற்றது. அணை கட்டும் பணி முன்னேறிய அந்தக் காலத்தில், திட்டத்தின் பயன்கள் எந்தெந்த பகுதிகளுக்கு வழங்கப்படும் என்ற கேள்வி பல்வேறு மாவட்டங்களிலிருந்து எழுந்தது. குறிப்பாக, சேலம் நகரத்திற்கும் சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கும் குடிநீர் மற்றும் பாசன வசதி கிடைக்க வேண்டுமென்ற கோரிக்கை சட்டமன்றத்தில் பல முறை முன்வைக்கப்பட்டது.

சேலம் நகரத்திற்கு குடிநீர்

சேலம் நகர மக்கள் நீர் பஞ்சத்தால் அவதிப்பட்ட நிலையில், அங்குள்ள மாநகராட்சி கவுன்சில், மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் வழங்குமாறு அரசாங்கத்தை அணுகியது. இது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, அமைச்சர்கள் அளித்த பதில்களில் “நிதி அம்சம் பரிசீலனையில் உள்ளது” என்ற வாக்கியமே தொடர்ந்து இடம்பெற்றது. நிலப்பரப்புகள் குறித்த சிரமம் இல்லை என்றாலும், நிதி பற்றிய தடையை காரணம் காட்டி அரசு எந்த உறுதியையும் அளிக்க மறுத்தது.

இதற்கு பதிலளித்த பொது சுகாதாரத் துறை அமைச்சர் திரு. எஸ். முத்தையா முதலியார், “சேலத்துக்கு குடிநீர் கொண்டு செல்வதில் நிலப்பரப்பு சிக்கல் இல்லை, ஆனால் நிதி தொடர்பான அம்சமே முக்கிய தடையாக உள்ளது” எனத் தெரிவித்தார். உறுப்பினர்கள் “நிதி தொடர்பான பரிசீலனையில் எந்த முன்னேற்றமும் உள்ளதா?” என வினவியபோது, “இல்லை, முன்னேற்றம் எதுவும் இல்லை” என்று கூறினார். இவ்வாறு, சேலம் மாநகர மக்களின் குடிநீர் கோரிக்கை எப்போதும் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

பாசன வசதிக்கான கோரிக்கை

இதற்கு இணையாக, மேட்டூர் அணையிலிருந்து சேலம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்துவது குறித்து கேள்வியும் பல முறை எழுந்தது. சட்டமன்ற உறுப்பினர்கள், “சேலம் நீர்ப்பஞ்சத்தால் பாதிக்கப்படுகிறது; கோயம்புத்தூரில் பரந்த நிலப்பரப்புகள் பாசன வசதி இன்றி உலர்கின்றன. இப்பகுதிகளுக்கு மேட்டூர் நீர் கொண்டு செல்ல முடியுமா?” என்று அரசை வலியுறுத்தினர்.

ஆனால், அரசாங்கம் மீண்டும் ஒரே காரணத்தை சுட்டிக்காட்டியது—“தலைமைப் பொறியாளரிடமிருந்து இறுதி அறிக்கை பெறப்படவில்லை.” சேலம் மாவட்டம் குறித்த எந்த இடைக்கால அறிக்கையும் இல்லை எனவும், கோயம்புத்தூர் குறித்த 1926-ல் வெளியான ஒரு அறிக்கை மட்டுமே இருப்பதாகவும் அரசாங்கம் தெரிவித்தது.

உறுப்பினர்கள் சாத்திய அறிக்கையாவது பெற முடியுமா என்று கேட்டபோதும், அரசு “எந்த விஷயங்களில் ஆரம்ப அறிக்கையை கோர வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை” எனத் தெளிவற்ற பதில்களை வழங்கியது. மேலும், “சேலத்துக்கு நீர் கொண்டு செல்லும் வழி சுரங்கப்பாதை வழியாக தவிர வேறு வழியில்லை; அது சாத்தியமா என்பது அறிக்கை கிடைக்கும் வரை கூற முடியாது. ஏனெனில், காவிரிப் படுகையின் மட்டத்திலிருந்து சுமார் 400 அடி உயரத்துக்கு தண்ணீரை மேலே கொண்டு வர புவியியல் அமைப்பு சாதகமாக இல்லை” என்ற நிலைப்பாட்டை தொடர்ந்து முன்வைத்தது.

அணை ஓசை 36

உறுப்பினர்களின் வலியுறுத்தலும் அரசின் மறுப்பும்

திவான் பகதூர் ஆர். என். அர்த்தனாரி முதலியார், “சேலம் நீர்ப்பஞ்சத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் ஒரு முயற்சியாகவேனும் அரசு அந்த மாவட்டத்திற்கு நீர் கொண்டு செல்ல திட்டமிட வேண்டாமா?” எனக் கேட்டார். இதற்கு பதிலளித்த அரசு, “அறிக்கை பெறும் வரை எதையும் கூற முடியாது” எனத் தள்ளிப் போட்டது.

இதனால், அன்றைய அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு வெளிப்படையாகத் தெரிய வந்தது. சேலம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு பாசன வசதி வழங்க அரசுக்கு உறுதியான எண்ணம் இல்லை என்பதே உண்மை. சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வளவு திறமையாக வினாக்களை எழுப்பினாலும், எவ்வளவு முறை வலியுறுத்தினாலும், அரசு ஒரே குரலில்—“அறிக்கை இல்லை, நிதி அம்சம் பரிசீலனையில் உள்ளது”—என்ற பதில்களை மட்டும் வழங்கியது.

இந்த விவாதங்களின் சாராம்சம் ஒன்றே: மேட்டூர் அணையின் பிரதான நோக்கம் தஞ்சாவூர் டெல்டா பகுதிக்கு பாசன வசதி அளிப்பது; அதற்கு அப்பால், சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களில் நீர் வழங்குவதில் அரசாங்கம் விருப்பமில்லை எனும் நிலைப்பாடு. இதுவே நீடித்தது. சட்டமன்றத்தில் உறுதிமொழி பெற முயன்ற உறுப்பினர்கள் தோல்வியுற்றனர். இதனால், சேலம், கோயம்புத்தூர் மக்கள் எதிர்பார்த்த குடிநீர், பாசன வசதி அந்தக் காலத்தில் நிறைவேறாமல் தள்ளிப்போனது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

குடிநீர் வழங்கல் – சட்டமன்ற விவாதம்:

சேலம் நகரத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் வழங்குவது குறித்த பிரச்சினை நீண்ட காலமாக சட்டமன்றத்தில் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல, 1931 நவம்பர் 2 அன்று நடைபெற்ற விவாதத்தில் மீண்டும், திவான் பகதூர் எஸ். எல்லப்பா செட்டியார் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். அந்தத் தீர்மானம், சேலம் மக்களுக்கு விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பரிந்துரையை கொண்டிருந்தது.

குடிநீர் அவசியம்

எல்லப்பா செட்டியார் தனது உரையில், சேலத்தில் நல்ல, போதுமான குடிநீர் கிடைப்பது கடுமையாகத் தேவைப்படுவதாக கூறினார். முன்பே அரசு பலமுறை வாக்குறுதி அளித்தும், நிதி சிக்கலைக் காரணம் காட்டி திட்டத்தை தள்ளி போட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சேலம் அருகில் உள்ள பனமரத்துப்பட்டி நீர் வழங்கல் திட்டம் தோல்வியடைந்த நிலையில், ஏற்கனவே வரி செலுத்திய மக்களிடம் மீண்டும் செலவைச் சுமத்துவது நீதியல்ல என்றார். எனவே, செலவில் பெரும்பகுதியை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், குறைந்தபட்சம் அடுத்த பட்ஜெட்டில் ஆரம்ப நிதியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆதரவான கருத்துகள்

டாக்டர் பி. சுப்பராயன், இந்த தீர்மானத்திற்கு வலுவான ஆதரவு அளித்தார். மேட்டூரிலிருந்து சேலத்திற்கு தண்ணீர் கொண்டுவர பம்பிங் செலவுதான் முக்கிய சிக்கலாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அந்தச் செலவை (வருடத்திற்கு சுமார் ரூ60,000) முனிசிபாலிட்டி ஏற்க முடியாது என்பதால், அதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

கே. ஏ. நாச்சியப்ப கவுண்டர், சேலத்தில் குடிநீர் அவசரம் மிகுந்தது என்றும், மின்சார வசதி அமைக்கப்படும் நிலையில் பம்பிங் செலவை அரசின் மின்சாரம் மூலம் இலவசமாக செய்யலாம் என்றும் பரிந்துரைத்தார்.

அணை ஓசை

கவலைகள் மற்றும் மாற்று யோசனைகள்

திவான் பகதூர் ஆர். என். ஆரோக்கியசாமி முதலியார், திட்டத்தின் முழுமையான விவரங்கள் வெளிப்படையாக இல்லை என்றார். மேட்டூரிலிருந்து மட்டுமல்லாமல், பிற ஆதாரங்களிலிருந்து சேலத்துக்கு நீர் வழங்கும் சாத்தியங்களை ஆராய வேண்டும் என்றும், செலவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். அதிக விலையுள்ள குழாய்களுக்கு மாற்று வழிகளை தேட வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுபேதார்-மேஜர் எஸ். ஏ. நஞ்சப்பா பகதூர், சேலத்தில் நீர் குறைவு பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் ஆரோக்கியத்தையும் பாதித்திருப்பதாகவும், தொழில்துறைக்கு பெரும் தடையாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். மக்கள் ஏற்கனவே பெரும் தொகையை செலவழித்துள்ள நிலையில், அரசாங்கம் உடனடியாக உதவ வேண்டும் என்றார்.

அரசின் நிலைப்பாடு

சுகாதாரத்துறை அமைச்சர் திவான் பகதூர் பி. முனிசுவாமி நாயுடு, இந்தத் திட்டம் 1930-இல் விசாரணைக்கு உத்தரவிட பட்டதாகவும், சுகாதார பொறியாளர் நான்கு திட்டங்களை சமர்ப்பித்த தாகவும் விளக்கினார். அவற்றில், சேலத்துக்கு மட்டும் நீர் வழங்கும் திட்டத்தின் செலவு ரூ. 21,43,000 என்றும், அருகிலுள்ள 4 கிராமங்களையும் சேர்த்து நீர் வழங்கும் திட்டத்தின் செலவு ரூ.22,64,000 என்றும் கூறினார். இயக்கச் செலவு முறையே ரூ. 74,000 மற்றும் ரூ.94,000 ஆகும். முனிசிபாலிட்டி எந்தத் திட்டத்தை தேர்ந்தெடுக்க விரும்புகிறது என்பதை அரசு கேட்டுள்ளதாகவும், பதில் கிடைத்த பிறகு அதை பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இவ்வாறு பல்வேறு கருத்துகள் பதிவு செய்யப்பட்ட பின், எல்லப்பா செட்டியார் தனது தீர்மானத்தை திரும்ப பெற்றார். அதற்கு காரணம், அமைச்சர் விரைவில் திட்டத்தை முன்னெடுக்கப்படும் என்ற உறுதிமொழியை அளித்ததுதான் காரணம். உறுப்பினர்கள் எப்பாடு பட்டாவது சேலம் நகருக்கு குடிநீர் கொண்டு சென்று விட வேண்டும் என்ற தீராத பற்று அவர்களை ஆட்கொண்டு இருந்ததால், பல வழிகளிலும், பலமுறையும் தொடர்ந்து முயற்சித்தவண்ணம் இருந்தனர்.

பாசனத் திட்டம் தொடர்பான பட்ஜெட் முன்மொழிவு

1932 மார்ச் 12-ம் தேதி நடந்த சட்டசபை அமர்வில், காவிரி–மேட்டூர் பாசனத் திட்டம் தொடர்பான பட்ஜெட் முன்மொழிவு விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த விவாதம் அரசாங்கம் முன்வைத்த நிதி ஒதுக்கீடுகள், செலவு குறைப்புகள், பாசன பரப்பளவின் நம்பகத்தன்மை, நீர் விகிதம் (Water Rate) குறித்து விவசாயிகளின் எதிர்ப்பு, மேலும் சேலம் மாவட்ட மக்களின் கோரிக்கைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தது.

நிதி முன்மொழிவு மற்றும் வெட்டுத் தீர்மானம்

சர் ஆர்ச்சிபால்ட் கேம்ப்பெல் (அரசு வருவாய் உறுப்பினர்) தேவையின் கீழ் ரூ 75,83,400 ஒதுக்கீட்டை முன்மொழிந்தார்.

இதற்கு எதிராக திவான் பகதூர் ஆர். என். ஆரோக்கியசாமி முதலியார் வெட்டுத் தீர்மானமாக ரூ100 குறைக்க வெட்டுத் தீர்மானம் முன்மொழிந்தார். அவர் இதைச் செய்யும் நோக்கம் அரசாங்கத்திடம் சில முக்கியமான விளக்கங்களைப் பெறுவதற்காகவே என்று கூறினார்.

“செலவினத்தில் ஏற்பட்ட குறைப்புகள் ரூ 737.08 லட்சத்திலிருந்து ரூ 684.15 லட்சமாக ஆனது, சிக்கன நடவடிக்கையின் காரணமாக அரசாங்கத்தின் நிதிசார் பொறுப்புணர்வை காட்டுவதாகக் கூறினார்.

அணை ஓசை

மிகவும் ஆச்சரியத்தை அளிக்கும் வகையில் மொத்த செலவு, கணக்கீடு செய்ததை விட சுமாராக 50 லட்சம் ரூபாய்க்கு மேல் மிச்சப்படுத்த முடிந்தது. பல்வேறு சிக்கன நடவடிக்கைகளால் இது சாத்தியமானது.

அரசு 3,01,000 ஏக்கர் நிலத்தை பாசனம் செய்ய முடியும் என்று தெரிவித்திருந்தாலும், அதில் பெரும் சந்தேகங்கள் எழுந்தன. கால்வாய் அமைப்பு, அக்னியாறு பாசனம், அணை கட்டுமானத்தில் கான்கிரீட்–கற்காரை (Concrete vs. Masonry) விகிதம் ஆகியவற்றில் அவர் விரிவான விளக்கங்களை கோரினார்.

வறட்சியால் அவதிப்படும் சேலத்துக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது அநியாயம். “விருப்பமிருந்தால் வழி உண்டு” என்ற அடிப்படையில் அரசு விருப்பத்துடன் செயல்பட்டால் சேலத்துக்கும் பாசனம் சாத்தியமே என்றார் எல்லப்பா செட்டியார்.

நீர் விகிதம் (Water Rate) குறித்த ஏ. பி. என். ஒய். நாடிமுத்து பிள்ளை வலுவான எதிர்ப்பை முன்வைத்தார். ரயத்துகள் (விவசாயிகள்) விருப்பமில்லாமல் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். ஒரு ஏக்கருக்கு ரூ. 15 என்ற விகிதம் நடைமுறைக்கு ஒவ்வாதது. இது கணித கணக்குகள் அடிப்படையில்தான், விவசாயிகளின் நிஜ நிலைமை கருதப்படவில்லை. ஜமீன்தார்கள், இனாம்தார்கள், ரயத்துவாரி கள் என பல்வேறு நில வகைகளில் பாரபட்சம் உண்டு. வறண்ட நிலம் ஈர நிலமாக மாறினால், அந்த நிலங்களுக்கு வரி விகிதத்தில் சலுகை வழங்கப்படவில்லை. மேலும் விவசாயிகளின் உழைப்புக்கு நல்ல வருவாய் கிடைக்கும் எந்த வாய்ப்புகளும் மேலும் மேலும் குறைந்து வருகின்றன. இதனால், தற்போதைய விலைகள் மற்றும் பொருளாதார மந்தநிலை (Great Depression) காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றார்.

100 ஆண்டுகள் கழித்தும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தில் மேம்பாடு காண முடியவில்லை என்பதே நிதர்சனம்.

நிர்வாகச் செலவு குறித்த குற்றச்சாட்டு

நிலம் கையகப்படுத்தும் பணி பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில், இன்னும் 10–12 துணை கலெக்டர்களை வைத்திருப்பது தேவையற்றது. அவர்கள் பெரும்பாலும் சில மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள். தாசில்தார்களால் கூட இந்தப் பணிகள் முடிக்கப்படலாம். எனவே, பொதுப்பண செலவுகளை குறைப்பதற்காக துணை கலெக்டர்களை குறைக்க வேண்டும் என்று பஷீர் அகமது ஷஹீத் யோசனை கூறினார்.

அரசாங்கத்தின் சார்பில் சர் ஆர்ச்சிபால்ட் கேம்ப்பெல் விளக்கமளித்தார்.

நிலம் கையகப்படுத்துதல் இன்னும் 1,500 மைல்கள் நீளத்தில் பாக்கி உள்ளது.1932-33-ல் 842 மைல்களும், 1933-34-ல் 695 மைல்கள் கையகப்படுத்த இலக்கு உள்ளது. கால்வாய் அமைப்பின் அகலம் குறைவு, ஆனால் நீளம் அதிகம். ஒரு நபர் ஒரு நாளைக்கு 40 லிருந்து 60 மைல்கள் மட்டுமே நிலம் கையகப்படுத்த முடியும். எனவே துணை கலெக்டர்கள் தேவைப்படுகிறார்கள் என்றார். 1934 செப்டம்பருக்குள் முழுப் பாசன வசதி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேசனரி மூலம் 3,87,848 அலகுகள் (UNITS) மற்றும் கான்கிரீட் மூலம் 1,52,808 அலகுகள் வேலை முழுவதுமாக முடியும் போது செய்து முடிக்கப்பட்டிருக்கும் என்ற விவரங்களை அளித்தார்.

இறுதியில், வெட்டுத் தீர்மானம் விலக்கப்பட்டது. இதனால், காவிரி–மேட்டூர் திட்டத்திற்கு ரூ 75,83,400 மானிய ஒதுக்கீடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் இந்த விவாதம் காவிரி–மேட்டூர் திட்டத்தின் சமூக–பொருளாதார விளைவுகளைப் பற்றிய சந்தேகங்களையும், பகுதி இடைவெளியையும் வெளிப்படையாக முன்வைத்தது.

குட்டிக்கரணம் போட்டு கோரிக்கை விடுத்தாலும் சேலம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட நிலங்களுக்கு பாசன வசதி அளிக்க இயலாது மற்றும் சேலம் நகருக்கு குடிதண்ணீர் வசதி அளிக்க இயலாது என்ற தீர்க்கமான முடிவில் அரசின் செயல்பாடுகள் இருந்தது.

இதில் கவனம் பெறும் விஷயம் யாதெனில், மேட்டூர் அணைக்கு கையகப்படுத்திய விளை நிலங்கள், வீடுகள், கிணறுகள், கிராமங்கள் போன்ற அனைத்தும் மேற்கண்ட இரண்டு மாவட்டங்களில் இருந்து பெறப்பட்டது என்பதே பரிதாபகரமான நிலையில் அமைந்திருந்தது!

மேட்டூர் திட்ட மானியக் கோரிக்கை விவாதம்

1932 மார்ச் 23 ஆம் தேதி மீண்டும் ஒரு முறை சட்டசபையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதம், காவிரி–மேட்டூர் திட்டத்தின் நிதி ஒதுக்கீடு மட்டுமல்லாமல், சேலம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு நீர் வழங்கல் என்ற கேள்வியையும் தீவிரமாக முன்னிறுத்தியது. பல உறுப்பினர்கள், தங்கள் மாவட்டங்களின் நலனுக்காக குரல் கொடுத்து, அரசின் நிலைப்பாட்டை சவாலுக்கு உட்படுத்தினர்.

அணை ஓசை

கே.ஏ. நாச்சியப்ப கவுண்டரின் வலியுறுத்தல்

ரூ 20,07,000 ஒதுக்கீட்டுக்கு எதிராக வெட்டுத் தீர்மானம் கொண்டு வந்து, மூன்று முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தார்:

1. மேட்டூர் அணையிலிருந்து சேலம் நகரத்திற்கும், வழியோர கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கல்.

2. காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட “மேட்டூர் காவிரி பாலத்தை” பொதுமக்கள் இலவச பயன்பாட்டிற்கு திறப்பது.

3. மேட்டூர் அணையிலிருந்து சேலம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட நிலங்களுக்கு பாசனம் ஏற்பாடு செய்தல்.

காவிரி பாலம் பயன்பாடு மற்றும் பாசன கோரிக்கைகள் குறித்து அவர் விரிவாக வாதிட்டார்.

மேட்டூர் பாலம் – சுங்கம் வசூல் குறித்த எதிர்ப்பு

நாச்சியப்ப கவுண்டர், பாலத்தின் மேல் “தொழிலாளர்கள் தவிர மற்ற பொதுமக்களிடமிருந்து சுங்கம் வசூலிக்கும் நடைமுறையை” கடுமையாக விமர்சித்தார். அணை அரசு நிதியில் கட்டப்படும் போது, மக்கள் இயல்பாக அதை பார்க்க விரும்புவார்கள். ஆனால், பார்ப்பதற்கு கூட சுங்கம் கட்ட வேண்டிய நிலை தண்டனையைப் போல உள்ளது என்றார். மோட்டார் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், மக்கள் வாகனங்களை விட்டு நீண்ட தூரம் நடந்து கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனவே, “பாதசாரிகளுக்கும் வாகனங்களுக்கும் இலவச அனுமதி வழங்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

பாசன கோரிக்கை – மனிதாபிமான அடிப்படை

நாச்சியப்ப கவுண்டர், மேட்டூர் திட்டத்தால் 20 கிராமங்கள் இடம்பெயர வேண்டியதாகிய சேலம் மற்றும் கோயம்புத்தூர் மக்களுக்கு குறைந்த பட்சம் “பாசன நன்மை” வழங்கப்பட வேண்டும் என்றார். "விருப்பமுள்ள இடத்தில் வழி உண்டு" என்ற பழமொழியை மேற்கோள் காட்டி, அரசு முயன்றால் வழிகள் உருவாகும் என்றார்.

அதிக நீர் வரி (ரூ 29.5 / ஏக்கர் போன்ற) கணக்குகளை காட்டி பயமுறுத்துவதற்கு பதிலாக, “மக்களுக்கு ஏற்ற கட்டணம் நிர்ணயித்து” நீர் வழங்க வேண்டும் என்றார். அரசு மனிதாபிமானமும், அனுதாபமும் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை வாதத்தை முன் வைத்தார்.

சுபேதார் மேஜர் நஞ்சப்பா பகதூர் சேலத்திற்கு குடிநீரும் பாசனமும் மறுக்கப்படுவது முற்றிலும் தவறு என்றார். "கடினம்" என்று கூறுவது வெறும் கற்பனை; உலகம் பல சாத்தியமற்ற காரியங்களை சாத்தியமாக்கியிருக்கிறது என்றார். ராமாயணத்தில் இந்திரஜித் வானில் போரிட்ட காட்சி, நவீன உலகில் விமானங்கள் பறப்பது போன்ற எடுத்துக்காட்டுகளைச் கூறி நீண்ட உரை நிகழ்த்தினார். சேலம் வறண்ட மாவட்டம் என்பதால், அரசு மனது வைத்தால் திட்டத்தைச் செய்து முடிக்கலாம் என்றவர், குடிநீரை உணவின் அடிப்படை அங்கமாகக் கூறி, சேலம் நகருக்கு உடனடி குடிநீர் திட்டம் மிக அவசியம் என வலியுறுத்தினார்.

கோட்டி ரெட்டி, அரசு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சாதகமாக ஒருதலைபட்சமாக (bias) செயல்படுவதாக குற்றம்சாட்டினார். ஒரே ஒரு மாவட்டத்திற்கே நீர் வழங்குவது வெளிப்படையான அநியாயம் என்றும், இது மற்ற விவசாயிகளின் வாழ்க்கைச் செலவை அதிகரிக்கச் செய்யும் என்றும், நீர் பல மாவட்டங்களுக்கு சமமாக பகிரபட்டால் தான் நியாயம் என்று வலியுறுத்தினார்.

அரசின் நிலைப்பாடு – மறுப்பு தொடர்ந்தது

இந்த விவாதத்தில் பலரும் சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களுக்காக வலுவான வாதங்களை முன்வைத்தும், “அரசின் நிலைப்பாடு மாறவில்லை”. திட்டம் தஞ்சாவூருக்கே உகந்தது என்ற பழைய பதிலைத் தொடர்ந்தது. சேலம், கோயம்புத்தூர் மக்களின் குறைகள் மீண்டும் "நடைமுறை சாத்தியமில்லை" என்ற காரணத்தால் நிராகரிக்கப்பட்டன.

1932 மார்ச் 23 ஆம் தேதியிலான இந்த விவாதம், நீர் விநியோகத்தில் ஏற்பட்ட பிராந்திய அநீதியை வெளிப்படையாகக் காட்டியது. சேலம் மற்றும் கோயம்புத்தூர் உறுப்பினர்கள் பலமுறை வலியுறுத்தியும், “அரசு தஞ்சாவூருக்கே முன்னுரிமை’” கொடுத்தது.

“பாசனமும் குடிநீரும் இல்லாமல் வறண்ட மாவட்ட மக்கள் எதிர்கொண்ட வேதனைகள், சபையிலே பலமுறை எடுத்துக் கூறப்பட்டது.

“ஆனாலும், மானியக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, ரூ. 20,07,000 ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டது.

நீர் வரி குறைக்க ஒத்திவைப்பு தீர்மானம்

1932-ல் தஞ்சாவூர் மாவட்ட நிலங்களுக்கு புதிய நீர் வரி (Water Cess) விதிக்கும் G.O. No.1853 (5 செப்டம்பர் 1932) வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திரு. கே. எஸ். சிவசுப்பிரமணிய அய்யர் உள்ளிட்ட பலர் சட்டமன்றத்தில் தள்ளிவைப்பு மனுவை முன்வைத்தனர். முக்கிய குற்றச்சாட்டுகள்.

1. மேட்டூர் திட்டத்தின் நோக்கம் புறக்கணிப்பு திட்டத்தின் அடிப்படை நோக்கம்: பழைய பாசன நிலங்களை பாதுகாப்பது, புதிய நிலங்களை விரிவுபடுத்துவது, புதுக்கோட்டையில் ஒடுக்கப்பட்ட கள்ளர் சமூகத்தை முன்னேற்றுவது. ஆனால் புதிய விகிதங்கள் முழுவதும் உற்பத்தி அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டதால், ஆரம்ப நோக்கத்திற்கு முரண்படுகிறது.

2. அநியாயமான நீர் விகிதங்கள்

தஞ்சாவூரில் விதிக்கப்பட்ட விகிதம் ஏக்கருக்கு ரூ.15, இது, கோதாவரி, கிருஷ்ணா, பெரியார் போன்ற திட்டங்களை விட அதிகம். நெல் போன்ற பயிர்களுக்கு விலை மிகக் குறைவாக உள்ளதால் விவசாயிகள் நிகர இழப்பை சந்திக்கிறார்கள்.

3. விவசாயிகளின் பொருளாதார சுமை

பயிர் விலை வீழ்ச்சி, அதிக உழைப்புச் செலவு, கடன் வசதி இல்லாமை ஆகியவை விவசாயிகளை கடுமையாக பாதித்தது. நில உரிமையாளர்கள் நகைகள் விற்கவும், நிலங்களை ஏலத்தில் விடவும் வேண்டிய நிலைமை உருவானது.

4. இனாம் நிலங்கள் மீதான புதிய வரி வரலாற்று ரீதியாக விலக்கு பெற்ற இனாம் நிலங்களுக்கு கூட புதிய கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இது பழைய மரபுகளையும் சட்ட ரீதியான உரிமைகளையும் மீறுவதாகக் கூறப்பட்டது.

அணை ஓசை

உறுப்பினர்கள் முன்வைத்த கருத்துக்கள்

G.O. 1853-ஐ ரத்து செய்ய வேண்டும். திட்டச் செலவை விவசாயிகளிடம் ஏற்றுவது தவறு; வறண்ட நிலங்கள் பயன்படாமல் போகின்றன. தஞ்சாவூர் மாவட்டம் அரசின் வருவாயில் மிகப் பெரிய பங்காற்றுகிறது. இனாம் நிலங்களுக்கு வரி விதிப்பது முறையற்றது. பழைய பாசன நிலங்களுக்கு கூடுதல் வரி விதிப்பது தவறு. அரசு ரயத்துகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும். நெல் விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகளுக்கு கடும் சுமை; முழுமையான மறுபரிசீலனை அவசியம். நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினர்.

அரசின் பதில் (சர் ஆர்க்கிபால்டு காம்பெல்)

1924-இல் திட்டம் முன்மொழியப்பட்ட போது இந்த விகிதங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. புதிய நிலங்களுக்கு சலுகை விகிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. பாசனச் செலவுகளை ஈடு செய்ய வேண்டியதால், ரூ.15 விகிதம் நியாயமானது. உலர் நிலங்கள் ஈர நிலங்களாக மாறுவதை கட்டுப்படுத்தும் வகையில் உயர் விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. விலை வீழ்ச்சியால் சிக்கல்கள் இருப்பது உணரப்படுகிறது; எதிர்காலத்தில் குறைப்பை பரிசீலிக்கலாம். ஆனால், உடனடியாக பெரிய மாற்றங்கள் செய்ய இயலாது என்று மறுத்து விட்டார்.

முடிவு

உறுப்பினர்கள் ஒருமனதாக G.O. 1853 விவசாயிகளுக்கு தாங்க முடியாத சுமையைக் கொடுக்கிறது என்று வலியுறுத்தினர். அரசு, திட்டச் செலவை விவசாயிகளின் மீது திணிக்காமல், அவர்களின் செலுத்தும் திறனை கருத்தில் கொண்டு விகிதங்களை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

"இந்த கருத்துகளுடன், அரசாங்கம் முழு விஷயத்தையும் மறுபரிசீலனை செய்து,

தஞ்சாவூர் மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் பட்டது."

நீர் விகிதம் நேரடியாக ரயத்துகளை பாதிப்பதால், மாரத்தான் போல் விவாதம் நீண்டு நடந்து முடிந்தது. (இங்கே மிகவும் சுருக்கித் தரப்பட்டுள்ளது)

மேட்டூர் அணையால் சேலம் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பு

மேட்டூர் அணை கட்டுமானம் தொடர்பாக சபையில் கே. ஏ. நாச்சியப்ப கவுண்டர் இந்த அணை எப்போது முடிக்கப்படும், எவ்வளவு நிலப்பரப்பு மூழ்கடிக்கப்படும், எத்தனை கிராமங்கள் அகற்றப்படுகின்றன, எத்தனை வீடுகள் கையகப்படுத்தப்படுகின்றன என்பன குறித்து கேள்வி எழுப்பினார்.

அரசின் பதில், மேட்டூர் அணை 1934ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும். ஜுலையில் திறப்பு விழா காணலாம் என கூறப்பட்டது. நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பும் போது, சேலம் மாவட்டத்தில் மூழ்கடிக்கப்படும் நிலப்பரப்பின் சரியான அளவு தெரியவில்லை என்றாலும், அது சுமார் “25 சதுர மைல்கள்” என மதிப்பிடப்பட்டுள்ளது என பொத்தாம் பொதுவாக பதில் தரப்பட்டது.

இந்த அணை காரணமாக சேலம் மாவட்டத்தில் 1,496 வீடுகள் கையகப்படுத்தப்பட்டன. ஆனால், கையகப்படுத்துதலால் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறித்து அரசு துல்லியமான தகவல் தர முடியவில்லை என்று தெரிவித்தது. இதன் மூலம், மேட்டூர் அணை பாசன நன்மைகளைத் தருவதோடு, சேலம் மாவட்டத்தில் பல கிராமங்களை இடமாற்றம் செய்யவும், ஆயிரக்கணக்கான மக்களை குடியிருப்பின்றி செய்யவும் காரணமாக இருந்தது என்பது வெளிப்படையாகிறது.

மேட்டூர் திட்டப் பணிகளுக்கு மின்சார ஆற்றல் பயன்பாடு

மேட்டூர் அணை கட்டுவதற்காக மைசூர் அரசாங்கத்திடம் ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்தி, சிவசமுத்திரம் நீர் மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெற்றுக் கொள்ளப்பட்டது குறித்து நாம் ஏற்கனவே அறிந்திருந்தோம். அதன் பயன்பாட்டு விவரங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

| காலம் | பயன்படுத்திய மின்சார அளவு (யூனிட்கள்)

நவம்பர் 1928 – 31 மார்ச் 1929 6,22,532

1 ஏப்ரல் 1929 – 31 மார்ச் 1930 28,89,938

1 ஏப்ரல் 1930 – 31 மார்ச் 1931 45,90,269

100 வருடங்களுக்கு முன்பு சுமுகமான பேச்சுவார்த்தைகள் மூலம் மெட்ராஸ் மாகாண அரசும், மைசூர் அரசும் தங்கள் தேவைகளை தீர்த்துக் கொண்டதற்கான ஒரு அத்தாட்சியாக மேற்கண்ட ஒப்பந்தத்தை கருதலாம்.

இன்றும் அதுபோன்ற வாய்ப்புகளை பயன்படுத்தி நீண்ட கால தீர்வுகளை நோக்கி உரையாடல்கள் ஏற்படுத்தி அந்த முன்னெடுப்புகளால் இரு மாநில விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயன்தரத்தக்க அளவில் சூழ்நிலைகளை மாற்றம் செய்ய வேண்டிய பொறுப்பு அரசியல் தலைவர்கள் மற்றும் அரசுகளிடம் உள்ளது. மக்களிடம் அந்த எதிர்பார்ப்பும் உள்ளது.

தொடர்ந்து பயணிப்போம்!

காவிரி நன்னீர் சிறப்பு

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.