வைகறையில் தொடங்கும் ஒரு வாசகனின் பயணம் - சூ. ஆரோக்கிய புஷ்பராஜ்

சில புத்தகங்களை நாம் வாசிக்கிறோம். சில புத்தகங்கள் நம்மை வாசிக்க வைக்கின்றன. இன்னும் சில புத்தகங்கள், நாம் எவ்வளவு குறைவாக வாசித்திருக்கிறோம் என்பதை நமக்கே உணர்த்திவிடுகின்றன. டாக்டர் சங்கர சரவணனின் ‘வைகறை வாசகன் பதிவுகள்’ எனக்கு மூன்றாவது வகையைச் சேர்ந்த நூல்.

இந்த நூலை வாசித்து முடித்ததும், ‘இந்தப் புத்தகத்தில் என்ன இருக்கிறது?’ என்று கேட்டால் பதில் சொல்வது எளிது. கலைச்சொற்கள் இருக்கின்றன;

தமிழ் இலக்கியம் இருக்கிறது;

உலக இலக்கியம் இருக்கிறது;

வரலாறு இருக்கிறது;

கல்வி இருக்கிறது;

போட்டித் தேர்வுகள் இருக்கின்றன; சினிமா இருக்கிறது;

ஆளுமைகள் இருக்கிறார்கள்; புத்தகங்கள் இருக்கின்றன;

வாசிப்பு இருக்கிறது.

ஆனால் ‘இந்தப் புத்தகம் உண்மையில் எதைப் பற்றியது?’ என்று கேட்டால் என் பதில் வேறு. இது ஆர்வத்தைப் பற்றிய புத்தகம்.

தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம். தெரிந்ததைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம். ஒரு சொல்லைக் கண்டால் அதன் வேரைத் தேட வேண்டும் என்ற ஆர்வம். ஒரு புத்தகத்தை வாசித்தால் அதன் பின்னால் நிற்கும் இன்னொரு புத்தகத்தைத் தேட வேண்டும் என்ற ஆர்வம். ஒரு மனிதரைச் சந்தித்தால் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கிறதா என்று பார்க்கும் ஆர்வம்.

அந்த ஆர்வம்தான் 350 பக்கங்களுக்கு அருகில், 118 பதிவுகளாக இந்த நூலில் விரிந்திருக்கிறது.

ஒரு சொல்லுக்குள் ஒரு உலகம்:

நூலின் ஆரம்பப் பகுதிகளிலேயே என்னை மிகவும் ஈர்த்தவை ‘கவனத்துக்குரிய கலைச்சொற்கள்’ குறித்த தொடர் பதிவுகள்.

கலைச்சொல்லாக்கம் என்பது பல நேரங்களில் ‘இந்த ஆங்கிலச் சொல்லுக்கு என்ன தமிழ்?’ என்ற அளவில் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால் உண்மையில் அது அதைவிட ஆழமான அறிவுப்பணி.

ஒரு புதிய அறிவியல் கருத்தோ, தொழில்நுட்பமோ, சமூகக் கோட்பாடோ ஒரு மொழிக்குள் நுழையும்போது அதனுடன் ஒரு புதிய கருத்துலகமே நுழைகிறது. அதற்கு நாம் தேர்ந்தெடுக்கும் சொல், மற்றுமொரு சொல் மட்டுமல்ல. அந்தக் கருத்தை அடுத்த தலைமுறை எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறது என்பதற்கான அறிவுசார் கருவி அது.

அதனால்தான் கலைச்சொல்லாக்கம் மொழியியலோடு மட்டும் தொடர்புடையதல்ல; கல்வி, அறிவியல் தொடர்பாடல், மொழிபெயர்ப்பு, கருத்தாக்கம் ஆகிய அனைத்தோடும் தொடர்புடையது.

சங்கர சரவணன் அவர்கள் வெறுமனே சொல்லை மட்டும் கவனிப்பதில்லை. அதன் பயன்பாட்டைக் கவனிக்கிறார்; பொருத்தத்தைக் கவனிக்கிறார்; அது சுமக்கும் பொருளைக் கவனிக்கிறார்.

சொற்கள் அவருக்கு வெறும் தகவல் பரிமாற்றக் கருவிகள் அல்ல; விளையாட்டுப் பொருட்களும்கூட.

வைகறை வாசகன் பதிவுகள்

ஒரு சொல்லைப் பிடித்துக்கொண்டு அதன் இன்னொரு முகத்தைக் காட்டுவது, பொருளைத் திருப்புவது, அதிலிருந்து நகைச்சுவையை உருவாக்குவது, ஒரு சாதாரண உரையாடலுக்குள் எதிர்பாராத தமிழ்ச் சுவையைக் கொண்டுவருவது — அவரிடம் இயல்பாக வருகிறது. அதனால் இந்த நூலில் கலைச்சொற்களைப் பற்றிய பதிவுகளை வாசிக்கும்போது எனக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை. ‘இவர் இப்படித்தான்’ என்ற புன்னகைதான் வந்தது.

ஒரே அலமாரிக்குள் அடங்காத வாசகர்:

இந்த நூலின் உள்ளடக்கப் பட்டியலை மட்டும் வாசித்துப் பார்த்தாலே டாக்டர் சங்கர சரவணனின் வாசிப்புலகம் எவ்வளவு அகலமானது ஆழமானது என்பது தெரிந்துவிடும்.

‘கலையும் கல்வியும்’ என்று தொடங்கி, கலைச்சொற்கள், திருக்குறள், புதுமைப்பித்தன், உலக இலக்கியம், சிலப்பதிகாரம், பெண்ணியம், அப்துல்கலாம், சினிமா, நடிகர் சிவகுமார், கோபி நயினார், போட்டித் தேர்வு, பள்ளிப்பருவம், கல்லூரிக்காலம், ஐராவதம் மகாதேவன், இயக்குநர் மகேந்திரன், கவிதைகள், வாசிப்பு, பயிற்றுநரின் அனுபவங்கள் என்று பயணம் தொடர்கிறது.

ஒரு பக்கம் ‘சிலப்பதிகாரச் சிறப்புகள்’; இன்னொரு பக்கம் ‘போட்டித் தேர்வு பொது அறிவு நோக்கும் போக்கும்’.

ஒரு பக்கம் ஐராவதம் மகாதேவன்; இன்னொரு பக்கம் மகேந்திரன்.

ஒரு பக்கம் உலக இலக்கியம்; இன்னொரு பக்கம் வாசிப்பின் வாசல்கள்.

இவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தலைப்புகளின் தொகுப்பாகத் தோன்றலாம்.

ஆனால் தொடர்ந்து வாசிக்கும்போது அவற்றுக்குள் ஓர் அடிப்படை ஒற்றுமை இருப்பது தெரிகிறது. அது ஆர்வம்.

தனக்கு ஏற்கெனவே தெரிந்த துறைக்குள் மட்டுமே பாதுகாப்பாக அமர்ந்துகொள்ளாமல், அடுத்த வாசல் எங்கே திறக்கிறது என்று பார்த்துக்கொண்டே இருக்கும் ஒரு வாசகரின் ஆர்வம்.

அதனால்தான் இந்த நூலை ஒரு கட்டுரைத் தொகுப்பு என்று மட்டும் சொல்ல மனம் வரவில்லை. இது ஒரு வாசகனின் அறிவுப் பயணக் குறிப்பேடு.

ஒரு நல்ல வாசகர் நம்மையும் வாசிக்க வைப்பார். இந்த நூலின் மிக முக்கியமான சிறப்பு, சங்கர சரவணன் தான் வாசித்ததைச் சொல்லி முடித்துவிடுவதில்லை என்பதுதான்.

அவர் ஒரு நூலைக் குறிப்பிடுகிறார்.

அதிலிருந்து ஒரு எழுத்தாளரிடம் அழைத்துச் செல்கிறார். அந்த எழுத்தாளரிடமிருந்து ஒரு காலகட்டத்திற்குச் செல்கிறார். அங்கிருந்து ஒரு நிகழ்வுக்குச் செல்கிறார்.

அந்த நிகழ்விலிருந்து ஒரு புதிய கேள்வியை நம்மிடம் விட்டுவிடுகிறார்.

இதுதான் நல்ல வாசிப்பு எழுத்தின் அடையாளம்.

ஒரு நல்ல புத்தகம் நமக்கு பதில்களை மட்டும் தருவதில்லை; அடுத்த புத்தகத்திற்கான கதவையும் திறக்கிறது.

‘இதை நான் வாசிக்கவில்லையே!’ என்ற சிறிய குற்றவுணர்வையும், ‘இதையும் தேடிப் படிக்க வேண்டும்’ என்ற பெரிய ஆர்வத்தையும் ஒரே நேரத்தில் உருவாக்குகிறது வைகறை வாசகன் பதிவுகள்.

ஐராவதம் மகாதேவன்: அறிவின் முன்னால் நிற்கும் பணிவு:

இந்த நூலில் என்னை நின்று வாசிக்க வைத்த பகுதிகளில் ஐராவதம் மகாதேவனைப் பற்றிய பதிவுகளுக்கு தனியிடம் உண்டு.

டாக்டர் சங்கர சரவணன்

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிடத் தொடர்பு குறித்து அவர் கொண்டிருந்த ஆய்வுநிலை, புதிய சான்றுகள் கிடைத்தால் தன் கருத்தைத் திருத்திக்கொள்ளத் தயார் என்ற அறிவியல் மனப்பான்மை — இவற்றை சங்கர சரவணன் பதிவு செய்கிறார்.

இது மிக முக்கியமான ஒன்று.

நாம் பல நேரங்களில் ஒரு கருத்தை வைத்திருப்பதையே அறிவாக நினைத்துக்கொள்கிறோம். ஆனால் அறிவியலின் உயர்ந்த பண்பு ஒரு கருத்தை வைத்திருப்பதில் இல்லை; புதிய ஆதாரம் வந்தால் பழைய கருத்தை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பதில்தான் இருக்கிறது.

அறிவுக்கு எதிரி அறியாமை மட்டும் அல்ல.

சில நேரங்களில், ‘நான் நினைத்ததுதான் சரி’ என்ற பிடிவாதமும் அறிவுக்கு எதிரிதான். ஐராவதம் மகாதேவன் குறித்த பதிவுகள் வழியே ஒரு ஆய்வாளரின் அறிவாற்றலை மட்டுமல்ல, அவரது அறிவுசார் நேர்மையையும் நூல் நமக்குக் காட்டுகிறது.

அவரைப் பற்றிய இன்னொரு சிறிய நிகழ்வு இன்னும் அழகானது. பாராட்டப்பட வேண்டிய தருணத்தில், தனது உடல்நிலையைவிட மற்றொருவரின் நிலையை நினைக்கும் மனிதநேயம் குறித்த பதிவு.

அறிவின் உயரம் ஒருபுறம். மனிதத்தின் உயரம் மறுபுறம். இரண்டும் ஒரே மனிதருக்குள் சந்திக்கும் இடத்தைச் சங்கர சரவணன் கவனித்து பதிவு செய்கிறார்.

அதுதான் இந்த நூலின் பலம். பெரிய மனிதர்களின் சாதனைகளை மட்டும் அவர் சேகரிப்பதில்லை; அவர்களைப் பெரியவர்களாக்கிய சிறிய தருணங்களையும் சேகரிக்கிறார்.

மகேந்திரனைப் பற்றிப் பேசும்போது, சினிமாவைப் பற்றியே பேசவில்லை

‘மறக்க முடியாத மகேந்திரன்’ என்ற பதிவுகளும் எனக்கு மிகவும் பிடித்த பகுதிகள்.

தமிழ் சினிமாவில் மகேந்திரனின் பங்களிப்பைப் பற்றிப் பேசும்போது சங்கர சரவணன் ஒரு ரசிகராக மட்டும் நிற்பதில்லை. ஒரு கலைவடிவத்தின் மொழி எப்படித் திரும்பியது என்பதைப் பார்க்கிறார்.

குறிப்பாக ரஜினிகாந்தின் திரைப்பிம்ப வளர்ச்சியில் மகேந்திரனின் பங்கை அவர் அணுகும் விதம் சுவாரஸ்யமானது. அதிலும் தனது நோக்கத்தைத் தெளிவுபடுத்தும் இடம் முக்கியமானது: முழுவதுமாக ரஜினியின் ஸ்டைல் பாணிக்கு‌ மகேந்திரனே காரணம் என்று கூறாமல், அந்தப் பாணியின் வளர்ச்சியில் மகேந்திரனின் பங்களிப்பை பதிவு செய்கிறார். இந்த ஒரு எச்சரிக்கையே நல்ல விமர்சன எழுத்தின் அடையாளம்.

ரசிப்பது வேறு; மிகைப்படுத்துவது வேறு.

சங்கர சரவணன் சினிமாவை நேசிக்கிறார். ஆனால் அந்த நேசம் அவருடைய பார்வையை மூடுவதில்லை.

மகேந்திரனைப் பற்றிய பதிவுகளில் அவரது சினிமா ஆர்வத்தையும் தாண்டி இன்னொரு விஷயத்தைக் காண முடிகிறது: ஒரு கலைஞனின் தனித்துவத்தை உருவாக்கிய கூட்டுப் பங்களிப்புகளை மதிக்கும் மனம். அதனால்தான் ‘Uncompromising Attitude and Spirit of Team Work’ என்ற இரண்டு பண்புகளை மகேந்திரனின் வெற்றியோடு இணைத்துப் பார்க்கும் பதிவு பொருத்தமாகத் தெரிகிறது.

சினிமா அவருக்கு பொழுதுபோக்கு மட்டுமல்ல. அதுவும் ஒரு பாடநூல்தான்.

புத்தகங்களுக்குள் மனிதர்கள்; மனிதர்களுக்குள் கதைகள்:

இந்த நூல் முழுவதும் புகழ்பெற்ற மனிதர்கள் வருகிறார்கள். எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள், கலைஞர்கள், திரைப்பட ஆளுமைகள்...ஆனால் அவர்களைப் பற்றிய பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது பெயர்களின் பிரமாண்டம் அல்ல.

மனிதர்களை அவர் பார்க்கும் விதம்.

ஒருவருடைய சாதனையைச் சொல்லும்போது, அதற்குப் பின்னால் இருந்த உழைப்பைப் பார்க்கிறார். ஒருவருடைய அறிவைப் பற்றிப் பேசும்போது, அவருடைய பணிவைக் கவனிக்கிறார். ஒரு கலைஞரைப் பற்றிப் பேசும்போது, அவரது படைப்பின் பின்னால் இருக்கும் ஒழுக்கத்தைக் கவனிக்கிறார். இது அவரது எழுத்தின் தன்மையா, அவரது மனித இயல்பா என்று பிரித்துச் சொல்ல முடியவில்லை.

அவரும் நானும்:

நான் அறிந்த சங்கர சரவணன் அவர்கள் முதன்மையாக, தமிழ் இலக்கிய பாடத்தை UPSC optional ஆக எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்/பயிற்றுநர். துரதிர்ஷ்டவசமாக அவரிடம் நேரடியாக தமிழ் கற்க வாய்‌ப்பில்லாமல் போய்விட்டது.

நல்ல ஆசிரியர் பாடம் சொல்லித் தருகிறார். மிக நல்ல ஆசிரியர் மாணவன் தன்னைத் தானே கண்டுபிடிக்க உதவுகிறார். சங்கர சரவணன் சார் இரண்டாவது வகை.

சந்திக்கும் போதெல்லாம் அவர் எனக்குப் பல புத்தகங்களைத் தருபவர்; அதைவிட முக்கியமாக நிறைய எழுதும்படி ஊக்குவிப்பவர். எப்போது அவரைச் சந்திக்கும் போதும் மாறாத அன்பு.

அதனால் இந்தப் புத்தகத்தை நான் முழுக்க முழுக்க ஒரு நடுநிலை வாசகராக மதிப்பிடுகிறேன் என்று சொன்னால் அது பொய்யாகிவிடும். இந்தப் புத்தகத்துக்குள் நான் அறிந்த மனிதரும் இருக்கிறார். அதுவே என் வாசிப்பை இன்னும் நெருக்கமாக்கியது. அவருடைய நகைச்சுவைக்கும் ஒரு அறிவு இருக்கிறது

அவருடைய இன்னொரு குறிப்பிடத்தக்க இயல்பு — நகைச்சுவை.

அது தனியாகச் சொல்லப்படும் joke அல்ல. உரையாடலின் நடுவில் ஒரு சொல்லைத் திருப்பி வைத்து வரும் நகைச்சுவை. தன்னையே கலாய்த்து சிரித்துக்கொள்ளும் நகைச்சுவை.

அவரது பழைய நேர்காணலில் WhatsApp DP-யில் ஏன் எப்போதும் வள்ளுவர் என்று கேட்கப்பட்டபோது, வள்ளுவர் மனதிற்கு நெருக்கமானவர் என்பதோடு, தனது படத்தை விதவிதமாக வைப்பதில் உள்ள கூச்சமும், தினமும் மாற்றுவதற்கான சோம்பேறித்தனமும் காரணம் என்று சொல்லும் பதில் அப்படிப்பட்டது. அங்கேயும் ஒரு சங்கர சரவணன் இருக்கிறார். தமிழார்வம் இருக்கிறது.

வள்ளுவர் இருக்கிறார். அதற்குள் சுயஎள்ளலும் இருக்கிறது. அவருடைய எழுத்தை வாசிக்க இலகுவாக்குவதில் இந்த இயல்புக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.

இந்த நூலையும், அவருடைய பணிகளையும் சேர்த்துப் பார்க்கும்போது அவருடைய தமிழார்வத்தில் எனக்குப் பிடித்த அம்சம் ஒன்று தெளிவாகத் தெரிகிறது.

அது வெறும் பழம்பெருமை பேசும் தமிழ்ப்பற்று அல்ல. தமிழில் புதிய அறிவு வர வேண்டும். புதிய கலைச்சொற்கள் உருவாக வேண்டும். உயர்கல்வி தமிழில் அணுகத்தக்கதாக வேண்டும். பழைய நூல்கள் மீண்டும் வாசகர்களிடம் வர வேண்டும். உலக அறிவு தமிழுக்குள் வர வேண்டும். தமிழிலிருந்து உலகிற்கும் படைப்புகள் செல்ல வேண்டும்.

அவருடைய பாடநூல் கழகப் பணிகள் குறித்த பழைய நேர்காணலில் இதற்கான பல சான்றுகள் இருக்கின்றன. 1960–70களில் வெளியான நூல்களை மீட்டெடுத்தல், மறுபதிப்பு செய்தல், பல்வேறு அறிவுத்துறைகளுக்கான நூல்களைத் தமிழில் கொண்டுவருதல், தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு இணைப்புப் பாடநூல்கள் தேவை என்று வலியுறுத்துதல் — இவை அனைத்தும் ஒரே சிந்தனையின் வெவ்வேறு வடிவங்கள்.

மொழிப்பற்று என்பது மொழியின் கடந்தகாலத்தை வணங்குவது மட்டும் அல்ல; அதன் எதிர்காலத்திற்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதும் ஆகும். இந்தப் பார்வை எனக்கு முக்கியமானதாகத் தோன்றுகிறது.

இந்த நூலின் பலம் என்ன?

வைகறை வாசகன் பதிவுகள் ஒரு குறிப்பிட்ட துறையின் ஆழமான ஆய்வு நூல் அல்ல. அதுவாக இருப்பதாக அது பாவனையும் செய்யவில்லை. அதன் பலம் வேறு. அறிவுத் துறைகளுக்கு இடையே வாசகனை நகர்த்துவது.

கலைச்சொல்லிலிருந்து கல்விக்கு.

கல்வியிலிருந்து இலக்கியத்திற்கு.

இலக்கியத்திலிருந்து வரலாற்றுக்கு.

வரலாற்றிலிருந்து ஆளுமைகளுக்கு.

ஆளுமைகளிலிருந்து சினிமாவுக்கு.

சினிமாவிலிருந்து மீண்டும் வாசிப்புக்கு. இன்றைய வாசிப்புலகில் இது தேவையான ஒன்று.

ஏனெனில் நாம் increasingly specialised ஆகிக்கொண்டிருக்கிறோம். மருத்துவர் மருத்துவத்தை மட்டும் வாசிக்கிறார்; பொறியாளர் தொழில்நுட்பத்தை மட்டும்; தேர்வர் தேர்வுக்கான குறிப்புகளை மட்டும்; இலக்கிய வாசகர் சில நேரங்களில் இலக்கியத்தை மட்டும். ஆனால் நல்ல அறிவு பல நேரங்களில் துறைகளின் எல்லையில் பிறக்கிறது. ஒரு துறையிலிருந்து இன்னொரு துறைக்குச் செல்லத் தயங்காத மனமே புதிய தொடர்புகளைக் கண்டுபிடிக்கிறது. இந்த நூல் அந்த மனநிலையைத் தூண்டுகிறது.

இந்த நூலின் சாதனையும் சவாலும்:

ஒரு நூலை நேசிப்பது அதன் எல்லா அம்சங்களையும் பாராட்டுவது அல்ல.

118 பதிவுகள் கொண்ட இத்தகைய தொகுப்பில் இயல்பாகவே பதிவுகளின் ஆழமும் நீளமும் ஒரே அளவில் இல்லை. சில பதிவுகள் நம்மை நீண்ட நேரம் நிறுத்துகின்றன; சில பதிவுகள் ஒரு தகவல் அல்லது நினைவுக்குறிப்பின் வேகத்தில் கடந்து செல்கின்றன. சில இடங்களில் ஒரு தலைப்பை இன்னும் விரிவாக அவர் எழுதியிருக்கலாமே என்ற ஆசையும் வருகிறது.

ஆனால் அதையே இந்த நூலின் வடிவத்தின் இயல்பாகவும் பார்க்க முடிகிறது. இது ஒரு பெரிய நதியின் ஒரே பயணம் அல்ல. பல இடங்களில் தோன்றும் சிற்றோடைகள் ஒன்றாகச் சேர்ந்து உருவாக்கும் வாசிப்பு நிலப்பரப்பு. அதில் நமக்குப் பிடித்த ஓடையைத் தேர்ந்தெடுத்து மேலே நடந்து செல்ல வேண்டியது வாசகரின் வேலை.

‘வைகறை வாசகன்’ என்ற பெயர்

‘வைகறை வாசகன்’ என்பது சங்கர சரவணன் வைத்துக்கொண்ட பெயராக மட்டும் எனக்குத் தோன்றவில்லை.

ஒவ்வொரு நாளும் தனக்குத் தெரியாத ஒன்றின் முன் புதிதாக நிற்கத் தயாராக இருக்கும் வாசகனின் பெயர் அது.

பெரியோரை வியத்தல்:

தன்னை உருவாக்கிய மனிதர்களை வியந்து அவர்களைப் பற்றி பதிவு செய்கிறார்.

தன்னை ஊக்குவித்த ஆசிரியர்கள்.

நண்பர்கள்.

எழுத்தாளர்கள்.

ஆய்வாளர்கள்.

அதிகாரிகள்.

கலைஞர்கள்.

மாணவர்கள் என

தான் வளர்ந்த பாதையில் யார் யார் கை கொடுத்தார்கள் என்பதை மறக்காமல் குறிப்பிடுகிறார். அது மிகவும் பிடித்திருக்கிறது. ஏனெனில் இன்று அவரைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கும் நான், அந்தச் சங்கிலியின் இன்னொரு முனையில் நிற்கிறேன்.

டாக்டர் சங்கர சரவணன் எழுதியிருப்பது 118 பதிவுகள். ஆனால் அவர் உருவாக்கியிருக்கும் வாசகர்களின் பதிவுகள் இன்னும் எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அவற்றில், இந்த மதிப்புரையும் ஒன்று.

கட்டுரை ஆசிரியர்: வணிகவரித்துறை உதவி ஆணையர்.

புத்தகத்தை ஆன்லைனில் பெற க்ளிக் செய்க....

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.