தனியார் பல்கலைக்கழகங்களுக்கு திறக்கப்படும் கதவுகள்! - இது யாருடைய நலனுக்காக முதல்வர் விஜய் அவர்களே.!

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)

‘தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதா 2026’-ஐ தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு நிறைவேற்றியிருக்கிறது.

“உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களை உருவாக்குவதே இதன் நோக்கம்” என்று அரசு கூறுகிறது. ஆனால், இந்தச் சட்டத் திருத்தத்தைப் படித்துப்பார்க்கும்போது, தமிழகத்தின் உயர் கல்வியை முழுக்க முழுக்க வணிகமயமாக்குவதையே இது நோக்கமாகக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

தமிழகத்திலுள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகள் எதிர்காலத்தில் தனியார் பல்கலைக்கழகங்களாக மாறுவதற்கான வாய்ப்பை இந்தச் சட்டத் திருத்தம் உருவாக்கக்கூடும் என்ற அச்சம் எழுகிறது. எனவே, இந்தச் சட்டம் உண்மையில் யாருக்குச் சாதகமாக இருக்கிறது என்ற அடிப்படைக் கேள்வியை நாம் கேட்க வேண்டியிருக்கிறது.

உயர் கல்வி


அரசு உதவி பெறும் கல்லூரிகளை எதிர்காலத்தில் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கான வாய்ப்பு தொடர்பான அம்சம், முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மசோதாவிலேயே இருந்தது என்ற வாதத்தை இந்தச் சட்டத்தை ஆதரிப்பவர்கள் முன்வைக்கிறார்கள். தற்போதைய திருத்தச் சட்டத்தில் அந்த அம்சம் வெளிப்படையாக இல்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

உயர்கல்வி அமைச்சரும், “அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றுவது அரசின் நோக்கம் அல்ல” என்று கூறுகிறார். அரசின் நோக்கம் அப்படி இல்லாமல் இருக்கலாம். ஆனால், சட்டத்தின் விதிகள் வேறு ஒரு வாய்ப்பை உருவாக்கினால் என்ன செய்வது?

இதற்கு சென்னை துரைப்பாக்கத்திலுள்ள டி.பி. ஜெயின் கல்லூரி விவகாரத்தை ஒரு முக்கியமான உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.  50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு உதவி பெறும் கல்லூரியாகச் செயல்பட்ட அந்த நிறுவனம், அரசிடமிருந்து பல்வேறு மானியங்களையும் வசதிகளையும் பெற்றுவந்தது. பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுதவியுடனும் அங்கு கட்டடங்கள் எல்லாம் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு கட்டத்தில், “எங்கள் கல்லூரியில் ஆசிரியர்களை அரசு நியமிக்கவில்லை… அதனால், அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை” என்று கூறி, அந்தப் பாடப்பிரிவுகளை அரசிடம் ஒப்படைக்கப்படைக்கிறோம்” என்று அந்தக் கல்லூரி நிர்வாகம் கூறியது.

இங்கு எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. ஆசிரியர்கள் தேவைப்பட்டால், அரசு அவர்களை நியமித்திருக்கலாமே? வேறு கல்லூரிகளில் இருந்து ஆசிரியர்களைப் பணியிட மாற்றம் செய்திருக்கலாமே? அல்லது சிறுபான்மை நிர்வாகமே ஆசிரியர்களைத் தேர்வு செய்து நியமித்து, அதற்கான அரசின் ஒப்புதலைப் பெற்றிருக்கலாமே? ஆனால், இத்தனை வழிகள் இருந்தும், அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகள் மூடப்படும் நிலை ஏன் ஏற்பட்டது?

இன்று அந்த கல்வி நிறுவனம் முழுமையான சுயநிதிக் கல்லூரியாகச் செயல்படுகிறது. நாளை அந்தக் கல்லூரியே மூடப்பட்டு, அதே இடத்தில் ஒரு தனியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டால் என்ன ஆகும்? “முடியாது” என்று சொல்லும் அதிகாரம் அரசுக்கு இருக்கிறதா? இதுதான் எனது முக்கியமான கவலை.


இன்னோர் உதாரணத்தையும் குறிப்பிட விரும்புகிறேன். சென்னை தியாகராய நகரில் செயல்பட்டுவந்த ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, “போதுமான மாணவர்கள் இல்லை” என்று காரணம் சொல்லி, கடந்த மே 31-ம் தேதி மூடப்பட்டதாகக் சொல்லப்பட்டது. ஆனால், ஜூன் 1-ம் தேதி அதே இடத்தில், அதே நிர்வாகத்தின் கீழ், ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது.

ஓர் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனத்தை “மாணவர்கள் இல்லை” என்று கூறி மூடிவிட்டு, மறுநாளே அதே இடத்தில் வேறு வகையான கல்வி நிறுவனத்தைத் தொடங்க முடிகிறது என்றால், அரசு அதைப் பற்றி கேள்வி கேட்க வேண்டாமா?

ஒரு கல்வி நிறுவனத்தின் வடிவத்தை மாற்றுவதற்கு இப்படிப்பட்ட வாய்ப்புகள் உருவாகும்போது, நாளை உயர் கல்வியிலும் இதேபோன்ற மாற்றங்கள் நடக்காதா என்ற அச்சம் ஏற்படுகிறது.

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு

12 ஏக்கர்... 18 ஏக்கர்... ஏன்?

த.வெ.க அரசு கொண்டுவந்திருக்கும் சட்டத் திருத்தத்தில், நிலம் தொடர்பான விதிகள் தளர்த்தப்பட்டிருப்பதும் கவனிக்க வேண்டிய விஷயம். சென்னையில் 12 ஏக்கர், பிற மாநகராட்சிப் பகுதிகளில் 18 ஏக்கர், மற்ற பகுதிகளில் 25 ஏக்கர் நிலம் இருந்தால் போதும்… தனியார் பல்கலைக்கழகம் தொடங்கவிட முடியும். அந்த அளவுக்கு விதிகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன. அதேபோல், இதுவரை ரூ.50 கோடியாக இருந்த அறக்கட்டளை வைப்பு தொகை, ரூ.25 கோடியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த அளவுகள் எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டன என்பது முக்கியமான கேள்வி.

ஒரு பல்கலைக்கழகத்தில் எத்தனை துறைகள் இருக்கும்? ஆய்வகங்கள், நூலகங்கள், ஆய்வு மையங்கள், மாணவர் வசதிகள் ஆகியவற்றுக்கு எவ்வளவு இடம் தேவைப்படும்? இவை அனைத்தையும் அறிவியல் அடிப்படையில் கணக்கிட்டுத்தான் நில அளவு நிர்ணயிக்கப்பட்டதா? அல்லது, ஏற்கெனவே குறிப்பிட்ட அளவு நிலம் வைத்திருக்கும் சில நிறுவனங்களுக்கு சாதகமாக இந்த விதிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றனவா? இந்த கேள்விகளுக்கு தெளிவான பதில்களை அரசு அளிக்க வேண்டும்.


என்னைப் பொறுத்தவரை, இந்த விவகாரத்தில் மிக முக்கியமாக எழும் கேள்வி இடஒதுக்கீடு பற்றியதுதான். அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும், அரசு கல்லூரிகள், அரசு பல்கலைக்கழகங்களிலும் சமூகநீதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது.

ஆனால், அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, நிறுவனங்கள் சுயநிதிக் கல்லூரிகளாக மாறினால், இடஒதுக்கீட்டின் நிலை என்னவாகும்? அதே நிறுவனம் நாளை தனியார் பல்கலைக்கழகமாக மாறினால், மாணவர்களின் கல்வி கட்டணம் எந்த அளவுக்கு உயரும்? “செலவுக்கு ஈடுகட்டும் வகையில் கட்டணம் வசூலிக்கலாம்” என்ற அணுகுமுறை வலுப்பெற்றால், அந்தச் செலவை யார் சுமப்பார்கள்?

இத்தகைய நிலை உருவானால், நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களும், அடித்தட்டு குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களும் என்ன செய்வார்கள்?

உயர்கல்வி என்பது திறமை இருக்கும் அனைவருக்கும் கிடைக்கும் வாய்ப்பாக இல்லாமல், அதிக கட்டணம் செலுத்தக்கூடியவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வாய்ப்பாக மாறிவிடுமோ என்ற கவலை எழுகிறது.

விஜய்


பல அரசு பல்கலைக்கழகங்கள்!

இங்கு, இன்னொரு முரண்பாட்டையும் பார்க்க வேண்டியிருக்கிறது. சென்னைப் பல்கலைக்கழகம் முதல் அண்ணா பல்கலைக்கழகம் வரை பல பல்கலைக்கழகங்கள் சென்னையில் செயல்பட்டுவருகின்றன. மருத்துவம், சட்டம், ஆசிரியர் கல்வி, திறந்தநிலைக் கல்வி எனப் பல்வேறு துறைகளுக்கான அரசு பல்கலைக்கழகங்களும் ஏற்கெனவே இயங்கிவருகின்றன.

ஆனால், அவற்றில் பல நிறுவனங்களில் நிரந்தர ஆசிரியர் பணியிடங்கள் போதுமான அளவில் நியமிக்கப்படவில்லை. பல துறைகள் நிரந்தர ஊழியர்கள் இல்லாமல் திண்டாடுகின்றன. அப்படியிருக்க, அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு போதுமான நிதியை வழங்கி, நிரந்தர ஆசிரியர்கள், பணியாளர்களை நியமித்து, அவற்றின் தரத்தை உயர்த்துவதுதானே அரசின் முதல் கடமையாக இருக்க வேண்டும்? அதை விடுத்து, குறைந்த நிலப்பரப்பில் தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கான விதிகளைத் தளர்த்துவது ஏன்?

அரசுப் பல்கலைக்கழகங்களை வலுப்படுத்தாமல் தனியார் பல்கலைக்கழகங்களை அதிகரிப்பது, ஏற்கெனவே பலவீனமாக இருக்கும் அரசு உயர் கல்விக் கட்டமைப்பை மேலும் பலவீனப்படுத்தாதா?

சமூகநீதி எங்கே?



“சமூகநீதி” என்ற கொள்கையை முன்னிறுத்தும் அரசு, உயர் கல்வியில் தனியார் மயமாக்கலுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பது முரண்பாடாக இருக்கிறது. தனியார் பல்கலைக்கழகங்கள் வந்தால், சமூகநீதி என்னவாகும்?  இடஒதுக்கீடு எப்படி உறுதி செய்யப்படும்? பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வி எப்படி கிடைக்கும்? கட்டண உயர்வால் ஏழை, நடுத்தர வர்க்க மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு என்ன உத்தரவாதம்?

சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் போன்றவை வெறும் பட்டங்களை வழங்கும் நிறுவனங்கள் அல்ல. பல தலைமுறைகளாக ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், பொறியாளர்கள், நிர்வாகிகள் என சமூகத்தின் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை உருவாக்கிய பொதுக் கல்வி நிறுவனங்கள்.

அப்படிப்பட்ட நிறுவனங்களை வலுப்படுத்தாமல், “உலகத் தரம்” என்ற பெயரில் புதிதாக தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பது சரியான பாதையா?

ஒருபுறம் நிதிப் பற்றாக்குறை, மறுபுறம் நிரந்தர ஆசிரியர் பற்றாக்குறை, இன்னொருபுறம் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு விதிகள் தளர்வு. இந்த மூன்றும் ஒன்றாகச் சேர்ந்தால், தமிழ்நாட்டின் உயர்கல்வி எந்தத் திசையில் செல்கிறது என்ற கேள்வியைத் தவிர்க்க முடியாது.

பட்டப்படிப்பு


ஒரு நல்ல பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கு நிலத்தின் அளவு மட்டும் போதாது. தரமான ஆசிரியர்கள் வேண்டும். ஆய்வுக்கான நிதி வேண்டும். நூலகங்கள், ஆய்வகங்கள், மாணவர்களுக்குத் தேவையான வசதிகள் வேண்டும். அதைவிட முக்கியமாக, சமூகத்தின் அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் உயர் கல்வி கிடைக்க வேண்டும் என்ற பொது நோக்கம் இருக்க வேண்டிய அவசியம்.

 ஒரு காலத்தில் அரசு நிதியில் உருவாக்கப்பட்ட கல்லூரிகள், பிற்காலத்தில் சுயநிதிக் கல்லூரிகளாக மாறின. அதற்குப் பிறகு தனியார் பல்கலைக்கழகங்களாக மாறின. இந்தப் பாதையில் உயர் கல்வி தொடர்ந்து நகர்ந்தால், அடுத்த தலைமுறையின் கல்வி உரிமை பாதிக்கப்படாதா?

முதன்மையாக கேள்வி ஒன்றுதான்: “

அரசுப் பல்கலைக்கழகங்களை வலுப்படுத்தாமல், தனியார் பல்கலைக்கழகங்களுக்குக் கதவைத் திறப்பது, யாருடைய நலனுக்காக?”

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.