AI-யால் ஆபத்தா? பொன் முட்டையிடும் வாத்தை அறுக்காதீர்கள் - ட்ரம்ப் தரும் விளக்கம் என்ன?

ஓபன் ஏஐ, ஆந்த்ரோபிக், க்ரோக் ஆகிய மூன்றுமே முக்கிய மற்றும் பெரிய நிறுவனங்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் ஏ.ஐ. ஆப்கள் ஆகும்.

இந்த மூன்று நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் முறையே சாம் ஆல்ட்மேன், டாரியோ அமோடேய் மற்றும் எலான் மஸ்க் ஏ.ஐ.யின் வேகத்தைக் கொஞ்சம் குறைக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்கள்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தடுக்க, நெறிமுறைப்படுத்தல், இவை முழுக்க முழுக்க மனிதனின் கட்டுப்பாட்டில் இயங்குவதற்கான வழியை வகுப்பதற்காகப் போன்றவற்றுக்காக ஏ.ஐ.யின் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

AI

ஆனால், இதில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு உடன்பாடு இல்லை போலும்.

இது குறித்து தனது ட்ரூத் சமூக ஊடகப் பக்கத்தில் டிரம்ப் தொடர்ந்து பதிவிட்டுள்ளார். அவை...

முதல் பதிவு: அதிக IQ கொண்ட அதிபர்

"ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்குத் தேவையான ஒரே கட்டுப்பாடோ அல்லது ‘வேலியோ’ புத்திசாலித்தனமான (உயர்ந்த IQ கொண்ட) அதிபர்தான். அது அமெரிக்காவிற்குத் தாராளமாகவே கிடைத்துள்ளது!

இப்போது ‘உத்தமன்’ போல வேடமிடும் டாரியோ (ஆந்த்ரோபிக்) போன்ற ஏ.ஐ. ‘மனிதர்கள்’ தவறான அல்லது ஆபத்தான ‘காரியங்களைச் செய்வதை’ டிரம்ப் நிர்வாகம் தடுத்து நிறுத்தியுள்ளது. நாங்கள் அதைத் தொடர்ந்து செய்வோம்!

இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே அமெரிக்காவிடம் நல்ல திறமையான குற்றவியல் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரங்கள் உள்ளன.

ஏ.ஐ. மற்றும் தரவு மையங்களுக்கு எதிராக ஒரு கேவலமான சதித்திட்டம் நடந்து வருகிறது. இதில் மகிழ்ச்சியடையும் ஒரே நாடு சீனாதான். ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களே உலகை வெல்வார்கள்!

அமெரிக்கா, சீனாவையும் மற்ற அனைவரையும் விட முன்னணியில் இருக்கிறோம். தொடர்ந்து முன்னணியிலேயே இருப்போம். சதித்திட்டம் தீட்டுபவர்களே, தேசத்துரோகிகளே, துரோகிகளே, தகவல்களைக் கசியவிடுபவர்களே, எச்சரிக்கையாக இருங்கள்!"

AI  | ஏ.ஐ
AI | ஏ.ஐ

இரண்டாவது பதிவு: பொன் முட்டையிடும் வாத்தை...

"ஏ.ஐ.யைப் பற்றியும் தரவு மையங்களைக் குறித்தும் இந்தத் திடீர் பேச்சுகளுக்கு ஒரே காரணம், அமெரிக்கா மற்ற அனைத்து நாடுகளையும் விட ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் வெகுவாக முன்னணியில் இருப்பதுதான்.

பொன் முட்டையிடும் வாத்தை அறுத்துவிடாதீர்கள்!"

மூன்றாவது பதிவு: பொய்ப் பிரசாரம்

"ஏ.ஐ.யைப் பொறுத்தவரை, வணிக வரலாற்றிலேயே எப்போதாவது ஒரு துறையின் முன்னணி தலைவர்கள் தங்களையே அழிவிற்கும் திவால் நிலைக்கும் தள்ளிவிடும் ஒரு கட்டுப்பாட்டை அரசிடம் கேட்டுப் பார்த்ததுண்டா?

ஏ.ஐ. உலகத்தைக் கைப்பற்றிவிடும், மனிதகுலத்தையே அழித்துவிடும் என்றெல்லாம் சொல்வது ஒரு அப்பட்டமான பொய்ப் பிரசாரம்."

நான்காவது பதிவு: தீய புரட்சியாளர்கள்

"ஏ.ஐ. உலகையே அழித்துவிடும் என்றும், தரவு மையங்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு ஆபத்தானவை என்றும் சொல்பவர்கள் வேறு யாருமில்லை.‘காலநிலை மாற்றம்’ உலகத்தை அழித்துவிடும் என்று கொஞ்சக் காலத்திற்கு முன்பு கதையளந்த அதே ஆட்கள்தான்.

அந்தப் பொய்ப் பிரசாரம் அவர்களுக்கு வேலைக்காகாமல் போனதால், இப்போது அடுத்த விஷயத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.

இவர்கள் புரட்சியாளர்கள்தான். ஆனால் கெட்ட மற்றும் தீய காரியங்களுக்காகச் செயல்படும் புரட்சியாளர்கள்.

அமெரிக்காவின் நலனில் கொஞ்சமும் அக்கறை இல்லாத சிலருக்காகத்தான் இவர்கள் பணியாற்றுகிறார்கள் என்பதை விரைவிலேயே நீங்கள் புரிந்துகொள்வீர்கள்!"

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.