48 லேப்ஸ்; 282.8 கி.மீ கவரேஜ்! - ரேஸில் அஜித் எத்தனையாவது இடம் பிடித்தார்? - உண்மை என்ன?
லண்டனின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடந்த Michelin Le Mans Cup கார் ரேஸ் பந்தயத்தில் நடிகர் அஜித் கலந்து கொண்டிருந்தார். சிறப்பு விருந்தினராக இந்த ரேஸூக்கு வந்த முதல்வர் விஜய், ரேஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார். விஜய்யும் அஜித்தும் கட்டியணைத்து நட்பை பகிர்ந்து கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் பயங்கர வைரல்.
ஆனால், இந்த ரேஸில் அஜித் எத்தனையாவது இடம் பிடித்தார் என்பதில் குழப்பமான தகவல்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. சில ஊடக நிறுவனங்கள் அஜித் மூன்றாம் இடம் பிடித்ததாகவும் சில நிறுவனங்கள் 9 ஆம் இடம் பிடித்ததாகவும் இன்னும் சிலர் அஜித்தின் கார் 38 வது இடம் பிடித்ததாகவும் பதிவு செய்திருக்கின்றனர். உண்மையில் அஜித் எத்தனையாவது இடம்தான் பிடித்தார்?
ரேஸில் அஜித் எத்தனையாவது இடம் பிடித்தார் என்பதற்கு முதலில் இந்த ரேஸின் தன்மையைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும். லண்டனின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடந்த இந்த ரேஸ் Endurance வகை ரேஸ். அதாவது, யார் முதலில் இலக்கை அடைந்தார் என்கிற பாணியில் இல்லாமல், குறிப்பிட்ட நேரத்தில் யார் அதிக லேப்ஸ்களை நிறைவு செய்கின்றனர் என்பதை பொறுத்து வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவர். உதாரணமாக கொடுக்கப்பட்ட 2 மணி நேரத்தில் ஒரு கார் 50 லேப்ஸையும் இன்னொரு கார் 48 லேப்ஸையும் நிறைவு செய்கிறது எனில், 50 லேப்ஸை நிறைவு செய்த கார்தான் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்படும்.

இந்த Michelin Le Mans Cup ரேஸில் மொத்தம் 45 கார்கள் போட்டியில் பங்கேற்க பதிவு செய்திருந்தன. ஒரு கார் போட்டியில் பங்கேற்கவில்லை. கடைசியாக 44 கார்கள்தான் போட்டியில் பங்கேற்றன. ஒரு காருக்கு இரண்டு டிரைவர்கள் இருப்பார்கள். போட்டியின் அவகாசம் 2 மணி நேரம். அதற்குள் அதிக லேப்ஸை சுற்றிவரும் காரும் டிரைவர்களும் வின்னர். போட்டியில் பங்கேற்றதில் அஜித்தின் Ajith Redant by Virage டீமும் ஒன்று.
ரேஸில் கலந்துகொண்ட இந்த 44 கார்களும் ஒரே வகையிலான ஒரே கேட்டகரியிலான கார்கள் கிடையாது. இந்த ரேஸில் LMP3, LMP3 Pro/Am, GT3 என மூன்று வகையிலான கார்கள் கலந்துகொண்டிருந்தன. LMP3, LMP3 Pro/Am என்பவை ரேஸிங்குக்கு என்றே உருவாக்கப்பட்ட கார்கள். LMP3 வகை காரில் FIA (International Automobile Federation) இன் மதிப்பீட்டுப்படி சில்வர் அல்லது கோல்டு லெவலில் இருக்கும் டிரைவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அதேநேரத்தில் LMP3 Pro/Am காரில் ஒரு Bronze Level டிரைவர் கட்டாயம் இருக்க வேண்டும். அஜித்தின் கார் இந்த LMP3 Pro/Am கேட்டகரியை சேர்ந்தது. FIAயின் மதிப்பீட்டுப்படி அஜித் Bronze Level டிரைவர். அதாவது அனுபவம் குறைவான ஆரம்ப நிலையில் இருக்கும் டிரைவர். அஜித்துடன் களமிறங்கிய சகவீரர் ரோமன் வோஸ்னிக் சில்வர் லெவல் டிரைவர்.

இவர்கள் இருவரும் ஒரு டீம். GT3 என்கிற இன்னொரு வகை கார்களும் ரேஸில் கலந்துகொண்டன. அவை வணிக நோக்கத்தில் சாலைகளில் பயணிக்கும் திறனில் உருவாக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் கார்கள். 24 LMP3 கார்கள், 11 LMP3 Pro/AM கார்கள், 10 GT3 கார்கள் என இந்த 3 வகையான கார்களும் இணைந்துதான் இந்த ரேஸில் கலந்து கொண்டன.
Endurance ரேஸ் என்பது 24 மணி நேரம் வரைக்கும் தொடர்ந்து கார் ஓட்டும் வகையிலான ரேஸ். அதன் தொடக்கநிலைதான் இந்த Le Mans ரேஸ். இங்கே போட்டி 2 மணி நேரம் மட்டுமே நடக்கும். இரண்டு டிரைவரில் ஒரு டிரைவர் கட்டாயம் 45 நிமிடங்களுக்கு கார் ஓட்டியாக வேண்டும். அந்த வகையில்தான் ரோமனும் அஜித்தும் இணைந்து ரேஸில் கலந்துகொண்டனர். சில்வர் ஸ்டோன் சர்க்யூட்டில் ஒரு லேப்பின் தூரம் 5.8 கி.மீ. ரேஸில் கொடுக்கப்பட்ட 2 மணி நேரத்தில் 51 லேப்ஸ்களை நிறைவு செய்து ANS Motorsport என்கிற டீம் முதலிடம் பிடித்தது. அஜித்தின் Ajith Redant by Virage டீம் 48 லேப்ஸ்களை நிறைவு செய்து 38 வது இடத்தை பிடித்தது. எனில், அஜித்தின் அணி மூன்றாவது இடம் பிடித்தது என்கிற தகவல் எப்படி பரவியது?

இந்த ரேஸில் Team Virage என்கிற அணி மூன்றாவது இடம் பிடித்திருக்கிறது. அஜித்தின் அணியிலும் Virage என்கிற பெயர் இடம்பெற்றிருப்பதால் அஜித்தின் அணிதான் மூன்றாவது இடம் பிடித்துவிட்டது என குழப்பமடைந்துவிட்டனர். உண்மையில் Virage என்பது ரேஸூக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை செய்து கொடுக்கும் நிறுவனமே. அந்த Virage இன் தொழில்நுட்ப உதவிகளை அஜித்தின் அணியும் பெற்றுவருகிறது. அதனால்தான் அஜித்தின் அணியின் பெயரில் by Virage எனக் கூறப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் Team Virage என்பது அந்த நிறுவனமே நேரடியாக களத்தில் இறக்கிய அணி. அது அஜித்தின் அணி அல்ல.
ஒட்டுமொத்தமாக அஜித்தின் கார் 48 லேப்ஸை நிறைவு செய்து 282.8 கி.மீ ஓடி 38 வது இடத்தை பிடித்திருக்கிறது. அஜித் ஓட்டிய LMP3 Pro/Am வகையில் மட்டும் 11 கார்கள் ரேஸில் ஓடியதல்லவா? இந்த 11 கார்களை மட்டும் எடுத்துக் கொண்டாலும், அஜித்தின் கார் 10 வது இடத்தையே பிடித்திருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


