காஞ்சிபுரம்: பிரவசத்தில் தாய், சேய் இறப்பு; விறகு வியாபாரிமீது பாய்ந்த வழக்கு! - பின்னணி என்ன?

காஞ்சிபுரம் மாவட்டம், சிங்காடிவாக்கம் இருளர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தன். இவரின் மனைவி தேன்மொழி. இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகனும் மகளும் உள்ள நிலையில், மூன்றாவதாக தேன்மொழி கர்ப்பமடைந்தார். இந்தநிலையில் ஆனந்தனும் அவரின் குடும்பத்தினரும் மரம் வெட்டும் தொழிலுக்காக வெள்ளைகேட் பகுதிக்குச் சென்றனர். சில மாதங்கள் வெள்ளைகேட் பகுதியில் தங்கியிருந்து குடும்பமாக ஆனந்தன் மரம் வெட்டி வந்தார். மரம் வெட்டுவதற்கு கூலியாக 20 ஆயிரம் ரூபாயை அட்வான்ஸாக வெள்ளைகேட் பகுதியைச் சேர்ந்த விறகு வியாபாரி ஆறுமுகம் என்பவரிடம் ஆனந்தன் வாங்கியிருந்தார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தேன்மொழிக்கு 8-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக ஆனந்தன், விறகு வியாபாரியான ஆறுமுகத்துக்குத் தகவல் தெரிவிக்க அவரை போனில் தொடர்பு கொண்டார். ஆனால் ஆறுமுகம் போன் அழைப்பை ஏற்கவில்லை. அதனால் தேன்மொழிக்கு உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்கவில்லை.

ஆனந்தன்

இதையடுத்து ஆனந்தன், வீட்டிலிருந்த விளக்கெண்ணையை எடுத்து மனைவி தேன்மொழியின் வயிற்றில் தடவியிருக்கிறார். வலி கொஞ்சம் குறைந்திருக்கிறது. அதன் பிறகு ஆனந்தன், மரம் வெட்ட காட்டுப் பகுதிக்குச் சென்றுவிட்டார். தேன்மொழி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் தேன்மொழிக்கு மீண்டும் பிரசவ வலி ஏற்பட்டு குழந்தையும் பிறந்திருக்கிறது. அப்போது அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. தேன்மொழியின் அருகில் யாரும் இல்லாததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் குழந்தையும் உயிரிழந்தது. இது குறித்து பொன்னேரிக்கரை காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்ததும் தேன்மொழி, குழந்தை ஆகியோரின் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து விறகு வியாபாரி ஆறுமுகம் மீது தேன்மொழியின் கணவர் பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், `என்னுடைய மனைவி தேன்மொழி கர்ப்பிணியாக இருக்கும் போது அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆறுமுகம் அனுமதிக்கவில்லை. மேலும் கொடுத்த அட்வான்ஸ் பணத்துக்கு மரங்களை வெட்டி விட்டு ஊருக்குச் செல்லும்படி ஆறுமுகம் தெரிவித்தார். அதோடு பிரசவ வலி ஏற்பட்டதும் ஆறுமுகத்துக்கு போன் செய்த போது, அவர் அழைப்பை ஏற்கவில்லை என்று சரமாரியாக குற்றம் சாட்டியிருந்தார் ஆனந்தன். இதற்கிடையில் கர்ப்பிணி தேன்மொழியின் மரணத்துக்கு நீதிகேட்டு காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம், மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் மகேஷ் ஆகியோர் தலைமையில் தேன்மொழியின் உறவினர்கள் பொன்னேரிகரை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அதன் பிறகு போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதோடு ஆறுமுகம் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.

ஆசீர்வாதம்

இந்தச் சம்பவம் குறித்து காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம் கூறுகையில், ``ஆனந்தனும் அவரின் மனைவி தேன்மொழியும் படிப்பறிவு அற்றவர்கள். மேலும் கொத்தடிமையாக விறகு வியாபாரி ஆறுமுகத்திடம் ஆனந்தனின் குடும்பம் வேலைப்பார்த்து வந்திருக்கிறது. ஆனந்தனின் மனைவி தேன்மொழி கர்ப்பமாக இருந்த தகவல் காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறையினக்கு தெரியவில்லை. தேன்மொழிக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைத்திருந்தால் அவரும் குழந்தையும் உயிரிழந்திருக்க மாட்டார்கள். ஆனந்தனிடம் விசாரித்தபோது அவர் விறகு வியாபாரி ஆறுமுகம் தரப்பினரால் கொடுமைப்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் இந்தச் சம்பவத்தை மூடி மறைக்க ஆறுமுகம் தரப்பு முயற்சி செய்தது. நாங்கள் தலையிட்ட பிறகுதான் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தில் ஆறுமுகத்துக்கு சட்டப்படி தண்டனை கிடைக்க வேண்டும். அதே நேரத்தில் கர்ப்பிணி தேன்மொழி குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.