Mandaadi Review: புதிய களம், பழைய டெம்ப்ளேட்; ஆனாலும் மிரட்டும் தாட்டியக்காரன் இந்த மண்டாடி!
ஊரில் தன்னை பாய்மரப் படகு போட்டியில் சேர்க்க மறுக்கும் சட்டாப்புலியின் (சுஹாஸ்) மகனைக் கொல்ல முயற்சி செய்கிறார் மாரி (மிதுன் ஜெய் சங்கர்). ஆனால், இதில் மாரியின் குறி தவறிவிட, சட்டாப்புலியும் அவரின் ஆட்களும் மாரியைக் கொல்ல துரத்துகிறார்கள். அங்கிருந்து தப்பித்து சென்னையில் வசிக்கும் முத்துக்காளியிடம் (சூரி) பாதுகாப்பு வேண்டிச் செல்கிறார் மாரி.
கடந்த காலத்தில் நிகழ்ந்த சில விஷயங்களால் ஊருக்குத் திரும்பாத முத்துக்காளி, மாரி விஷயத்தில் சமரசம் பேசி முடித்து வைப்பதற்காக மீண்டும் சொந்த ஊர் திரும்புகிறார். சமரசம் பேச வந்த முத்துக்காளி, எப்படி மாரியின் முகவை மைந்தன்ஸ் டீமை படகு போட்டிக்குத் தயார்ப்படுத்துகிறார், முத்துக்காளியின் ஃபிளாஷ்பேக் என்ன என்பதுதான் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியிருக்கும் இந்த மண்டாடி.
கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள் ஏற்படுத்திய இறுக்கம், முகவை மைந்தன்ஸ் அணிக்காகத் தளராமல் தொடர்ந்து செய்யும் முயற்சிகள், குற்றவுணர்வினால் உண்டாகும் தடுமாற்றம், துரோகிகளைப் பழிவாங்க எழும் உக்கிர கோபம் என நடிப்பில் சூரி நங்கூரம் போல அழுத்தமான தடத்தைப் பதிக்கிறார். பாய்மரப் படகு போட்டி காட்சிகளில் பெரும் உடலுழைப்பைத் தந்திருக்கும் படத்தின் மண்டாடி சூரிக்கு வெற்றிக் கோப்பைகளை நிச்சயம் வழங்கலாம்.

மடித்துக் கட்டிய லுங்கி, முறைத்த முகம் எனப் படம் முழுக்க டெரர் முகத்தை மட்டுமே வெளிப்படுத்தி இலவசமாக வெறுப்பைப் பெற்றுக்கொள்கிறார் சுஹாஸ். ஆனால், இவருடைய டப்பிங், கதாபாத்திரத்துடன் பொருந்தாமல் துருத்தலாகத் தெரிகிறது. கோபத்தை நெருப்பாகக் கொப்பளிக்கும் கதாபாத்திரத்தில் வரும் நடிகை மஹிமா நம்பியார் எமோஷனல் பக்கங்களில் முன்னிலை பெறுகிறார். வீரர்களுக்குப் பயிற்சி தந்து அறிவுரை வழங்கும் கதாபாத்திரத்தில் சத்யராஜ், தன் அனுபவத்தால் கதாபாத்திரத்தைக் கரை சேர்க்கிறார். துடிப்பும் பரபரப்பும் நிறைந்த இளைஞனாக மிதுன் ஜெய் சங்கர், முத்துக்காளியின் சகோதரி மகளாக வரும் கிருத்திகா, ஆங்காங்கே காமெடி துடுப்பு போடும் பாலசரவணன், நிதானமாக யோசிக்கும் கதாபாத்திரத்தில் ரவீந்திர விஜய், உர் முகம் காட்டும் ஸ்டன் சிவா என அனைவரும் தங்களின் நேர்த்தியான பங்களிப்பால், இந்த பாய்மரத்தை நிலையாகக் கூட்டிச் சென்றிருக்கிறார்கள்.
பாய்மரப் படகு போட்டி, அதில் நடக்கும் விபத்து, லாகவமாக வீரர்கள் நிகழ்த்தும் சாகசங்கள் என நடுக்கடலில் நடக்கும் விஷயங்களை வெவ்வேறு கோணங்களில் படம்பிடித்துப் பிரமிப்பூட்டும் திரையனுபவத்தைத் தருகிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர். படத்திற்கான திசையைத் தீர்மானித்து விறுவிறுப்பாகக் காட்சிகளைக் கோத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ.ராகவ். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியைப் பரபரப்பு குறையவிடாமல் எடிட் செய்த விதம் நச்!

விஜயகாந்த் ரசிகர் மன்ற பதாகைகள், ஃபைபர் படகுகள், மரப்படகுகள் எனக் கலை இயக்குநர் கிரண் நல்லதொரு பணியைச் செய்திருக்கிறார். நடுக்கடலில் நடக்கும் ஸ்டன்ட் காட்சிகளில் ஸ்டன்ட் இயக்குநர்கள் பீட்டர் ஹெயின், திலீப் சுப்புராயன், மகேஷ் மாத்யூ செய்திருப்பது பாராட்டுக்குரிய பணி. மண்டாடி மண்டாடி, கைவளவி குலுங்க, ஒளிவட்டம் என ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் பாடல்கள் இந்த மண்டாடியை ஆரவாரத்துடனும் கொண்டாட்டத்துடனும் கூட்டிச் செல்கின்றன. பின்னணி இசையிலும் பாய்மரத்தை நகர்த்துவதற்குத் தேவையான ஆற்றலையும் உத்வேகத்தையும் குறைவில்லாமல் அள்ளித் தெளித்திருக்கிறார். ஆனால், பல இடங்களில் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் லிப்-சின்க் இல்லாமல் போயிருப்பது மைனஸ்!
கடந்த காலத்தில் ஏற்பட்ட விஷயங்களால் பாய்மரத்தையும் சொந்த ஊரையும் திரும்பிப் பார்க்காத முத்துக்காளி, மீண்டும் ஊருக்குச் சென்று மறுபடியும் பாய்மரப் படகு போட்டி பக்கம் திரும்புவது என்கிற வழக்கமான கமர்ஷியல் சினிமா கதையை புது ரூட்டில் ஓட்டியிருக்கிறார் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி. கதாபாத்திரங்களை விளக்காமல் திரைக்கதையை விரிக்கும் படம், பல வினாக்களுடனே நகர்கிறது. இது லேசான எதிர்பார்ப்பைப் பற்றவைத்தாலும், நாம் எளிதாகக் கணிக்கும் டெம்ப்ளேட் சினிமா விஷயங்களே அடுத்தடுத்து நிகழ்கின்றன.
இதன் பிறகு பாதைக்கேற்ப சுக்கானை மாற்றுவதுபோல, திரைக்கதையைக் கொஞ்சம் விறுவிறுப்பான போட்டிக்குக் கூட்டிப் போகிறார்கள். பரபரப்பாக நடக்கும் பாய்மரப் படகு போட்டி, அங்கு நடக்கும் விபத்துகள், அதனைப் படம் பிடித்த விதம் ஆகியவை நம்மைக்கட்டிப் போடுகின்றன. அந்த பாட்ஷா டெம்ப்ளேட் இடைவேளை, லேசாக மாஸ் மீட்டரையும் கொளுத்திப்போடுகிறது. இராமநாதபுரம் அருகில் வசிக்கும் மக்கள் அதிகமாக வளைகுடா நாடுகளுக்குப் பணிக்குச் செல்வது, அதனால் உண்டாகும் குடும்பத்துடனான பிரிவை வசனங்கள் இல்லாமல் நகைச்சுவைக் காட்சிகள் மூலமாக உணர்த்திய விதம் சிறப்பு!

தொடர்ந்து வரும் ஃபிளாஷ்பேக் காட்சிகள் லேசாகச் சோர்வு வலையை வீசினாலும், இடையிடையே சில விறுவிறு பந்தயங்கள் மூலம் நம்மைக் காப்பாற்றுகிறார்கள் திரைக்கதையாசிரியர்கள் திரள் சங்கர், மோகனவசந்தன், எல்ரெட் குமார் மற்றும் மதிமாறன் புகழேந்தி. க்ளைமாக்ஸ் காட்சியை, பரபரப்பான நிகழ்வுகளோடு கோத்திருப்பது சீட் எட்ஜ் சினிமா அனுபவம்! ஆனால், இறுதியில் சில கேள்விகளைக் கடலில் கரைத்துவிட்டுச் சென்றிருப்பது ஏன் இயக்குநரே?!
சின்ன சின்ன குறைகள் இருந்தாலும், நல்லதொரு அனுபவத்தைத் தரும் இந்த `மண்டாடி, தாட்டியக்காரன் எனப் பெயர் வாங்குகிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


