மிசா: `ஷா கமிஷன் அறிக்கை; கைதிகள் பட்டியலில் `மிஸ்ஸான ஸ்டாலின் பெயர் - ஏன்... என்னதான் நடந்தது?
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் பதிலுரையின் போது, முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் குறித்தும், அவர் மிசா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட விவகாரம் குறித்தும் பேசினார். அப்போது அவரின் உடல்மொழி விமர்சனத்துக்குள்ளானது. அதைத் தொடர்ந்து அமைச்சர்களின் உரையின் போது அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார், ``மிசா காலத்தில் திருட்டு, கொள்ளை, பெண்களை தவறாகப் பேசியவர்களையெல்லாம் கைதுசெய்தார்கள். அதையெல்லாம் மிசா கைது என எடுக்க முடியாது. இந்திரா காந்தியைப் பற்றி ஸ்டாலின் அவதூறாகப் பேசியிருந்தார். பெண்களை தவறாகப் பேசியதால்தான் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டார் என்கிற குறிப்புகள் இருக்கின்றன" என்றார்.
அதைத் தொடர்ந்து மிசா சட்டத்தில் கைதுசெய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலில் ஸ்டாலின் பெயர் இல்லை என்ற வாதங்களும் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில், நம் விகடன் தளத்தில் 2019 அக்டோபர் 16-ம் தேதி ஷா கமிஷன் அறிக்கையில், மிசா கைதிகள் பட்டியலில் ஸ்டாலின் பெயர் ஏன் இல்லை? என்றத் தலைப்பில் கட்டுரை வெளியாகியிருந்தது.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் அரசியல் வாழ்வு குறித்துப் பேச ஆரம்பித்தால், மிசாவில் இருந்துதான் நிச்சயம் துவங்கவேண்டும். தி.மு.க-வினர் மட்டுமல்லாத நடுநிலையாளர்களும்கூட மிசாவில் அவர் அடைந்த இன்னல்களை மறுத்துப் பேசுவதில்லை.
பத்திரிகை, தொலைக்காட்சிகளில் மிசா என்னும் முன்னுரையோடுதான் ஸ்டாலினின் அரசியல் வரலாற்றைத் தொடங்கும் நிலை இருக்கிறது. அந்தளவுக்கு ஸ்டாலினின் அரசியல் பயணத்தில், `மிசாவுக்கு முக்கிய இடமுண்டு. தி.மு.க-வினர் மத்தியில் அவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்ததும் மிசா கைதுதான்.
இந்த நிலையில், ``ஸ்டாலின் `மிசா காலத்தில் கைது செய்யப்பட்டாரே தவிர, மிசா கைதியாக, சிறையில் அடைக்கப்படவில்லை என்று தற்போது (அந்த நேரத்தில்) வெளியாகியிருக்கும் தகவல் மிகப்பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
தி.மு.க முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்டச் செயலாளருமான பொன்முடி கடந்த சில நாள்களுக்கு முன்பாக ஒரு தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்டார்.

அப்போது அந்த நிகழ்ச்சியின் நெறியாளர், ``ஸ்டாலின் மிசா காலத்தில் மட்டும்தான் கைதுசெய்யப்பட்டார். மிசா சட்டத்தின்கீழ் செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறதே, ஷா கமிஷன் அறிக்கையிலும் மற்ற தி.மு.க தலைவர்களின் பெயர்களெல்லாம் இருக்கிறது, ஸ்டாலினின் பெயர் இல்லையே? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த பொன்முடி, ``இந்தக் கேள்வியே தவறு. ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார் என்பது நாடறிந்த உண்மை. புத்தகத்தில் எழுதியிருப்பதால் அதை உண்மை என்று ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
``இது, புத்தகம் இல்லை. கமிஷன் ரிப்போர்ட். மேலும் இதைத் தமிழில் தொகுத்தது (மறைந்த முன்னாள்)தி.மு.க எம்.பி இரா.செழியன். அவர் எப்படி ஸ்டாலினின் பெயர் விடுபட்டிருப்பதைக் கண்டுகொள்ளாமல் விட்டிருப்பார். அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி போன்ற எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டு உண்மைதானா? என்று பதில் கேள்வியெழுப்ப,
``எனக்குத் தெரியாது. நான் அதைப் படித்ததில்லை. இப்போதுதான் கேள்விப்படுகிறேன் எனப் பதிலளித்திருந்தார் பொன்முடி.
பொன்முடியின் இந்தக் கருத்துகள் சமூக வலைதளங்களில் மிகப்பெரும் விவாதப் பொருளாக மாறியது.
``கருணாநிதியின் மகன் என்பதால்தான் பதவிக்கு வந்தார் என ஸ்டாலினின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை எல்லாம் `மிசா என்னும் கேடயம்தான் இவ்வளவு காலம் காத்து வந்தது. அதற்கெதிராகத் தொடுக்கப்பட்ட இந்த அம்புக்கு தி.மு.க-வினர் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?
இது தொடர்பாக, தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் (தற்போதைய மாநிலங்களவை எம்.பி) பேசினோம்.
`` `ஷா கமிஷன் அறிக்கையில் பெயர் விடுபட்டிருப்பதைப் பற்றித் தெரியாது என்றுதான் பொன்முடி கருத்து தெரிவித்திருந்தார். `ஸ்டாலின் மிசாவில் கைதுசெய்யப்பட்டது குறித்து தெரியாது என்று சொல்லவில்லை. தலைவர் கலைஞர், `நெஞ்சுக்கு நீதி’யிலேயே, தளபதி ஸ்டாலின் மிசாவில் கைதுசெய்யப்பட்டது குறித்து எழுதியிருக்கிறார்.
திண்டிவனத்துக்குள் நாடகம் போடுவதற்காகச் சென்றிருந்த தளபதி வந்ததும், தலைவர் கலைஞரே காவல்துறைக்கு அழைத்து தன் மகன் வந்துவிட்ட செய்தியைச் சொன்னார். அதன் பிறகுதான் காவல்துறை தளபதியைக் கைதுசெய்தது.
வேறு வழக்கில் கைதுசெய்யப்பட்டிருந்தால், அவர் ஜாமீனில் வெளிவந்திருக்கலாம். ஜாமீனில் வெளிவராமல் ஓராண்டுக் காலம் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. மிசா கைதிகள் விடுதலையானபோதுதான் தளபதியும் விடுதலை செய்யப்பட்டார். மிசா வழக்கில் கைது செய்யப்படாதவர் மிசா கைதிகளுடன் விடுதலையானது ஏன்?
அந்த நேரத்தில், தளபதியின்மீது வேறு எந்த வழக்கும் கிடையாது. தளபதி மிசாவில்தான் கைதானார், வேண்டுமென்றே சிலர் பொய்யான தகவல்களைப் பரப்புகிறார்கள் என்றார், அவர்.
`எனில், ஷா கமிஷன் அறிக்கையில், தி.மு.க-வின் மற்ற தலைவர்களின் பெயர்கள் எல்லாம் இருக்கும்போது ஸ்டாலினின் பெயர் மட்டும் விடுபட்டுப் போயிருப்பது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்த, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு,
``ஸ்டாலின் மிசா கைதியாகத்தான் சிறைக்குள் இருந்தார். அடிபட்ட பிறகு தனியாகக் கொண்டுபோய் வைத்திருந்தனர். இஸ்மாயிலின் அறிக்கையில், அதுபற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நான் அந்த அறிக்கையை முழுமையாகப் படித்திருக்கிறேன். இஸ்மாயிலிடமும் பேசியிருக்கிறேன். ஸ்டாலினிடம், கலைஞரிடம், முரசொலி மாறனிடம் மிசா பற்றி பேட்டி எடுத்து கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.
`ஷா கமிஷன் அறிக்கையில் தி.மு.க தலைவர்களோடு அவர் பெயர் இல்லாமல் போனதற்கு, அவர் அப்போது தி.மு.க-வின் உறுப்பினராக இல்லை. கோபாலபுரம் பகுதியில் ஏதோ ஓர் இளைஞர் நற்பணி மன்றத்தைத்தான் நடத்திக்கொண்டிருந்தார். தி.மு.க-வில் அப்போது அவர் எந்தப் பொறுப்பிலும் இல்லை. இந்தத் தகவலை கலைஞர்தான் என்னிடம் தெரிவித்தார். `மிசாதான் ஸ்டாலினை அரசியலுக்குள் இழுத்து வந்துவிட்டது என்றும் சொன்னார். அதனால் கண்டிப்பாக ஸ்டாலின் மிசா கைதியாகத்தான் இருந்தார். அதுதான் உண்மை என்றார்.

`` `மிசா சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படுதல், `மிசா காலத்தில் கைது செய்யப்படுதல், இரண்டுக்கும் என்ன வேறுபாடு?" என்பது குறித்து நம்மிடம் விளக்கிய வழக்கறிஞர் புகழேந்தி,
``மிசா என்பது தடுப்புக் காவல் சட்டம்தான். தடா, பொடா போன்ற மிகக் கடுமையான சட்டமல்ல. எமர்ஜென்சி நேரத்தில், ஒருவரைக் கைது செய்து தொடர்ச்சியாகச் சிறையில் வைத்திருப்பது என்பதே மிசாவின் கீழ்தான் வரும்.
`மிசா சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யாமலும் சிறையில் அடைக்கலாம். ஸ்டாலின் மிசாவில்தான் சிறையில் இருந்தார். அதனால்தான் அவருக்கு பெயில் வழங்கப்படவில்லை. 1982-க்குப் பிறகு, `மிசாதான் குண்டாஸாக மாற்றம் பெற்றது எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


