தெருவில் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட சிறார்கள்; புனே போலீஸ் மீது வழக்கு; மனித உரிமை கமிஷன் உத்தரவு
புனேயில் கொலை வழக்கு ஒன்றில் போலீஸாரிடம் சரணடைந்த சிறார்கள் 8 பேரை, போலீஸ் நிலையத்தில் ஐந்து நாட்கள் சட்டவிரோத வைத்திருந்து அடித்து உதைத்துள்ளனர்.
அதோடு அந்தச் சிறார்களை பொதுவெளியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று கோர்ட்டில் ஆஜர்படுத்தாமல் போலீஸ் நிலையத்தில் வைத்து அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளனர். அவர்களது குடும்பத்தினர் ஒருவர் இதை எதிர்த்ததையடுத்து, அந்தச் சிறார்கள் சிறார் நீதி வாரியத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சிறார்கள் போலீஸ் வாகனத்தின் முன்பகுதியில் கட்டிவைக்கப்பட்டு, போலீஸ் நிலையம் வரை பொதுவெளியில் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பொதுவெளியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதுடன் மேலும், பொது இடங்களில் முழங்காலிடவும், முழங்கால்களிலேயே நடந்து செல்லவும் அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
இது குறித்து மகாராஷ்டிரா மனித உரிமை கமிஷனில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து இதில் தொடர்புடைய போலீஸார் 15 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
அவர்களில் போலீஸ் கமிஷனர் பெயரும் இடம் பெற்று இருக்கிறது. புனே போலீஸ் கமிஷனர் அந்தச் சிறுவர்களை சிறார் நீதி வாரியத்தின் முன் ஆஜர்படுத்தக் கோராததால், அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டதாக ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு செல்வது என்பது, திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு உளவியல் ரீதியான தாக்குதல் நடவடிக்கையே தவிர வேறல்ல இது சிறார்களின் இயல்பான கண்ணியத்தைப் பறித்து, அவர்களை நிரந்தரமாகக் குற்றவாளிகள் என முத்திரை குத்துகிறது என்று மகாராஷ்டிர மாநில மனித உரிமைகள் கமிஷன் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறார்களில் நால்வர் பட்டியல் இனம் மற்றும் பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் (கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் பரிந்துரைத்துள்ளது. சிறப்பு ஐஜி ஒருவரை உள்ளடக்கிய மனித உரிமை கமிஷனின் உண்மை கண்டறியும் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


