ஏர் இந்தியா நஷ்டம்: சிங்கப்பூரில் வெடித்த அரசியல், இனவாத சர்ச்சை... என்ன நடக்கிறது?
உலகளாவிய சூழல், எரிபொருள் செலவு, அதிகரிக்கும் விமானப் போக்குவரத்துச் செலவு, மெர்ஜரால் ஏற்பட்ட தாக்கங்கள் போன்ற காரணங்களால் ஏர் இந்தியா நிறுவனம் இறங்குமுகத்தில் இருக்கிறது.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு, சிங்கப்பூரில் உள்ள இந்தியர்களுக்கு எதிராக மாறும் சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸும், தெமாசெக்கும்...
கார்ப்பரேட் மெர்ஜர் மற்றும் நேரடி முதலீடுகள் மூலம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தின் 25.1 சதவிகிதப் பங்குகளை வைத்துள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் நேரடியாகச் சிங்கப்பூர் அரசால் நடத்தப்படவில்லை என்றாலும், அதன் கிட்டத்தட்ட 50 சதவிகிதப் பங்குகள் சிங்கப்பூர் அரசின் முதலீட்டு நிறுவனமான தெமாசெக்கிடம் உள்ளது.
தெமாசெக் என்பது சிங்கப்பூர் அரசின் உலகளாவிய முதலீட்டு நிறுவனம்.
இப்போது என்ன பிரச்னை?
கடந்த ஓராண்டில் ஏர் இந்தியா நிறுவனம் 2.33 பில்லியன் டாலர் நஷ்டமடைந்துள்ளது.
இதைச் சரிசெய்யவும், நிறுவனத்தை மேம்படுத்தவும் ஏர் இந்தியா நிறுவனம் அந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்களிடம் (டாடா சன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்) 1.5 பில்லியன் டாலரைக் கேட்டுள்ளது.
இதை ஏற்றுச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஏர் இந்தியா நிறுவனத்தில் ஏதேனும் முதலீடு செய்தால், அது தெமாசெக்கைப் பாதிக்கும் என்று சிங்கப்பூரில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்துக் கேள்வி எழுப்பித்தான் சிங்கப்பூரில் பிரச்னை வெடித்துள்ளது.
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி, “சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இருக்கும் தெமாசெக்கின் முதலீடுகள் ஏர் இந்தியாவில் பயன்படுத்தப்படுமா? ஏற்கெனவே ஏர் இந்தியா நிறுவனம் இழப்பில் உள்ளதே” என்று கேள்வி எழுப்பியது.
இதற்குச் சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி, “சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் உலகளாவிய போட்டி நிறுவனமாக மாறுவதற்குப் பிற நாடுகளில் முதலீடு செய்வது அவசியம்.
பிற நாடுகளில் செய்யப்படும் முதலீடுகள் உடனடியாக லாபம் தருவதாக இருக்காது.
மேலும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மாதிரியான சொந்த நாட்டு நிறுவனங்களிடம் வெளியில் போய் முதலீடு செய்யாதீர்கள் என்றும், உள்நாட்டிலேயே முதலீடு செய்யுங்கள் என்றும் கூற முடியாது” என்று பதிலளித்திருந்தார்.

ரூட் மாறிய பிரச்னை
தெமாசெக்கின் தலைமை அதிகாரி தில்ஹன் பிள்ளை சந்த்ரசகரா ஆவார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
இவர் இந்தியர் என்பதால்தான், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தின் முதலீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று சமூக வலைதளங்களில் தில்ஹன் பிள்ளை சந்த்ரசகரா, தெமாசெக், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகியவற்றின் மீது சராமாரி தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன.
சமூக வலைதளத்தில் வரும் இந்தத் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்.
மேலும், சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் கே. சண்முகம், “சமூக வலைதளத்தில் அவதூறாகப் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஒரு விஷயத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், இது அடுத்தடுத்து இனத்தைக் குறிவைத்து நடக்கலாம். இதனால், எதிர்காலத்தில்
முக்கிய நிறுவனங்களின் பொறுப்புகளுக்கு வரும் தலைமை அதிகாரிகள் தங்களுடைய முடிவுகள் தவறானால் விமர்சிக்கப்படலாம் என்று எந்த முடிவையும் எடுக்காமல்கூட இருக்கலாம்.

இது சிங்கப்பூரின் முதலீட்டையும், வளர்ச்சியையும் பாதிக்கும். தெமாசெக்கின் வலைதளத்தின்படி, கடந்த 10 ஆண்டுகளில், உலகிலேயே சிங்கப்பூருக்கு அதிக வருமானத்தைத் தந்த நாடு என்று இந்தியா குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதை அறியாமல் சமூக வலைதளங்களில் சாடுகிறார்கள்” என்று பேசியுள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் முதலீடுகள் எப்படி எப்படியோ சென்று, இப்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களைச் சாடுவதாக மாறியிருக்கிறது!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


