I Miss You யுகத்தில் கட்டுரை வாசிப்பின் அவசியம்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

இருக்கிறது போதாதா...இது என்ன புதுசா..இன்னொரு கழகமா..என்று கேட்க நினைக்கிறீர்களா...? ஏற்கனவே உள்ளதை வெளிச்சம் போட்டு காட்டுகிறேன். கவுண்டமணி பாணியில் சொன்னால் உள்ளத சொல்றேன். சுருக்கி எழுதினால்/சொன்னால் அதில் ஒரு சக்தி இருக்கும். அதில் மிகப்பெரிய சக்தி எம்.ஜி.ஆர். என்பது உலகறிந்த விஷயம். எம்.ஜி.ராமச்சந்திரன் என்றால் இப்போதைய தலைமுறைக்கு தெரியாது. சுருங்க சொல்லணும்...அதைதான் விரும்புறாங்க. கண்டேன் கற்பினுக்கு அணியை கண்களால்.. ன்னு அனுமன் சொன்னது போல...ஒரு சில வரிகளில் இருக்க வேண்டும்.

கட்டுரை என்பது பூமாலை போல. அழகான பூக்களை கொண்டு தொடுப்பது. எல்லா இடங்களிலும் மாலை முக்கிய பங்கு வகிக்கிறது. கட்டுரை என்பது அது போலவே. அழகான பல விஷயங்களை தொகுத்து தருவது. இந்த மாலையை எத்தனை பேர் ரசிக்கிறார்கள்? முகநூல் பக்கம் சென்று பாருங்கள். க.க.க. தான் அதிகம் இருப்பார்கள். கட்டுரைகளை கண்டால் போதும் விலகி ஓடிவிடுவார்கள்.

தப்பித்தவறி ஓரு விருப்பம் (LIKE) ஒரு விமர்சனம் (COMMENT) போட மாட்டார்கள். சிலர் எனக்கு நேரமில்லை என்பார்கள் (I HAVE NO TIME). கட்டுரைகள் எழுதும் சிலர் மறந்தும் கூட மற்றவர்களின் கட்டுரைகளுக்கு விமர்சனம் செய்ய மாட்டார்கள். கட்டுரைகள் எழுதி கொஞ்சம் பிரபலமாக மாறிவிட்டால் தங்களுக்கு பின்னால் ஒளிவட்டம் வந்துவிட்டதாக நினைத்து மற்றவர்கள் படைப்புகளை கண்டு கொள்ள மாட்டார்கள். சிலர் தற்போதைய செய்திகளில் தங்கள் விமர்சனத்தை பதிவு செய்வார்கள்.

இவர்களால் உருவானது தான் இந்த க.க.க. (கட்டுரைகளை கண்டுகொள்ளாதோர் கழகம்). யார் தலைவர், யார் பொதுச்செயலாளர்...அவரவர்கள் முகநூல் பக்கத்தில் தேர்ந்தெடுத்து அறிவித்து விடுங்கள்.

காதல் வந்துவிட்டால் போதும் கனவுகள், கற்பனைகள், கவிதைகள் இவைகளுக்கு பஞ்சம் இருக்காது. பக்கம் பக்கமாக காதல் வசனங்கள் பழைய படங்களில் இருக்கும்.

"மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே..."

-சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற வரிகள் இது. இதெல்லாம் இப்போது கிடையாது. I MISS U என்று சொன்னால் அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும்...இது GEN Z இளைஞர்கள் கண்டுபிடிப்பு.

"நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை..."

-தெய்வத்தின் தெய்வம் படத்தில் இடம்பெற்ற கவியரசர் பாடிய பாடலின் சுருக்கமே I MISS U. சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டும். அப்ப கட்டுரைகள் கூடாது என்று சொல்லலாமா...?

திருமணம் என்ற ஒற்றை வார்த்தை அதற்குள் பெண் பார்த்தல், நிச்சயதார்த்தம், பத்திரிக்கை அடித்தல், மாமன் விருந்து, பெண்/மாப்பிள்ளை அழைப்பு என்று எத்தனை அழகான விஷயங்கள் அடங்கியிருக்கிறது. பெண் கழுத்தில் மாப்பிள்ளை தாலி கட்ட வேண்டும். அவ்வளவுதான்...அதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டங்கள் கேள்வி கேட்டுப் பாருங்கள். அதெப்படி...PRE WEDDING PHOTOSHOOT...BACHELOR PARTY... அதை ஒதுக்கி தள்ளிவிடுவார்களா இந்த GEN Z இளைஞர்கள். கட்டுரையும் அதைப் போலத்தான்.

திருமணத்திற்கு பிறகு...கூட்டுக் குடும்பமாக இருந்தால் அது இப்படித்தான் ஒரு அழகான கட்டுரை போல இருக்கும்.

"எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே இது ஆனந்த பூந்தோட்டம் அன்பின் ஆலயம்..."

  • வானத்தைப் போல படத்தில் இடம்பெற்ற பா.விஜய் அவர்கள் எழுதிய பாடல்.

பள்ளிப்பருவத்தில் முக்கிய இடம் பிடிப்பது இந்த கட்டுரை தான். தன் வரலாறு கூறுதல் என்ற தலைப்பில் ஆறு, மரம் உள்ளிட்ட பல தலைப்புகள் கொடுத்து கட்டுரை எழுதச் சொல்வார்கள் காலாண்டு, அரையாண்டு, ஆண்டு தேர்வுகளில்... இன்னொன்று சுற்றுலா அழைத்துச் செல்வார்கள். சென்று வந்ததும் அதைப் பற்றி கட்டுரை எழுதச் சொல்வார்கள். கட்டுரைகள் நாம் படிக்கும் காலத்தில் இருந்தே நமக்கு தோழனாக/தோழியாக அமைந்துவிடும். கட்டுரைகள் எழுத சொல்லும் ஆசிரியர்கள் கட்டுரைகளுக்கு விமர்சனம் செய்வார்களா...வெகு சிலரே...என்பதுதான் நிதர்சனம்.

தமிழ் இரண்டாம் தாள் ஆங்கிலம் இரண்டாம் தாள் என்ற நடைமுறை இருந்த போது கட்டுரை இரண்டாம் தாளில் இடம்பெறும். விதவிதமான தலைப்புகள் கொடுத்து எழுதச் சொல்வார்கள். தற்போது ஒரே பொதுத்தாளாக இணைக்கப்பட்டு விட்டது. பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப் பள்ளி பொதுத் தேர்வுகளில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. கட்டுரை எழுதக் சொல்வது தொடர்கிறது.

இயற்கையின் கட்டுரைகளை பார்க்காதவர்கள், படிக்காதவர்கள் உண்டா. தினமும் உதிக்கும் சூரியனை வணங்காதவர் உண்டா. அவரென்ன காலையில் வந்து குட் மார்னிங் என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போய்விடுகிறாரா...காலை 6.00 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரையில் இருந்து அவர் எழுதுவது வெப்பம், ஒளி தொடர்பான கட்டுரை தான். இந்த சூரிய ஒளி இல்லாமல் நம்மால் வாழ முடியுமா...? அவர் பெயரில் ஒரு முக்கியமான கிழமை இருக்கிறதே...ஞாயிறு - மறக்க முடியுமா...அந்த ஓய்வு நாளை...தற்போது அதிகளவில் ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து வாங்கி சாப்பிடும் பழக்கம் உருவாக காரணமான கிழமை...பல வீடுகளில் அசைவ உணவு சமைக்க காரணமான ஞாயிற்றுக்கிழமையில் இன்னும் எத்தனையோ விஷயங்கள் நடக்கிறதே அதை ஒருவரியில் சொல்ல முடியுமா...?

"ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு மேரு வலம் திரிதலான்"

-அந்த ஞாயிறை சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் இப்படி பாடியுள்ளார்...

மழை வருமுன் வானவில் தோன்றுகிறதே...அது ஒரு சிறிய கட்டுரை. மின்னல் பளீரென்று கண்ணைப் பறிக்கும் ஹைக்கூ கட்டுரை. இடி அதிரடி கட்டுரை. அடித்துப் பெய்யும் மழை மிக நீண்ட கட்டுரை. ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக இருக்கும் தொடர்ந்தால்...போரடிக்கும். போரடிக்கும் இந்த மாதிரி மழை கட்டுரைகள் எல் நினோ காலங்களில் அவசியம் தேவை என்பதை உணர்த்துகின்றன.

"தாகம் எடுக்கையிலே மழை அடிக்காதோ வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ.. நனைந்த மலர்களுக்கு குளிர் எடுக்காதோ வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ.."

-மழை தொடர்பான மிக மிக அழகான பாடல் இது. எழுதியவர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள். சிவப்பு மல்லி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் பாடலில் மூன்றாவது பாராவில் வரும் வரிகள். மழையை ரசிக்காதவர்கள் கூட இந்த பாடலை ரசிப்பார்கள்.

எந்த ஒரு நிகழ்வும் ஒரு வரியில் பஞ்சாக...ஒரு நொடிக் கதையாகவோ இருக்காது. ஒவ்வொன்றுக்குள்ளும் கட்டுரை எழுதக் கூடிய அளவுக்கு விஷயங்கள் உள்ளே ஒளிந்திருக்கும். தீபாவளி அதிகாலை வருவது என்றாலும் எத்தனை நாட்கள் அதற்கான முன்னோட்டங்கள் நடக்கிறது. ரயில்வே முன்பதிவு இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கி விடுகிறது. ஜவுளி கடைகள், பட்டாசு கடைகள், இனிப்பு பலகார கடைகள் ஒரு மாதத்திற்கு முன்பே தயாராகி விடுகின்றன. சிறப்பு பேருந்துகள், போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல்...இப்படி ஏராளமான விஷயங்கள் ஒரு இரண்டிலிருந்து மூன்று மணி நேர பண்டிகைக்கு காலம்காலமாக நடந்து வருகின்றன. பொங்கல் பண்டிகைக்கும் இப்படித்தான்.

எங்களுக்கு நீண்ட சந்தோஷம் தேவையில்லை. சும்மா ஒரு நிமிட சந்தோஷம் போதும்... இப்படி யாரவது சொல்வார்களா...கட்டுரை படிப்பது நீண்ட நேர சந்தோஷம் தரும்...விரும்பி படிக்கும் போது...பல பயனுள்ள விஷயங்களை தெரிந்து கொள்ள உதவுகிறது. அது ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோர்...அங்கு எல்லாம் கிடைக்கும்.

கட்டுரை என்பது சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை மின்சார ரயிலில் பயணிப்பது போலவோ...மெட்ரோ ரயிலில் பயணிப்பது போலவோ அல்ல...அது குறுகிய கால பயணம். சென்னை எக்மோரில் இருந்து நாகர்கோவில் வரை வந்தே பாரத்தில் பயணிப்பது போன்றது...நீண்ட நேர பயணம். வித்தியாசமான அனுபவத்தை தருவது...அதுதான் கட்டுரை.

க.க.க. - கட்டுரைகளை கண்டுகொள்ளதோர் கழக உறுப்பினர்களை முகநூல் பக்கங்களில் நிறைய பார்க்கலாம். இவர்களுக்கு யார் தலைவர்...அவர் என்ன வேலை பார்க்கிறார். முனைவர் பட்டம் பெற்றவரா...இனிமேல் தான் வாங்கப் போகிறாரா...இப்படி பல கேள்விகள் உங்களுக்குள் எழுந்தால்...கட்டுரை படிக்க நீங்கள் தயாராகி விட்டீர்கள் என்று அர்த்தம். அப்போது கட்டுரைகளை கண்டுகளிப்போர் கழகம் (க.க.க. 2) உருவாகிவிடும்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.