திருமணம் தாண்டிய உறவு; பெற்ற தாயால் கொல்லப்பட்ட 2 சிறுவர்கள்; நெஞ்சை உலுக்கும் `பகீர்’ பின்னணி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள ஆலங்காயம் பெத்தூர் கிராமத்தில், ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ பிரகாசம் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணறு அமைந்திருக்கிறது.

இந்தக் கிணற்றில், கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி காலை, 2 சிறுவர்கள் மர்மமான முறையில் பிணமாக மிதந்துக்கொண்டிருந்தனர். கடுமையான துர்நாற்றம் வீசிய பிறகே சம்பவம் வெளியில் தெரிந்திருக்கிறது.

தகவலறிந்ததும், தீயணைப்புத் துறை வீரர்களுடன் ஆலங்காயம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். உடல்களை மீட்டு மேலே கொண்டுவந்தபோது, அழுகிய நிலையில் இருந்ததால் சிறுவர்களை அடையாளம் காண முடியவில்லை.

இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிறுவர்களின் உடல்களை அனுப்பி வைத்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கினர்.

கிணற்றில் மிதந்துக் கொண்டிருந்த 2 சிறுவர்களின் பிணம்

இந்த நிலையில்தான் பெற்ற தாயே திருமணம் தாண்டிய தகாத உறவில் தனது ஆண் நண்பனுடன் சேர்ந்து இரு பிள்ளைகளையும் கொலை செய்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் வெளிச்சானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு (வயது 35). இவரின் மனைவி சிவகாமி (24). இவர்களுக்கு 5 வயதில் பிரேம்குமார், 2 வயதில் பிரதாப் என்று இரு மகன்கள்.

இந்த நிலையில், கணவர் சேட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு செம்மரக் கட்டை கடத்தல் வழக்கில் ஆந்திர மாநில போலீஸாரால் கைது செய்யப்பட்டு, அம்மாநில சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

கணவன் சிறையில் இருக்கும் இந்தச் சமயத்தில், ஜமுனாமரத்தூர் அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஹிட்டாச்சி இயந்திர வாகன ஆபரேட்டர் ராஜா (34) என்பவருடன் சிவகாமிக்குத் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்ததால் சிவகாமி கர்ப்பமாகியிருக்கிறார். அதே சமயம், ஆண் நண்பன் ராஜாவுக்கு ஏற்கெனவே வேறொரு பெண்ணுடன் திருமணமாகி அவருக்கும் 3 பிள்ளைகள் இருக்கிறார்கள்.

இது தெரிந்தும்கூட ராஜாவுடன் வாழ சிவகாமி விருப்பப்பட்டிருக்கிறார். பின்னாளில், `தனது 2 மகன்களும் இடைஞ்சலாக இருப்பார்கள்’ என்று நினைத்த சிவகாமி, விவரமறியாத மகன்களைக் கொலை செய்ய கொடூரத் திட்டம் தீட்டியிருக்கிறார்.

இதற்கு அவரின் ஆண் நண்பனும் உடந்தையாக இருந்திருக்கிறார். இருவரும் திட்டமிட்டபடி, கடந்த மாதம் 27-ம் தேதி சம்பவம் நடந்த கிணற்றுப் பகுதிக்கு பிள்ளைகள் இருவரையும் அழைத்துச் சென்றிருக்கின்றனர். துளியளவும் இரக்கமில்லாமல் பெற்றெடுத்த 2 பிள்ளைகளையும் கிணற்றுக்குள் தள்ளிவிட்டு கொலை செய்திருக்கிறார் கொடூரத் தாய் சிவகாமி.

சிவகாமி, அவரின் ஆண் நண்பன் ராஜா
சிவகாமி, அவரின் ஆண் நண்பன் ராஜா

தண்ணீரில் மூழ்கி 2 பிள்ளைகளும் இறப்பதை ஆண் நண்பனுடன் நின்று பார்த்துவிட்டு, பின்னர் ஒன்றும் தெரியாததுபோல இருவரும் சம்பவ இடத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றிருக்கின்றனர்.

உடனே வீட்டுக்குச் சென்றால், பிள்ளைகள் பற்றி உறவினர்கள், ஊர்க்காரர்கள் யாரேனும் கேட்பார்கள் என்பதால், ஆண் நண்பனுடன் அடுத்த 3 நாள்கள் வெளியிலேயே தங்கியிருக்கிறார் சிவகாமி. இதையடுத்து, தனது கிராமத்துக்குச் சென்ற சிவகாமி, மாமியார் வீட்டுக்குச் செல்லாமல் தாய் வீட்டுக்குச் சென்றார்.

அக்கம் பக்கத்தினரும், உறவினர்களும் `பசங்க எங்கமா’ என்று கேட்க, சிவகாமி சரியாகப் பதிலளிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக பேசி வந்திருக்கிறார். இதனிடையே, ஆலங்காயம் போலீஸாரும் அருகிலுள்ள மாணவர் விடுதி மற்றும் சுற்றுவட்டார கிராமப் புறங்களில் இருந்து சிறுவர்கள் யாரேனும் மாயமாகியுள்ளனரா? என்ற கோணத்தில் விசாரணையை முன்னெடுத்ததோடு, சம்பவம் நடந்த பகுதியைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இருந்து சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து சந்தேகத்திற்கிடமான நபர்களையும் அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில்தான் சிவகாமியின் நடமாட்டமும், அவரின் தகாத உறவும் உறவினர்களுக்கும், ஊர்க்காரர்களும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. `பிள்ளைகளை ஏதோ செய்துவிட்டாள்’ என்று பேச்சு அடிபட ஆரம்பித்ததால், ஊர் நாட்டாமை மூலமாக ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்துக்கும் தகவல் சென்றது. ஜமுனாமரத்தூர் போலீஸார் ஆலங்காயம் போலீஸாரைத் தொடர்புகொண்டு கிணற்றில் இறந்துகிடந்த சிறுவர்களின் உடலமைப்பு, வயது போன்ற தகவல்களைக் கேட்டறிந்திருக்கிறார்கள்.

சிவகாமி பிள்ளைகளின் உருவ ஒற்றுமையோடு ஒத்துப்போனதால், தங்களுக்குக் கிடைத்த தகவலை ஆலங்காயம் போலீஸாரிடம் அவர்கள் பகிர்ந்தனர். நேற்று அங்கு விரைந்த ஆலங்காயம் போலீஸார் சிவகாமியையும், அவரின் ஆண் நண்பன் ராஜாவையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

சிறையில் அடைக்க அழைத்துச் சென்ற போலீஸார்...
சிறையில் அடைக்க அழைத்துச் சென்ற போலீஸார்...

விசாரணையில், இருவரும் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். மேலும், `தங்களைப் பெற்ற தாயே கொல்லப்போகிறார்’ என்பது தெரியாத பிள்ளைகள் இருவரும், தாயுடன் சென்றபோது, ஆலங்காயம் பேருந்து நிலையம் அருகே குடிக்க ஜூஸ் கேட்டிருக்கிறார்கள்.

அவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுத்து சாப்பிட வைத்துவிட்டு, கிணற்றுப் பகுதிக்கு நடந்தே அழைத்துச் சென்றிருக்கிறார் சிவகாமி. சிசிடிவி-யில் பதிவாகியிருந்த இந்தக் காட்சிகளையெல்லாம் தற்போது போலீஸார் கைப்பற்றியிருக்கிறார்கள்.

சம்பவத்தைப் பார்க்கும்போது, ஆண் நண்பனை அனுப்பி முன்கூட்டியே ஆள் நடமாட்டம் இல்லாத கிணற்றுப் பகுதியைப் பார்வையிட்ட பிறகே பிள்ளைகளைக் கொலை செய்ய திட்டம் அரங்கேற்றியிருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது.

இதையடுத்து, இருவரையும் நீதிமன்றக் காவலில் வேலூர் மத்திய சிறைச்சாலையில் கொண்டுவந்து அடைத்திருக்கிறார்கள் ஆலங்காயம் போலீஸார். நெஞ்சை உலுக்கும் இந்தக் கொடூரச் சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.