`நெதன்யாகுவின் திருமணம் மீறிய உறவு? - 33 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்த ருத் பார்

1993-ம் ஆண்டு இஸ்ரேல் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியவர் அப்போதைய லிகூட் (Likud) கட்சியின் இளம் தலைவர் பெஞ்சமின் நெதன்யாகு.

தனது அரசியல் வளர்ச்சியைத் தடுப்பதற்காக வைக்கப்பட்ட பிளாக்மெயில் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நேரலை தொலைக்காட்சியில் தோன்றித் தனக்கு இருந்த திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவை அவர் ஒப்புக்கொண்டார்.

அந்தச் சம்பவத்தின் மையப்புள்ளியாக இருந்த டாக்டர் ரூத் பார் (Dr. Ruth Bar), இஸ்ரேலின் பிரபல பத்திரிக்கையில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு மௌனம் கலைத்திருக்கிறார்.

நெதன்யாகு 1993

அவரின் பேட்டியில், ``1993-ல் இஸ்ரேல் அரசியலையே உலுக்கிய இந்தச் சம்பவம், பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய புயல். அப்போது இஸ்ரேலின் முக்கிய எதிர்க்கட்சியான லிகூட் (Likud) கட்சிக்குப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்து கொண்டிருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றிவிட்டு சமீபத்தில் திரும்பியிருந்த நெதன்யாகு, மிக வேகமாக வளர்ந்து, கட்சியின் தலைமைப் போட்டியில் முன்னணியில் இருந்தார். இது கட்சியில் இருந்த பல மூத்த தலைவர்களுக்கும், டேவிட் லெவி (David Levy) என்பவருக்கும் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.

திடீரென ஒருநாள் நெதன்யாகுவின் மனைவி சாராவுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போன் செய்து, `உங்கள் கணவருக்கும் ரூத் பாருக்கும் இடையே திருமணம் மீறிய உறவு இருக்கிறது.

எங்களிடம் இதற்கான வீடியோ கேசட் ஆதாரம் உள்ளது. நெதன்யாகு கட்சித் தலைவர் போட்டியிலிருந்து விலகாவிட்டால் இதை வெளிப்படையாக வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டினார்.

ருத் பார்
ருத் பார்

மிரட்டலுக்குப் பயந்து ஒதுங்காத நெதன்யாகு, ஜனவரி 14, 1993 அன்று நாட்டின் ஒரே முக்கிய டிவி சேனலான சேனல் 1 நேரலை விவாதத்தில் தோன்றி, "ஆமாம், நான் என் மனைவியை ஏமாற்றி வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது உண்மைதான். என்னைப் போட்டியிலிருந்து தூக்க என் சொந்தக் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் டேவிட் லெவி தான் குற்றவாளிக் கும்பலை வைத்து என்னை பிளாக்மெயில் செய்கிறார்" எனப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

இந்தச் சர்ச்சையையும் தாண்டி, நெதன்யாகு தேர்தலில் வெற்றி பெற்று லிகூட் கட்சியின் தலைவரானார். பின்னாளில் இஸ்ரேலின் பிரதமராவும் வளர்ந்தார்.

இப்போதுவரை, மிரட்டல் விடுக்கப்பட்ட அந்த வீடியோ கேசட் வெளியாகவே இல்லை. உண்மையில் அப்படி ஒரு வீடியோவே இல்லை. அது நெதன்யாகுவைப் பயமுறுத்தச் செய்யப்பட்ட வெறும் நாடகம் என்றும் பின்னர் உண்மை வெளியானது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மக்கள் வெளிச்சத்திலிருந்து முற்றிலும் விலகி, எனது உளவியல் மற்றும் வியூக ஆலோசகர் பணியைத் தொடர்ந்தேன்.

சமூக ஊடகங்கள் இல்லாத அக்காலத்தில், என்னால் எளிதாக எனது தனிப்பட்ட வாழ்க்கைக்குத் திரும்ப முடிந்தது. அதன்பின்னர், எஹுத் பராக், எஹுத் ஓல்மர்ட் போன்ற நாட்டின் முன்னணி அரசியல் தலைவர்களுடனும், பேங்க் ஹாபோலிம், பேங்க் லியுமி போன்ற முன்னணி வங்கி நிறுவனங்கள் மற்றும் பல கார்ப்பரேட் நிறுவனங்களுடனும் மூத்த ஆலோசகராக வெற்றிகரமாகப் பணியாற்றியிருக்கிறேன்" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.