“5 ஸ்டார் தரம் இல்லையா?” – இந்தியாவை விட்டு வெளியேறிய Miss Grand International: என்ன நடந்தது?

இந்தியாவில் நடைபெற இருந்த Miss Grand International 2026 போட்டி திடீரென தாய்லாந்துக்கு மாற்றப்பட்டிருப்பது சர்வதேச அழகிப் போட்டி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போட்டி நடத்தும் நாட்டை மாற்றும் அளவுக்கு என்ன நடந்தது என்பதுதான் தற்போது எழுந்துள்ள கேள்வி.

Miss Grand International அமைப்பு செப்டம்பர் 3-ம் தேதி வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில், இந்தியாவில் நடைபெற இருந்த Miss Grand International 2026 தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டு, மீதமுள்ள நிகழ்ச்சிகளை தாய்லாந்துக்கு மாற்றுவதாக தெரிவித்தது. இதற்குக் காரணமாக, போட்டியை நடத்துவதற்காக ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்த நிபந்தனைகள் மற்றும் தரநிலைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என அமைப்பு கூறியுள்ளது.

குறிப்பாக, போட்டியாளர்களுக்கான ஐந்து நட்சத்திர தரத்திலான விருந்தோம்பல் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருந்ததாக MGI தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தைகளும், பிரச்னையைத் தீர்க்கும் முயற்சிகளும் நடைபெற்றதாகவும், இருந்தபோதிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட தரநிலைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்றும் அமைப்பு கூறியுள்ளது.

இதையடுத்து போட்டி தாய்லாந்துக்கு மாற்றப்பட்டுள்ளது. செப்டம்பர் 4-ம் தேதி வெளியான புதிய அட்டவணையின்படி, போட்டியாளர்கள் செப்டம்பர் 18 மற்றும் 19-ம் தேதிகளில் தாய்லாந்து சென்றடைகின்றனர். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், அக்டோபர் 10-ம் தேதி Grand Coronation நடைபெறுகிறது.

இந்த திடீர் மாற்றம் சமூக வலைதளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சில பயனர்கள், இந்தியா ஏற்கெனவே சர்வதேச அளவிலான Miss World போட்டிகளை நடத்தியுள்ள நிலையில், Miss Grand International போட்டியை நடத்துவதில் என்ன பிரச்னை ஏற்பட்டது? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

சிலர் இதை கிண்டலாகவும் விமர்சித்துள்ளனர். “இந்தப் போட்டியை இந்தியாவில் நடத்துவதில் யாருக்கும் விருப்பம் இல்லை” என்றும், “இந்தியா Miss World போன்ற போட்டிகளை நடத்த முடியும் என்றால், Miss Grand International-ஐ நடத்துவதில் என்ன பிரச்னை?” என்றும் சில சமூக வலைதளப் பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்னும் சிலர், இந்த முடிவு இந்தியாவுக்கு எதிரான விமர்சனமாக பார்க்கப்பட வேண்டியதில்லை என்றும், இது போட்டி அமைப்புக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் இடையிலான ஒப்பந்தம் மற்றும் ஏற்பாடுகள் தொடர்பான விவகாரம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, போட்டி நடைபெறும் நாடு மட்டும் மாறியுள்ளதே தவிர, Miss Grand International 2026-ல் இந்தியாவின் சார்பில் Lakshita Thilagaraj தொடர்ந்து பங்கேற்கிறார். இந்திய தரப்பிலிருந்து இந்த விவகாரம் குறித்து வெளியாகும் அடுத்தகட்ட விளக்கம் என்ன என்பதும் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.