140 கிலோ தூக்கி உலகையே திரும்பி பார்க்கவைத்த Keyaa Banerji; வைரலுக்கு பின்னால் இப்படியோர் அதிர்ச்சி!

45.7 கிலோ உடல் எடை… 140 கிலோ Deadlift! இந்த அசாத்திய சாதனையைச் செய்து சமூக வலைதளங்களில் வைரலானவர் இந்திய பவர்லிஃப்டர் Keyaa Kunal Banerji.

21 வயதான கேயா, தென்னாப்பிரிக்காவின் Sun City-யில் நடைபெற்ற 2026 IPF World Sub-Junior & Junior Classic Powerlifting Championships போட்டியில், Junior Women’s 47 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்றார்.

45.7 கிலோ எடை கொண்ட கேயா, போட்டியில் 90 கிலோ Squat, 50 கிலோ Bench Press, 140 கிலோ Deadlift என மொத்தம் 280 கிலோ பதிவு செய்தார். இதில் 140 கிலோ Deadlift மூலம் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒட்டுமொத்த பிரிவில் 5-வது இடத்தைப் பிடித்தார்.

தனது உடல் எடையைவிட மூன்று மடங்குக்கும் அதிகமான எடையைத் தூக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அவரது வலிமை மற்றும் சாதனைக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

ஆனால், பாராட்டுகளுடன் வந்த சிக்கல்!

வீடியோ வைரலான பிறகு, கேயா ஆன்லைன் பாலியல் தொல்லை, போலி சமூக வலைதளக் கணக்குகள் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

Keyaa Banerji

அதுமட்டுமல்லாமல், தனது முகம் மற்றும் உடலைப் பயன்படுத்தி அனுமதியின்றி ஆயிரக்கணக்கான AI படங்கள் உருவாக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

தான் சமூக வலைதளங்களில் அதிகமான புகைப்படங்களைப் பகிராத நிலையிலும், தனது புகைப்படங்களை வைத்து இப்படியான AI உள்ளடக்கங்கள் உருவாக்கப்பட்டது தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக கேயா தெரிவித்துள்ளார்.

“ஒரு Deadlift செய்யும் பெண்ணாக இருக்க விரும்புகிறேன்!”

இந்த அனுபவத்துக்கு மத்தியில் கேயாவின் பதில் தெளிவானது. தன்னுடைய புகழ் அல்லது தோற்றத்தைவிட, தன்னுடைய விளையாட்டும் சாதனைகளுமே முக்கியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தான் பவர்லிஃப்டிங்கை விரும்பும் ஒரு பெண்ணாக இயல்பாக இருக்க விரும்புவதாகக் கூறிய கேயா, தனது சாதனையைத் தாண்டி தன்னைப் பற்றிய தேவையற்ற கவனத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளார்.

140 கிலோவைத் தூக்கி பதக்கம் வென்ற கேயா பானர்ஜியின் கதை, விளையாட்டு சாதனை மட்டுமல்ல… AI காலத்தில் ஒரு பெண்ணின் டிஜிட்டல் தனியுரிமை குறித்த முக்கியமான கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.