மகளிர் ஆசியக்கோப்பை 2026 .. சாதனை மேல் சாதனை செய்த ஸ்மிருதி மந்தனா.. குவியும் வாழ்த்துக்கள்..
மகளிர் ஆசியக் கோப்பை 2026 தொடரில் ஹாங்காங் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை வீழ்த்தியது.
இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தவர் ஸ்மிருதி மந்தனா. தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய அவர், வெறும் 64 பந்துகளில் 124 ரன்கள் விளாசினார். இதில் 14 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 193 ஆக இருந்தது. சதத்தை வெறும் 57 பந்துகளில் கடந்த மந்தனா, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் இக்ரா சஹர் பந்துவீச்சில் ரன் அவுட்டானார்.
இந்த சதத்தின் மூலம் மந்தனா மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்துள்ளார். இந்தியாவின் முன்னாள் நட்சத்திர வீராங்கனை மிதாலி ராஜை பின்னுக்கு தள்ளி, சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
மந்தனாவின் சர்வதேச ரன் எண்ணிக்கை 10,880 ஆக உயர்ந்துள்ளது. மிதாலி ராஜ் 10,868 ரன்களுடன் அடுத்த இடத்தில் உள்ளார். மேலும், இந்த சதம் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த மகளிர் வீராங்கனை என்ற சாதனையையும் மந்தனா படைத்துள்ளார். அவரது சர்வதேச சதங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


