அமெரிக்க கம்பெனி வேலையை உதறிவிட்டு முருங்கை விவசாயம் - ரூ.30 லட்சம் சம்பாதிக்கும் எஞ்சினியர்!

மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயிகள் பலர் விவசாயத்தை நவீன முறையில் பெரிய அளவில் செய்வது வழக்கம். மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள குருத்வாடி என்ற இடத்தை சேர்ந்த சாகர் காரே என்ற மெக்கானிக்கல் எஞ்சினியர், படித்து முடித்து விட்டு, இரண்டு ஆண்டுகள் புனேயில் உள்ள அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலை செய்தார். ஆனால் இது தனக்கான இடம் இல்லை என்பதை உணர்ந்து 2018ம் ஆண்டு தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊருக்கு சென்றார்.

அங்கு அவரது பெற்றோர் விவசாயம் செய்து வந்தனர். அவர்கள் தங்களது நிலத்தில் கரும்பு, கோதுமை மற்றும் பருப்பு வகைகளை பயிரிட்டு வந்தனர். அதோடு அவர்கள் ரசாயான உரங்களை அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். விவசாயத்தை இன்னும் நிலையானதாகவும், வணிக ரீதியாக சாத்தியமாக்குவதற்கான வழிகளைத் சாகர் தேடத் தொடங்கினார்.

மேலும் தனது பெற்றோர் இரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் பயிர் ஆரோக்கியத்தை பாதிக்கப்படுவதோடு விவசாய செலவுகளை அதிகரிப்பதை உணர்ந்தார்.

நிலையான அதேசமயம், செலவு குறைவான வகையில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கருதி முருங்கைகாய் பயிரிட முடிவு செய்தார். அதற்கு முன்பாக அவர் நிலத்தின் தன்மையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினார். மண்ணின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும், அதன் கார்பன் உள்ளடக்கத்தை அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்தார். இது மண் வளத்தை மேம்படுத்துவதற்கும் தண்ணீரைத் தக்கவைப்பதற்கும் உதவும். காலநிலை மற்றொரு சவாலாக இருந்தது.

சோலாப்பூர் மாவட்டம் மிகவும் வெப்பமான பகுதியாகும். அங்கு வெப்பநிலை 45°Cக்கும் அதிகமாக இருக்கும். எனவே கடுமையான வெப்ப நிலைமைகளைத் தாங்கக்கூடிய அதேசமயம் அதிக வணிக வாய்ப்புகளை வழங்கக்கூடிய பயிர்களை ஆராய்ச்சி செய்தார். முருங்கை இலைகள் மற்றும் முருங்கை காய்களுக்கு இந்தியாவில் அதிக தேவை இருந்தது. இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் அதன் தேவை அதிகமாக இருந்தது. எனவே முருங்கை பயிரிட முடிவு செய்து அந்த பயிரை பற்றி நன்கு புரிந்து கொள்ள, சாகர் தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள முருங்கை தோட்டங்களுக்கு சென்றார்.

முருங்கை இலையில் ரூ.12 லட்சம்

அங்கு அவர் முருங்கை சாகுபடி மற்றும் அதன் வணிக திறன்களைப் படித்தார். அதன் பிறகு தனது 5 ஏக்கர் நிலத்தில் முருங்கைக்காய் பயிரிட்டார். இப்போது அந்த 5 ஏக்கரில் அவருக்கு ஆண்டுக்கு 36 லட்சம் வருமானம் கிடைக்கிறது. முருங்கை இலை, முருங்கைக்காய் மற்றும் மருங்கை விதைகள் மூலம் வருவாய் ஈட்டுகிறார். முருங்கை இலைகள் மூலம் மட்டும் தனக்கு ரூ.12 லட்சம் கிடைப்பதாக தெரிவித்துள்ளார். ஒரு ஏக்கரில் முருங்கை இலைகளுக்காக முருங்கை மரங்களை நடவு செய்துள்ளார். இது தவிர முருங்கைக்காய் மூலம் ரூ.17 லட்சம் வருமானம் கிடைக்கிறது. அதோடு முருங்கை விதை மூலம் ரூ.7 லட்சம் கிடைப்பதாக தெரிவித்துள்ளார்.

மொத்தம் ரூ.36 லட்சம் கிடைக்கிறது. இதில் ரூ.6 லட்சம் உரம், ஆட்கள் கூலி போன்ற செலவுகளுக்கு சென்றுவிடுகிறது. ரூ.30 லட்சம் ரூபாய் லாபமாக கிடைப்பதாக சாகர் தெரிவித்துள்ளார். உலர்ந்த முருங்கை இலைகளை பொடியாக்கி பதப்படுத்தி, மொத்த விற்பனையாளர்கள் மற்றும் ஆர்கானிக் கடைகளுக்கு நேரடியாக விற்பனை செய்கிறார். இதன் மூலம் உலர்ந்த இலை பொடிகளை ஒரு கிலோ ரூ.500 முதல் 600 வரை விற்பனை செய்கிறார். இலைகள், முருங்கை காய், விதைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட முருங்கைப் பொருட்களிலிருந்து வருமானம் கிடைக்கிறது.

இலைகள் மற்றும் முருங்கைகாய் ஆகிய இரண்டும் அதிக சத்துக்கள் கொண்டது என்பதால் அதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதிக தேவை இருக்கிறது. விவசாயம் எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்று சாகர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.