Viral: சொறிந்துவிடும் வேலை; மாதம் 14 லட்சம் வருமானம்; சீன இளைஞரின் வித்தியாசமான தொழில்!
சீனாவின் ஹூபய் (Hubei) மாகாணத்தைச் சேர்ந்தவர் சாங் சியாவோகியோ (Zhang Xiaoqiao - 32). இவர் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு ஏழு வெவ்வேறு வேலைகளைச் செய்தார். ஒரு கட்டத்தில் சொந்தமாக நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்த வேண்டும் என்பதற்காக, சமூக ஊடகம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுத் தோல்வியைக் கண்டார். அவரின் பல்வேறு முயற்சிகள் தோல்வியைத் தழுவிய நிலையில், சமூக ஊடகத்தில் ஒரு வீடியோ ஒன்றை கவனித்திருக்கிறார்.
அந்த விடீயோவில், மனைவி கணவனுக்கு சொறிந்துவிடும் காட்சி இடம் பெற்றிருந்தது. அந்த வீடியோவின் கமெண்ட் பகுதியில், எனக்கும் யாராவது இப்படி சொறிந்துவிட்டால் நான் பணம் தருகிறேன் எனப் பலரும் கமெண்ட் செய்திருக்கின்றனர்.
அதைப் பார்த்தவுடன் யோசனை வந்தவராக ஷென்செனின் பாவோஅன் (Baoan) மாவட்டத்தில், `இங்கு சொறிந்துவிடப்படும் என்ற விளம்பரத்துடன் கடையைத் தொடங்கினார். இப்போது சாங் சியாவோகியோவுக்கு சீனாவின் பரபரப்பான நகரங்களில் சொரிந்துவிடுவதற்கான இரண்டு கிளைக் கடைகளை நடத்தி வருகிறார். இதன் மூலம் மாதம் சுமார் 100,000 யுவான் (தோராயமாக ரூ. 14 லட்சம்) ஈட்டி வருகிறார்.
இது தொடர்பாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்ட சாங் சியாவோகியோ பேட்டியில், ``என் கடையில் பயிற்சி பெற்ற பணியாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வாடிக்கையாளர்களைப் படுக்க வைத்து, அவர்களின் உடலின் பல்வேறு பகுதிகளில் மெதுவாகச் சொறிந்துவிடும் பிரத்யேகச் சேவையை வழங்குகிறார்கள். இதற்காகப் பணியாளர்கள் கூர்மையான செயற்கை நகங்களை அணிந்துகொண்டு மென்மையாகச் சொறிகின்றனர். இந்தச் சேவை வாடிக்கையாளர்களுக்கு மன அமைதியைத் தந்து, நல்ல உறக்கத்தைப் பெற உதவுகிறது என கூறுகிறார்கள். உணர்ச்சிமிக்க பகுதிகளில் சொறியும்போது வாடிக்கையாளர்களுக்குச் சிரிப்பும் வருகிறது.
சீனாவில் இதற்கு முன் இப்படி ஒரு சேவை இல்லாததால், சுயமாகவே இதற்கான நுட்பங்களை ஆராய்ச்சி செய்து உருவாக்கினோம். முதல் தர நகரங்களில் வாழும் மக்களுக்கு மனஅழுத்தம் அதிகம் என்பதால், இந்தச் சேவைக்கு நல்ல தேவை இருக்கிறது. பல வாடிக்கையாளர்கள் இது சாதாரண மசாஜை விடவும் அதிக மனநிறைவைத் தருவதாகக் கூறுகிறார்கள். ஒரு மணி நேர சொரிந்துவிடும் சேவைக்கு வாடிக்கையாளர்கள் சுமார் 300 யுவான் (தோராயமாக ரூ. 4,200) கட்டணமாகச் செலுத்துகின்றனர்.
என் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களில் 70 சதவீதம் பேர் ஆண்கள், 30 சதவீதம் பேர் பெண்கள். தற்போது இந்த இரண்டு கடைகளும் லாபப் பாதையில் இயங்கி வருகின்றன. சீனா முழுவதும் 100 கடைகளைத் திறப்பதே நீண்டகால இலக்காகும்." என்றார்.
மக்களுக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டால், அவர்களே சொறிந்து கொள்வார்கள், தங்களுக்கு நெருக்கமானவர்களின் உதவியை நாடுவார்கள் அல்லது சந்தையில் உள்ள ஏதேனும் உபகரணங்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் சாங் சியாவோகியோ அதைத் தொழிலாக மாற்றியது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
