நாளை ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி... கொண்டாடுவது எப்படி? - ஒரு வழிகாட்டல்!
ஆவணி மாத சிறப்புகளில் ஒன்று ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி. பாரததேசமெங்கும் இருக்கும் சனாதனிகளால் தவறாமல் கொண்டாடப்படும் பண்டிகை இது எனலாம். கிருஷ்ண ஜயந்தி கொண்டாடினால் வீட்டில் மங்கலங்கள் தொடரும். மகிழ்ச்சி பொங்கும் என்பது நம்பிக்கை. அப்படிப்பட்ட பண்டிகையின் தாத்பர்யங்கள் குறித்து சிந்திப்போம்.
எதற்காகக் கொண்டாடுகிறோம்?
பொதுவாக சந்ததி விருத்தி ஆவதற்கு உரிய விஷயங்களான விவாகத்தடை, குழந்தைப்பேற்றில் தடை, கருச்சிதைவுகள்... இது போன்ற விஷயங்களுக்கு நமது ஜனனகால ஜாதகத்தில் உள்ள கடுமையான தோஷங்களே காரணம் என்கிறது ஜாதகவியல்.
இத்தகு தோஷங்களுக்குக் காரணமாக உள்ள கொடிய ஜன்மாந்திர பாவங்களுக்கு பிராயச்சித்தமாக எவ்வளவோ பரிகாரங்கள் செய்கிறோம். இதுபோன்ற பரிகாரங்களை விட அதிகமான பலனைத் தரவல்லது எளிமையான ஜன்மாஷ்டமி பூஜை. சர்ப்பதோஷங்கள், பிதுர் தோஷங்கள் முதலானவற்றையும்; நமது ஏழு ஜன்மங்களிலும் தொடர்ந்து வரும் சகல பாவங்களையும் போக்கி சத்புத்திரபிராப்தியை அருளிடக்கூடிய ஒரே விரத பூஜை இது.
ஆதியில் இந்த பூஜையை பார்வதி பரமேஸ்வரரால் உபதேசிக்கப் பட்டது. பிரம்மதேவரால் அவருடைய மகனான நாரதருக்கும், நாரதரால் சனகாதி முனிவர்களுக்கும், சனகாதிகள் மூலமாக பூலோகத்தில் அரிச்சந்திரனுக்கும் உபதேசிக்கப்பட்டு பின்னர் அனைவரிடத்திலும் பரவியது என்று சொல்லப்படுகிறது.
எப்பொழுது கொண்டாட வேண்டும்?
கிருஷ்ணரின் அவதாரத்தினை இரண்டு விதமாகக் கொண்டாடுவது வழக்கம். திதியின் அடிப்படையில் ஜன்மாஷ்டமி என்றும்; நட்சத்திரத்தின் அடிப்படையில் ஸ்ரீ ஜயந்தி என்றும் இரு வகைகளில் கொண்டாடப்படும் பண்டிகை இது மட்டும்தான். சில வேளைகளில் இவ்விரண்டும் சேர்ந்தார் போல் அமைந்து விடுவதுமுண்டு. அப்படித்தான் இந்த ஆண்டு இரண்டும் இணைந்து நாளை (4.9.26) அன்று வருகிறது.
கிருஷ்ணனுக்கு வெண்ணெய்... ஏன்?
இன்றைய தினத்தில் நம் ஒவ்வொருவர் இல்லங்களிலும் குழந்தை வடிவில் கிருஷ்ணர் உலவுவதாக ஐதிகம். கோகுலத்தில் வெண்ணையைத் திருடி உண்ணும்போது குழந்தை கிருஷ்ணர் அங்குமிங்கும் ஓடி ஒளிந்து கொள்வாராம். அவசரத்தில் வெண்ணையில் பதிந்த குழந்தை கிருஷ்ணரின் பாதச்சுவடுகளால் கோபியரின் இல்லங்கள் முழுவதும் நிறைந்துவிடுமாம். அந்த ஐதிகத்தின் அடிப்படையில்தான் மாவினால் கிருஷ்ணர் பாதங்களை இல்லம் முழுவதும் கோலம் போன்று இடுகிற வழக்கம் உண்டானது.
உறியடி உற்சவம் ஏன்?
கிருஷ்ணர் கோபியரின் இல்லங்களில் வெண்ணெயை உண்டுவிட்டு சும்மா வரவில்லை. உயரத்தில் தொங்குகின்ற வெண்ணெய் உறிகளை உடைத்தும் தன் நண்பர்களுடன் விளையாடி இருக்கிறார். அந்த லீலைகளை நினைவு கூறும் விதமாகத்தான் உறியடி உற்சவங்கள் நிகழ்த்தப்படுகின்றன.
எந்த பூக்கள் விசேஷம்?
வாசனை நிறைந்த பூக்களால் கிருஷ்ணரைப் பூஜிப்பது விசேஷம். குறிப்பாக நந்தியாவர்த்தம், பாரிஜாதம் எனப்படும் பவழமல்லிகை இவ்விரண்டும் சிறப்பானவை. சத்திய பாமாவுக்காக தேவலோகத்தில் இருந்து பூமிக்குக் கொண்டுவரப்பட்டு கோகுலத்தில் கிருஷ்ணரால் நடப்பட்ட விருட்சங்கள் இவை என்பது சிறப்பு.
துளசி விசேஷம் ஏன் தெரியுமா?
இலைகளில் துளசிதளம் விசேஷமானது. பிருந்தை என்கிற பக்தையின் பக்திக்கு ஆட்பட்ட கண்ணன் என்றும் அவளை விட்டுப் பிரியாதிருக்கும்படி அனுக்ரகித்தார். பிருந்தாவனம் கிருஷ்ணருக்கு மிகவும் விருப்பமான இடம் அல்லவா?!
எங்கெல்லாம் கிருஷ்ண நாமம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் துளசி செழித்து வளரும். இது கிருஷ்ணரிடம் துளசி கேட்டு வாங்கிய வரம். அதேபோல் எங்கெல்லாம் துளசி போற்றப்படுகிறதோ அங்கெல்லாம் கிருஷ்ணர் நீங்காது உறைந்து அருளுகிறார். இது கிருஷ்ணர் தாமே துளசிக்கு அளித்த வரம்.
விதவிதமான பட்சணங்கள் ஏன்?
நிவேதனங்களில் முறுக்கு, சீடை போன்ற பட்சணங்கள், அப்பம், அவல், தயிர், பால், வெண்ணெய், போன்றவை சிறப்பானவை. கனிகளில் வாழை மற்றும் நாவற்கனி விசேஷம். கூடுதலாக சம்பிரதாயமாக தேங்காய், வெற்றிலை சேர்த்துக்கொள்ளுதல் வழக்கம்.
ஒருமுறை கிருஷ்ணர் கோவர்த்தன மலையைத் தன் விரலால் குடைபோல் தூக்கி கோகுலவாசிகளைக் காப்பாற்றினார் அல்லவா? இந்நிகழ்வு முடிந்தவுடன் பலமிழந்து களைத்துப் போயிருந்த கண்ணனுக்கு விதவிதமான பட்சணங்களைத் தயார் செய்து கோகுலவாசிகள் அளித்தனராம். அதனைப் போற்றுகிற வகையில்தான் ஜன்மாஷ்டமி அன்று அதிகமான பட்சணங்களைச் செய்கிறோம்.
கோகுலத்தில் இருந்த ஏழை மூதாட்டி விற்றுக் கொண்டிருந்த நாவல் பழங்களை வாங்குவதற்காக கைநிறைய தானியங்களை எடுத்துக் கொண்டோடினார் கிருஷ்ணர். ஆனால் அவர் குழந்தை அல்லவா? தானியங்கள் சிந்தி விட்டதால் ஓரிரு மணிகளே விரல்களில் ஒட்டிக்கொண்டிருந்தன. ஆயினும் அப்பெண்மணி அவற்றைப் பெற்றுக்கொண்டு நாவற்கனிகளை அளித்தாள். வீடு திரும்பிய மூதாட்டியின் கூடையில் தானியங்களுக்கு பதிலாக பொன்னும் மணியும் மின்னிக்கொண்டிருந்தன.
ஏழை மூதாட்டிக்கு அருளிய கிருஷ்ணருக்கு அன்று முதல் நாவற்கனி விருப்பமான நிவேதனம் ஆயிற்று.
அவல் முக்கியம் ஏன்?
குசேலரின் பரிபூரண அன்பிற்கு அடையாளமாக அவரால் அளிக்கப்பட்ட எளிமையான அவல் பிரசாதத்தினை ஏற்றார் கிருஷ்ணர். அதனடிப்படையில் ஜன்மாஷ்டமி நிவேதனங்களில் அவல் பண்டத்தினை இடம்பெறச் செய்வது முக்கியமான சம்பிரதாயமாக இருக்கிறது.
பால் பொருட்கள் ஏன்?
இன்றைய தினம் கிருஷ்ணருக்கு உகந்த பால் பொருட்களை நிவேதிப்பதால் ஆயிரம் பசுக்களை கோதானம் செய்வதற்கு நிகரான புண்ணியம் கிடைத்திடும். நிவேதன பிரசாதமான வெண்ணையை உட்கொள்ளும் பெண்களுக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைத்திடும் என்பது தொன்றுதொட்ட நம்பிக்கை.
எப்படி பூஜை செய்யலாம்?
இயன்றவர்கள் முறைப்படி விரதமிருந்து சந்தான கோபாலகிருஷ்ண பூஜையைச் செய்யலாம். அல்லது செய்கிற இடங்களுக்கு சென்று பங்கேற்கலாம். விக்கிரகமோ, படமோ, மண்பொம்மையோ எந்த திருவடிவம் உங்கள் வீட்டில் இருந்தாலும் அதற்கு பூஜை செய்யலாம். அதிக நியமங்கள் தேவை இல்லை. மந்திரபாராயணங்கள் வேண்டியதில்லை. உள்ளன்போடு கிருஷ்ணரை அழைத்தாலே போதும். கூப்பிட்ட இடத்தில் வந்து அழகாக அமர்ந்து விடுவார் நம் குழந்தை கிருஷ்ணர்.
அன்றைய தினத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த புண்ணிய கதையைக் கேட்பதும்; பாராயணம் செய்வதும்; பிறருக்கு சொல்வதும் அளப்பறிய பலனை அள்ளித் தந்திடும்.
இந்த ஒப்பற்ற புண்ணிய தினத்தினை விரதமிருந்து பூஜையாகச் செய்யலாம்; பண்டிகையாகக் கொண்டாடலாம்; மேலும் ஆட்டபாட்டங்களுடன் உற்சவம் ஆகவும் நிகழ்த்தலாம். இப்படி அவரவர் சூழலுக்கும்; மனோநிலைக்கும் ஏற்றவாறு கொண்டாடப்படும் ஒரே பண்டிகை இதுதான்.
வீண் ஆடம்பரமோ பகட்டோ தேவையில்லை. எளிமையான பூஜை, இயன்ற அளவு நாம ஜெபங்கள் இது தான் அந்த பரமாத்மன் நம்மிடம் விரும்புவது.

கிருஷ்ணர் பாதங்களை பூஜிப்பது ஏன்?
ஜன்மாஷ்டமி அன்று சிரத்தையுடன் கிருஷ்ணரைப் பூஜிப்பவருக்கு இகபர சுகங்கள் அனைத்தும் கிடைத்து, இறுதியில் ஸ்ரீமன் நாராயணின் பாதாரவிந்தங்களை அடைந்திடும் திருவடிப்பேறும் கிடைத்திடும் என்பது பெரியோர் வாக்கு. இதன் அடையாளமாகத்தான் கிருஷ்ண ஜயந்தி அன்று ஸ்ரீ கிருஷ்ண பாதங்களை வரைந்து அவற்றையே அலங்கரித்து பூஜிக்கின்றோம்.
கலியுகத்தில் நம் கவலைகளைத் தீர்க்க வல்ல எளிமையான வழி கிருஷ்ண நாம ஜபம் ஒன்றே.
கண்ணன் அவதரித்த இந்த தினத்தில் உள்ளன்புடன் அவரை அழைப்போம். நம் அனைவரின் இல்லங்களிலும் குழந்தைக் கண்ணனின் திருப்பாதங்கள் உலவட்டும்!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

