தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவு; நகைகளைத் திருப்பிக் கேட்ட பெண்; கொடூரமாகக் கொன்ற காவலர்
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணி. இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிரியா முடிவைத்தானேந்தல் மெயின் ரோட்டில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார்.
பிரியாவின் உடன்பிறந்த சகோதரி சுப்புலட்சுமி. கணவர் இறந்ததால் பிரியாவுடன் வீட்டோடு வசித்து வந்தார். இந்த நிலையில், சுப்புலட்சுமிக்கும் அதே ஊரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் இடையே திருமணம் மீறிய உறவு ஏற்பட்டுள்ளது.
முத்துக்குமார் தட்டார்மடம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். பணத்தேவைக்காக முத்துலட்சுமியிடம் இருந்து 20 சவரன் தங்க நகைகளை வாங்கி முத்துக்குமார் அடகு வைத்ததாகக் கூறப்படுகிறது.
இவர்களின் திருமணம் மீறிய உறவு விவகாரம் பிரியாவுக்குத் தெரியவரவே, அவர் இருவரையும் கண்டித்துள்ளார். இந்த நிலையில், தன் அக்காவிடமிருந்து பெற்ற 20 சவரன் தங்கநகைகளை திருப்பித் தருமாறு முத்துக்குமாரிடம் பிரியா கேட்டுள்ளார்.
அதற்கு அவர் மறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. நகையைத் திருப்பித் தராவிட்டால் போலீஸில் புகார் அளிக்கப் போவதாக பிரியா கூறினாராம். இதனால், ஆத்திரமடைந்த முத்துக்குமார், பிரியா தனது ஜெராக்ஸ் கடையைப் பூட்டிக் கொண்டிருந்தபோது அங்கு சென்று முத்துக்குமார் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த முத்துக்குமார் அருகில் கிடந்த இரும்பு கம்பியால் பிரியாவின் தலையில் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

இதில் முகம் சிதைந்து பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரைக் கைது செய்தனர். மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த முத்துக்குமார் ஏற்கனவே மாமனார் உள்ளிட்ட இருவரை அருவாளால் வெட்டிய வழக்கில் புதுக்கோட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் வெளியே வந்த நிலையில்தான் இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

