`லேப்டாப்பையும் களிமண்ணையும் ஒருசேரக் கையாளுவோம்.! - மரபின் அடையாளம் காக்கும் மழையூர் இளைஞர்கள்
கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏசி அறைகளும், மாதாந்திரச் சம்பள உத்திரவாதமும் சிவப்புக் கார்பெட் விரித்து அழைத்தாலும், "எங்க பரம்பரைத் தொழிலை நாங்க விட்டுக் கொடுக்க மாட்டோம்!" என மரபின் அடையாளத்தைக் கெத்தாகக் கையில் ஏந்தியிருக்கிறார்கள் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகாவில் உள்ள மழையூர் கிராமத்து இளைஞர்கள்.
புதுக்கோட்டையிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மழையூர் வேளார் கலைக்கிராம தெருவில் குலாலர் சமூகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், தலைமுறை தலைமுறையாக மண்ணோடு மண் பிணைந்து, களிமண் சார்ந்த கலைப் பணிகளைச் செய்து வருகிறார்கள்.
ஐடி துறை, கேட்டரிங், சாஃப்ட்வேர் என நவீனக் கல்வியைக் கற்றுத் தேர்ந்த இளைஞர்கள் சிலர், தங்களின் பாரம்பரியத் தொழில் நலிந்துவிடக் கூடாது என்பதற்காக லேப்டாப்பையும் களிமண்ணையும் ஒருசேரக் கையாண்டு வருகிறார்கள். விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கும் இந்தச் சூழலில், வண்ணமயமான பிள்ளையார் சிலைகளுக்கு உயிர்கொடுத்துக் கொண்டிருந்த அந்த இளைஞர்களிடம் நேரடியாகச் சந்தித்துப் பேசினோம்.
"கம்ப்யூட்டரையும் பிடிப்பேன்... களிமண்ணையும் விடமாட்டேன்!"
பி.காம் முடித்துவிட்டுச் சென்னையில் உள்ள பிரபல ஐடி கம்பெனியில் பணியாற்றும் 22 வயதான பிரகாஷ், தனது லேப்டாப்பிற்கு நடுவே களிமண்ணில் கலை வண்ணம் கொடுத்துக் கொண்டிருந்த காட்சி நம்மை வியப்பில் ஆழ்த்தியது.

"12 வயசுல இருந்து இந்த வேலையைக் கத்துக்க ஆரம்பிச்சேன். இப்போ வொர்க் ஃப்ரம் ஹோம்ல இருக்கிறதால, கம்பெனி வேலையையும் பார்த்துகிட்டு பகுதிநேரமா என்னோட பரம்பரைத் தொழிலையும் செய்யுறேன். திருஷ்டி பொம்மை, விநாயகர், அடுப்பு, பானைகள்னு எல்லாமே எனக்குச் செய்யத் தெரியும்.
ஆனா, இப்போ மூலப்பொருளான மண்ணை எடுக்குறதுதான் எங்களுக்குப் பெரிய பிரச்சினையா இருக்கு. அரசாங்கம் வண்டல் மண் இலவசமா எடுத்துக்கலாம்னு அறிவிச்சிருந்தாலுமே, அந்த மண்ணு மண்பாண்ட கலைக்கு உகந்ததா இல்லை. எல்லா மண்ணுலயும் இந்த வேலையைச் செய்ய முடியாது. இதுக்குன்னு அடாப்ட் ஆகுற மண்ணுல மட்டும்தான் வடிவமைக்க முடியும்.

அரை அடியில இருந்து எட்டரை அடி வரைக்கும் பிள்ளையார் சிலைகள் செய்வோம். ஒரு எட்டரை அடி சிலையை செஞ்சு முடிக்க குறைஞ்சது 15 நாள் ஆகும். மினிமம் 100 ரூபாய்ல இருந்து மேக்சிமம் 25,000 ரூபாய் வரைக்கும் சிலைகள் விலை போகும். இப்போ பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (POP) சிலைகள் சந்தையில அதிகமானதுனால, மண்ணுப் பிள்ளையாருக்கான ஆர்டர்ஸ் எல்லாம் பாதியா குறைஞ்சிடுச்சு. எங்க தயாரிப்புகள் திருச்சி வரைக்கும் கூட விற்பனைக்குப் போகும்" என்கிறார் பிரகாஷ்
"கேட்டரிங் வேலை பார்த்தேன்... ஆனா களிமண் கலைதான் என் விருப்பம்!"
12-வது முடித்துவிட்டு டிப்ளோமா கேட்டரிங் படித்த புஷ்பராஜ், தன் பெற்றோர் குமரேசன் - தனபாக்கியம் வழியில் 2015-க்குப் பிறகு முழு நேரமாகக் களிமண் தொழிலில் இறங்கிவிட்டதை விவரிக்கிறார்.

"வெளியில வேலைக்குப் போனா மாசம் 15,000 ரூபாய் நிச்சயமான வருமானம் வரும். ஆனா மண்பாண்டத் தொழில்ல மாசா மாசம் நிலையான வருமானம் வரும்னு சொல்ல முடியாது.
தொழில்ல மார்க்கெட்டிங்கை விடப் பெரிய பிரச்சனை மண் எடுக்குறதுதான். நாங்க வேலையை செய்யறதுக்கு மலையாகுளத்து மண், ஈரமண்னு ரெண்டு வகையான களிமண்ணை மிக்ஸ் பண்ணிதான் பண்ணுவோம். மலையாகுளத்து மண் கருப்பு கலர்ல இருக்கும், ஈரமண் மஞ்சள் கலர்ல இருக்கும். மலையாகுளத்து மண் எடுக்குறதுல பிரச்சனை இல்லை. ஆனா, எங்களுக்குத் தேவையான அந்த ஈரமண் இருக்குற இடம் வனத்துறை கட்டுப்பாட்டுல வருது. பர்மிஷன் வாங்கி எடுத்தாலும், சில நேரம் வனத்துறை அதிகாரிகள் பிடிச்சுட்டு போயிடுறாங்க.

அடுத்த பெரிய பாதிப்பு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (POP) சிலைகள்தான். POP சிலைகள் செய்றவங்க மோல்டு போட்டு ஒரு நாளைக்கு 10 சிலைகள்கூட உற்பத்தி பண்ணிடுவாங்க. ஆனா, நாங்க களிமண்ல ஒரு சிலை செய்ய 7 முதல் 10 நாள் வரை ஆகும். POP சிலைகள் விலை கம்மியா கிடைக்குதுங்கறதுக்காக மக்களும் அதை நோக்கிப் போயிடுறாங்க" எனத் தயாரிப்புச் சவால்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
"சாஃப்ட்வேர் வேலையை உதறிட்டேன்... பாரம்பரியம்தான் என் அடையாளம்!"
புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் BCA முடித்த 26 வயதான பாலமுருகன், கம்ப்யூட்டர் வேலையை உதறிவிட்டு 10 ஆண்டுகளாக இத்தொழிலில் முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறார்.
"முன்னாடி எல்லாம் எங்க மழையூர்ல இருந்து மட்டுமே விநாயகர் சதுர்த்தி சீசனுக்கு 200 பிள்ளையாருக்கு மேல விற்பனைக்கு போகும். ஆனா இப்போ POP சிலைகளால எங்களோட வாடிக்கையாளர்கள் பாதியா குறைஞ்சுட்டாங்க.
எங்க ஊரைப் பொறுத்தவரைக்கும் பெரியவர்கள், பெண்கள் தவிர டிகிரி படித்த 15 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த தொழிலை செஞ்சுட்டு இருக்கோம். வருமானம் கம்மியா இருந்தாலும், விவசாய வேலை, மத்த வேலைகளையும் பார்த்துகிட்டு இந்த பாரம்பரிய தொழிலைக் காப்பாத்தணும்னு தொடர்ந்து செஞ்சுட்டு இருக்கோம்" என்கிறார் பாலமுருகன்.
"20 ஆண்டுகாலப் போராட்டம்... அரசுக்கு கோரிக்கை!" -
30 வயது இளைஞர் சக்திவேல் பேசுகையில்,
"மழைக்காலம் வந்தாலே களிமண் உலர்வதும் அரிதாகி, தொழிலை மேற்கொள்ள முடியாமல் மண்பாண்டக் கலைஞர்களின் வாழ்வாதாரம் முடங்கிப்போவது வழக்கமான ஒன்றாகிவிடுகிறது. தற்போதைய நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 454 குலாலர் குடும்பங்களுக்கு அரசு வாரியம் மூலமாக மழைக்கால நிவாரணத் தொகையாக ரூ.5,000 வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், மழையூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்களுக்கு இந்த நிதி சென்றடையாமல் விடுபட்டுப்போயுள்ளது. நலவாரியத்தில் பதிந்து பலமுறை மனுக்கள் அளித்தும், பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பலனளிக்காத நிலைதான் நீடிக்கிறது. "இது ஏதோ நேற்றோ இன்றோ எழுந்த பிரச்சனை இல்லை; கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் அரசிடம் முன்வைத்துவரும் நியாயமான கோரிக்கை!" எனக் குமுறுகிறார்கள் மழையூர் பகுதி உழைப்பாளிகள்.
இதனுடன் சேர்த்து, கையினால் மட்டுமே மண் எடுக்கும் தங்களுக்கு எந்தவித இடையூறுமின்றி ஏரி, குளங்களில் மண் எடுக்க நிரந்தர உரிமம் ( லைசன்ஸ்) வழங்க வேண்டும் என்றும், மழைக்காலத்தில் சிலைகளையும் பாண்டங்களையும் பாதுகாப்பாக உலர்த்த தொழில்கூட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.." என்றும் அரசிடன் கோரிக்கை வைக்கிறார்.

நவீன வேலைவாய்ப்புகளும் தொழில்நுட்ப வளர்ச்சியும் நம்மை வேகமாகக் கடந்து செல்லும் இந்த நவீன யுகத்தில், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் போன்ற சூழல் கேடு விளைவிக்கும் செயற்கைப் பொருட்களின் ஆதிக்கத்தையும் தாண்டி, தன் பாரம்பரிய மண்ணையும் மரபையும் கைவிடாமல் காத்து நிற்கும் மழையூர் இளைஞர்களின் சுற்றுச்சூழல் நேசமும், தங்களின் வேர்களை மறக்காத மண்காதலும் உண்மையிலேயே போற்றப்பட வேண்டிய ஒன்று!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


