Ilaiyaraaja: எப்பவும் நான் ராஜா; கார்த்திக் சுப்புராஜ் டு மாரி செல்வராஜ் - இளையாராஜாவின் லைன் அப்

இளையராஜா இசையமைத்திருக்கும் டோரதி படத்தின் பாடல்கள்தான் இப்போது சார்ட்பஸ்டர். இந்தப் படத்தின் பாடல்களை அவரே எழுதியும் இருக்கிறார்.

கார்த்திக் சுப்பராஜின் இந்த டோரதி, மாரி செல்வராஜின் மஞ்சணத்தி, தியாகராஜன் குமாரராஜாவின் பாக்கெட் நாவல் என அடுத்தடுத்து எதிர்பார்க்கப்படும் படங்களுக்கும் இளையராஜாதான் மியூசிக் டைரக்டர்! அவருடைய லைன் அப் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போமா...

இளையராஜா

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சனாந்த், ரிஷிகாந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள டோரதி திரைப்படம் எதிர்பார்ப்புடன் வெளியாகவிருக்கிறது.

கார்த்திக் சுப்பராஜ் மற்றும் இளையராஜா இணையும் முதல் படம் இதுதான். செப்டம்பர் 11-ஆம் தேதி இப்படம் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 25-ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது.

இதே தேதியில், அறிமுக இயக்குநர் டி.டி. பாலாசந்திரன் இயக்கத்தில் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள லெனின் பாண்டியன் திரைப்படமும் வெளியாகிறது. இப்படத்திற்கும் இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

மேலும், ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களை இயக்கிய தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஜ் பி. ஷெட்டி, மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகிவரும் பாக்கெட் நாவல் படத்திற்கும் இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

மாடர்ன் லவ் சென்னை ஆந்தலஜிக்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா - இளையராஜா கூட்டணியில் உருவாகும் படம் இது.

பிறகு, எஸ். ஏ. விஜயகுமார் இயக்கத்தில் சமுத்திரக்கனி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.ஏ. முத்தரசன் நடித்துள்ள அரிசி திரைப்படத்திற்கும் இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் ராப் பாடகர் வேடனும் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

இளையராஜா
இளையராஜா

இத்துடன், இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள மனுஷி திரைப்படத்திற்கும் இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

மேலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், பிரியங்கா மோகன், காயடு லோஹர் நடிப்பில் உருவாகவிருக்கும் மஞ்சணத்தி திரைப்படத்திற்கும் இளையராஜா இசையமைப்பாளராகக் கமிட் ஆகியிருக்கிறார். மாரி செல்வராஜ் - இளையராஜா கூட்டணியில் உருவாகும் முதல் படம் இதுதான்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.