தாக்கரேயிக்கு மீண்டும் ஷாக்: `அமைச்சர் பதவி தர்றோம் - 14 எம்.எல்.ஏ.க்களை இழுக்க ஷிண்டே அணி முயற்சி?

மகாராஷ்டிரா சிவசேனாவில் கடந்த 2022-ம் ஆண்டு பிளவு ஏற்பட்டது. தற்போது துணை முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அணி உருவானது. தற்போது அந்த புதிய அணிதான் உண்மையான சிவசேனா என்று தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்த 6 எம்.பிக்களை ஏக்நாத் ஷிண்டே தனது கட்சிக்கு இழுத்துக்கொண்டார்.

அந்த எம்.பி.க்கள் தலா 50 கோடி வாங்கிக்கொண்டு அணி மாறியதாக உத்தவ் தாக்கரே தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அந்த அதிர்ச்சியில் இருந்து உத்தவ் தாக்கரே மீள்வதற்குள் உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்களை தங்களது பக்கம் இழுப்போம் என்று ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கூறிக்கொண்டிருக்கின்றனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 20 இடங்களில் வெற்றி பெற்றது.

ஆபரேசன் டைகர் 3.0

அந்த எம்.எல்.ஏ.க்களில் 3-ல் இரண்டு பங்கு எம்.எல்.ஏ.க்களை அதாவது 14 எம்.எல்.ஏ.க்களை தங்களது பக்கம் இழுக்கும் வேலையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஈடுபட்டுள்ளது. இதற்கு ஆப்ரேசன் டைகர் 3.0 என்று அக்கட்சியினர் பெயர் வைத்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இது குறித்து சிவசேனா(ஷிண்டே)வை சேர்ந்த அமைச்சர் உதய் சாமந்த் அளித்த பேட்டியில்,"சிவசேனா(உத்தவ்)வை சேர்ந்த கிராம பஞ்சாயத்து முதல் மாநகராட்சி மற்றும் எம்எல்ஏக்கள் மற்றும் பெரிய தலைவர்கள் வரை ஏக்நாத் ஷிண்டே தலைமையின் கீழ் பணியாற்ற விரும்புகிறார்கள். அவர்கள் அணி மாறத் தயாராக இருக்கிறார்கள் என்றுதான் இதற்கு அர்த்தம். 14 சிவசேனா (உத்தவ்) எம்எல்ஏக்கள் விரைவில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் கட்சியில் சேரும்ஆபரேஷன் டைகர் 3.0 வெற்றிபெறும் போது அது மக்களுக்கு பிரேக்கிங் நியூஸாக தெரியும்என்று தெரிவித்தார்.

5 பேருக்கு அமைச்சர் பதவி

சிவசேனா(உத்தவ்) எம்.எல்.ஏ.க்களில் ஐந்து அல்லது ஆறு பேருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக கூறி ஏக்நாத் ஷிண்டே கட்சியை சேர்ந்த தலைவர்கள் பேரம் பேசி வருகின்றனர். இந்த பணிக்காக பிரத்யேகமாக சிவசேனா(ஷிண்டே) அமைச்சர்கள் மூன்று பேரை ஏக்நாத் ஷிண்டே நியமித்து இருக்கிறார்.

அவர்கள் மூன்று பேரும் உத்தவ் தாக்கரே கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சிவசேனா(உத்தவ்) க்கு 20 எம்.எல்.ஏக்கள் உள்ளனர், பிளவு ஏற்படுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு 14 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாக இருக்கிறது.

உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏக்களில் உத்தவின் மகன் ஆதித்யா மற்றும் அவரது உறவினர் வருண் சர்தேசாய் உட்பட 10 பேர் மும்பையில் இருந்து வெற்றி பெற்றவர்கள் ஆவர். 20 எம்எல்ஏக்களில் 14 பேர் பிரிந்து சென்றால் அது உத்தவ் தாக்கரே தலைமையிலான கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமையும். ஆனால் தங்களது கட்சியில் எந்த வித பிளவும் இல்லை என்று உத்தவ் தாக்கரே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஊகங்களில் வெளியாகும் செய்திகள் ஆதாரமற்றது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து சிவசேனா (உத்தவ்) எம்எல்ஏ கைலாஷ் பாட்டீல் கூறுகையில், ``மராத்தா இடஒதுக்கீடு மற்றும் ஓபிசி எதிர்ப்புகள் நடந்து வருவதால், கவனத்தை திசை திருப்ப ஷிண்டேவின் கட்சி எங்களது கட்சியில் பிளவு இருப்பதாக வதந்திகளை பரப்புகிறது. சிவசேனா (உத்தவ்) எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியை விட்டு விலகவோ அல்லது வெளியேறவோ மாட்டார்கள். இவை அனைத்தும் ஆதாரமற்ற ஊகங்கள்," என்று அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.