Toxic: என் மகன் தீவிரவாதி இல்லை; அவர் பேருந்து ஓட்டுநரின் மகன்! - யஷின் தாயார் பதில்
நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் டாக்ஸிக் திரைப்படம், எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்று வருகின்றது.
இப்படத்தின் ரிலீஸூக்குப் பிறகு சோஷியல் மீடியாவில் யஷ் குறித்து பகிரப்படும் விமர்சனங்களுக்கும், தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் யஷ் குறித்து சொன்ன விஷயத்திற்கும் யஷின் தாயார் புஷ்பா அருண் குமார் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் பேசுகையில், "கே.ஜி.எஃப் படத்திற்கு முன்பு யஷ் யார்? அவர் எவ்வளவு பெரிய ஹீரோ?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
ஒரு படத்தின் பிரமாண்டமும் தயாரிப்பும்தான் அந்தப் படத்தை வெற்றிபெற வைப்பதாக அவர் கூறியிருந்தார். இந்த விவகாரம் அப்போது பெரும் பேச்சாக மாறிய நிலையில், தற்போது மீண்டும் இணையத்தில் வைரலானது.
இதுகுறித்து யஷின் தாயார் புஷ்பா, "என் மகன் ஒன்றும் தீவிரவாதி இல்லை. கே.ஜி.எஃப் படத்திற்கு முன்பே கன்னட சினிமாவில் கூக்ளி, டிராமா, மிஸ்டர் அண்ட் மிசஸ் ராமாச்சாரி எனத் தொடர்ந்து ஐந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய முன்னணி நடிகராகத்தான் அவன் இருந்தான்.
அப்படி இருக்கும்போது, கே.ஜி.எஃப்-க்கு முன்பு யஷ் யார் என்று கேட்க வேண்டிய அவசியமே இல்லை. என் மகன் சினிமா பின்னணியோ அல்லது பண பலமோ உள்ள குடும்பத்தில் பிறந்தவன் அல்ல. அவன் ஒரு பேருந்து ஓட்டுநரின் மகன்.

தனது சொந்த உழைப்பாலும் திறமையாலும் மட்டுமே இந்த உயரத்தை அடைந்திருக்கிறான். ஒரு தாயாக அவனை நினைத்துப் பெருமைப்படுகிறேன்" என்றவர், "யஷ் யார், எங்கிருந்து வந்தான் என்று கேள்வி கேட்பவர்களுக்கு அவர்களின் மொழியிலேயே பதில் சொல்ல எனக்குத் தெரியும்.
ஆனால், அதைத் துணிச்சலோடு நேருக்கு நேர் கேட்க வேண்டும். என் மகனின் வளர்ச்சியைத் தடுக்கவும், அவன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்ஸிக் படத்திற்கு எதிராகத் திட்டமிட்டு சிலர் தவறான பிரச்சாரங்களைச் செய்து வருகிறார்கள்.
ஆனால், மக்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவு இருக்கும் வரை என் மகனின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது" எனப் பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

