ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் அதிசய ஆஞ்சநேயர்... பெங்களூர் தரிசனம்!

பெங்களூரு நகரத்தில் `தொட்ட பனஸ்வாடி’ எனும் இடத்தில் அருள்பாலிக்கும் பனஸ்வாடி ஆஞ்சநேயர் மிகவும் சக்திவாய்ந்தவர். அனுமன் ஜயந்தி நாளன்று ஆனந்தக்கண்ணீர் சிந்தும் அற்புத தெய்வம் இவர் என்று நேரில் பார்த்த பக்தர்கள் பரவசத்துடன் சொல்கின்றனர்.

இந்த ஆஞ்சநேயர் ஶ்ரீவியாசராஜ மகரிஷியால் ஸ்தாபிக்கப் பட்டவராம். ஆகவே, இந்த ஆலயம் மிகவும் பழைமையானது என்கிறார்கள். அக்காலத்தில் மிகச் சிறியதாக இருந்த ஆலயத்தை, சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரை நிர்மாணித்த கெம்பே கவுடா மன்னர் விரிவாகக் கட்டியுள்ளார்.

ஆலயத்தின் இன்னொரு சிறப்பு அதன் மூலவர் திருமேனி. பெரும்பாலான கோயில்களில் அஞ்சலி ஹஸ்தத்துடன் பக்த ஆஞநேயராகத் திகழும் ஸ்வாமி, இங்கே இந்தக் கோயிலில் புஜபல பராக்கிரமத்துடன் ‘வீர ஆஞ்சநேயர்’ எனும் திருநாமத்துடன், தெற்கு நோக்கி நடக்கும் கோலத்தில் காட்சி தருகிறார்.

பொதுவாக நம் ஆலயங்களில் பஞ்சமுக ஆஞ்சநேயர், வீர ஆஞ்சநேயர், நிருத்த ஆஞ்சநேயர், கல்யாண ஆஞ்சநேயர், பக்த ஆஞ்சநேயர் எனப் பல்வேறு முக்கிய வடிவங்களில் வணங்கப் படுகிறார் அனுமன். இவற்றுள் ராமாயணக் காலத்தில் தீய சக்திகளை அழிக்கவும், பக்தர்களைக் காக்கவும் அனுமன் கொண்ட வீரஆஞ்சநேயர் வடிவம் மிகவும் சிறப்பானதாகும். இந்தக் கோலத்தில் இந்த ஆலயத்தில் அருள்வது சிறப்பம்சம். இவரை வழிபட்டால் மனத் தைரியம், பயமற்ற தன்மை மற்றும் எதிரிகளை வெல்லும் வலிமை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வியாசராஜர் வணங்கிய அனுமன்!

அழகுற அமைந்திருக்கிறது ஆலயம். சிறிய ஆலயத்தின் ராஜகோபுரம் திராவிட முறையில் கட்டப்பட்டுள்ளது. நுழைவாயில், கொடிமரம், பிரதான ஆஞ்சநேயர் சந்நிதி, அடுத்து ராமர், சீதாதேவி, லட்சுமணர் சந்நிதி, அதையடுத்து சிவபெருமான் சந்நிதி என அமைந்திருக்கிறது இந்தக் கோயில்; மிகப்பெரிய வளாகம் என்றில்லாமல், பாரம்பரியமான எளிமையான அமைப்பைக் கொண்டதாகத் திகழ்கிறது.

உள்ளே நுழைந்ததும், மேற்கு நோக்கிய பிரதான ஆஞ்சநேயர் சந்நிதி தென்படுகிறது. அதன் முன்புறம் கொடிமரம் உள்ளது. அருகில் உள்ள துளையிடப்பட்ட ஜன்னல் வழியாக ஆஞ்சநேயரைத் தரிசிப்பது மிகவும் விசேஷமானது என்கிறார்கள்.

கருவறையில் உள்ள மூலவர் சுமார் நான்கு அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன ஏகசிலா விக்ரகம். இந்த விக்ரகம் உடுப்பிக்கு அருகில் உள்ள `குந்தாபுரா’ என்னும் கிராமத்தில் சாளக்கிராமக் கல்லில் வடிக்கப்பட்டு, பனஸ்வாடிக்குக் கொண்டுவரப்பட்டதாகவும், பின்னர் குரு வியாசராஜ மகரிஷியால் ஸ்தாபிக்கப் பட்டதாகவும் ஆலயப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீரஆஞ்சநேயரின் திருவுருவம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. திருவடிகளில் ‘தண்டை’ மற்றும் ‘நூபுரம்’ உள்ளது. பாரம்பரியமான கச்சம் முறையில் அணிந்த வேட்டி, அலங்காரமான இடைக் கச்சை, அதனுடன் பிச்சுவா, திருக்கரங்களில் மணிக்கட்டில் அலங்காரமான கங்கணங்கள், மேல் கையில் கேயுரம் என அழகுற தரிசனம் தருகிறார் இந்த அனுமன்.

இடது திருக்கரத்தில் தூய்மையான பக்தியைக் குறிக்கும் வகை யில் சௌகந்திகா மலரை ஏந்தியுள்ளார். வலது கையை ‘அபய முத்திரையில்’ உயர்த்தி அருளாசி வழங்குகிறார். மேலும் குண்டலங் களால் அலங்கரிக்கப்பட்ட நீண்ட காதுகள், ஒளிவீசும் கண்கள் என அருள்கோலம் காட்டுகிறார் இந்த வீர ஆஞ்சநேயர். தண்ணருள் சுரக்கும் அந்தக் கண்களில் இருந்துதான் அனுமன் ஜயந்தி நாளில் ஆனந்தக்கண்ணீர் பெருகும் அற்புதம் நிகழ்கிறது என்று சிலிர்ப்போடு சொல்கிறார்கள் பக்தர்கள்.

இந்த ஆஞ்சநேயரை வீரம், பாதுகாப்பு மற்றும் தெய்விக சக்தியின் வடிவமாக இத்தலத்தில் வழிபடுகிறார்கள். பிராகாரத்தைச் சுற்றி வருகையில், கருவறையைச் சுற்றியுள்ள சுவர்களில் அனுமன், ராமர், சீதாதேவி, லட்சுமணர் ஆகியோரின் கண்கவர் ஓவியங்கள் உள்ளன. சிறிய அனுமன் சிலைகளின் மீது `ராம ஜெயம்’ என்று எழுதப்பட்ட சிறு சிறு காகிதத் துண்டுகளால் கட்டப்பட்ட மாலைகளை அணிவித்திருப்பதைக் காணலாம்.

`ராம நாமம் இருக்கும் இடத்தில்தான் ஆஞ்சநேயரின் அருள் இருக்கும்’ என்ற நம்பிக்கையின் அடிப்படையில், பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறும் வண்ணம் இத்தகைய மாலைகளை அணிவித்து வழிபடுகிறார்களாம்.

ஆஞ்சநேயர் சந்நிதியிலிருந்து வெளியே வந்ததும், ராமர், சீதாதேவி, லட்சுமணர் சந்நிதி உள்ளது. இங்கு பக்தர்கள் அமர்ந்து ராம நாமத்தை ஜபித்து வழிபடுவதைக் காணலாம். தொடர்ந்து சிவபெருமான் சந்நிதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பக்தர்கள் போற்றும் திருவிழாக்கள்!

கோயிலின் முக்கிய வருடாந்திர விழாவான அனுமன் ஜயந்தி, சித்திரை மாதத்தில் சிராவண நட்சத்திரத்தில் நடைபெறுகிறது. அந்நாளில் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் ஆஞ்சநேயர் மற்றும் ராமர் உற்சவ மூர்த்திகள் தேர்களில் எழுந்தருள, பக்தர்கள் அந்தத் தேர்களை வீதிகளில் இழுத்துச் செல்லும் பிரமாண்டமான ரதோற்சவம் நடைபெறுகிறது.

அந்நாளில் கோயில் முழுவதும் மலர்களாலும் வண்ண வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு, கண்கொள்ளாக் காட்சியாகத் திகழுமாம். ரத ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். அன்று ஆஞ்சநேயருக்குச் சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெறுகின்றன.

இந்தப் புனித நாளில்தான், தன் தாயாரான சீதாதேவியை நினைத்துப் பரவசத்துடன் மூலவரான ஆஞ்சநேயரின் கற்சிலை கண்ணீர் வடிக்கும் அற்புதம் நிகழ்கிறது என்கிறார்கள் பக்தர்கள்.

இன்னொரு புறம்... `ஈரப்பதம், கல்லின் தன்மை, வெப்பநிலை மாற்றம் அல்லது அபிஷேக நீர் சிறிய இடைவெளிகளில் தேங்கி வெளியேறுதல் போன்ற காரணங்களாலும் இது நிகழலாம்’ என்று சில அறிவியலாளர்கள் கருதுகின்றனர். ``எனினும் இந்த நிகழ்வு ஏன் அனுமன் ஜயந்தி அன்று மட்டும் நிகழ்கிறது. அதுதான் அனுமனின் சக்தி’’ என்று பக்தர்கள் உறுதியுடன் கூறுகின்றனர்.

மற்றொரு முக்கியத் திருவிழாவான தீப உற்சவத்தன்று, கோயில் வளாகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பாரம்பரிய எண்ணெய் விளக்குகள் ஏற்றப்படும்.

ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் பல்லக்கு உற்சவத்தன்று, பக்திப் பாடல்கள் மற்றும் இசையுடன் உற்சவருக்குப் பாரம்பரிய பல்லக்கு ஊர்வலம் நடைபெறுகிறது.

மட்டுமல்லாமல், மூலவருக்கு தினமும் வடைமாலை, வெற்றிலை மாலை, துளசி மாலை, வெண்ணெய்க் காப்பு, வெள்ளி மற்றும் தங்கக் கவசம் எனப் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. விசேஷ நாட்கள் மட்டுமன்றி, செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளிலும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து ஆஞ்சநேயரைத் தரிசிக்கின்றனர்.

சீதம்மா கரகம்

`சீதம்மா கரகம்; என்பது பனஸ்வாடி ஆஞ்சநேயர் கோயிலின் உள்ளூர் மரபுத் திருவிழாவாகும். `சீதம்மா’ என்பது கன்னடத்தில் சீதா தாயாரை அன்புடன் அழைக்கும் பெயராகும்.அலங்கரிக்கப் பட்ட ஒரு புனிதக் குடத்தில் பூக்கள், வேப்பிலை, மஞ்சள், குங்குமம், தேங்காய் மற்றும் பிற மங்கலப் பொருட்களைச் சேர்த்து கரகம் தயாரித்து, அதை மல்லிகை மலர்களால் அலங்கரிப்பர்.

கரகம் புறப்படுவதற்கு முன்பு, சீதாம்மா போன்று பெண்வேடம் தரித்த அன்பருக்குச் சிறப்பு பூஜை மற்றும் ஆரத்தி நடைபெறும். அதாவது சீதாம்மாவையே வழிபடுவதாக ஐதிகம். பின்னர் கரகத்தைத் தலையில் சுமந்து, கோயிலைச் சுற்றியுள்ள பாரம்பரிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்வார். பாரம்பரிய இசை, மேளதாளத்துடன் ஊர்வலமாக வரும் சீதாம்மா கரகத்தை, மக்கள் வீதிகளில் நின்று வரவேற்று வழிபடுவர். வெளியூர்களில் இருந்து எல்லாம் ஏராளமான பக்தர்கள் இதில் பங்கேற்க வருவார்களாம்.

அற்புதமான தெய்வம், மண் மணக்கும் விழாக்கள், விசேஷமான வழிபாடுகள் எனத் திகழும் இந்தக் கோயிலுக்கு அனைவரும் அவசியம் ஒருமுறையேனும் சென்று, ராமதூதனாம் வீர அனுமனை வழிபட்டுவரவேண்டும்.

பனஸ்வாடி வீர ஆஞ்சநேயரை வழிபடுவதால் பயம் நீங்கும், மனத் தைரியம் அதிகரிக்கும், தடைகள் அகலும், தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும், முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். எண்ணற்ற பக்தர்கள் இந்த வீர ஆஞ்சநேயரைத் தரிசித்து, தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டு பலனடைந்து வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.