`பேரிடர்களை எதிர்கொள்ள 5 நாடுகள் அடங்கிய ‘இமயமலை வாரியம் அமைக்க வேண்டும் - ஜக்கி வாசுதேவ்
நேபாள நாட்டின் காத்மாண்டு நகரில் நேற்று நடைபெற்ற ‘நேபாளத்திற்குத் துணை நிற்போம்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜக்கி வாசுதேவ், “இந்தப் பகுதியில் பேரிடர்களை எதிர்கொள்ள 5 நாடுகள் அடங்கிய ‘இமயமலை வாரியம்’ அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். மேலும், நேபாள பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு ‘ஈஷா நேபாளம்’ சார்பில் ரூ.1 கோடி வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் சத்குரு பேசுகையில், "இமயமலைத் தொடர்கள் பரவியுள்ள அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய ஓர் அமைப்பு உடனடியாக உருவாக்கப்பட வேண்டும். அரசியல் நிர்வாகங்கள் தனித்தனியாக இருந்தாலும், இந்த மலைத் தொடர்கள் எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகப் பார்க்கப்பட வேண்டும். இதை நாம் செய்யாமல், சரி, இது நேபாளத்தின் பிரச்னை, அவர்களே பார்த்துக்கொள்ளட்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தால், இதற்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது.
மலைகளுக்கு உங்களது அரசியல் தொடர்புகள் தெரியாது. நீங்கள் பேசும் மொழியோ அல்லது செய்யும் அபத்தமான காரியங்களோ தெரியாது. இதை ஒரே அமைப்பாக உங்களால் நிர்வகிக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் கலந்தாலோசனை செய்வதாவது ஒரே அமைப்பாக நடக்க வேண்டும். நாம் செய்யும் செயல்களில் ஒரு ஒத்திசைவு இருக்க வேண்டும். ஏனெனில் இமயமலை பூமியின் மிகவும் அற்புதமான மற்றும் கம்பீரமான அமைப்பாகும். அதே நேரத்தில், அது மிக உறுதிசியானதும் அல்ல.
ஒரு பெரிய பனிப்பாறையின் முக்கால்வாசி பகுதி, சிகரத்திலிருந்து 4,000 அடி கீழே திடீரென விழும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இதை யாரும் கணித்திருக்க முடியாது. ஆனால் இப்போது இது நடந்துவிட்டது என்பதால், நேபாளம் போன்ற ஒரு சிறிய நாடு தனியாக இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது என்பதை நாம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். இந்தப் பேரழிவிற்கு ‘தெய்வீக காரணங்களை’ கூறுவதோ அல்லது ‘நம்ப முடியாத மாய சக்தி’ என்று சித்தரிக்கவோ வேண்டாம். வாழ்க்கையின் ஆன்மீகப் பரிமாணங்களுக்கும், இயற்கை நிகழ்வுகளைக் கட்டுப்படுத்தும் பௌதிக விதிகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்வது அவசியம். எனவே தத்துவங்கள், கருத்தியல்கள் அல்லது ஆன்மீக விளக்கங்களை அளித்து மனித துயரத்தை நாம் கொச்சைப்படுத்தக் கூடாது." என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

