விவாகரத்து, 7 மாத கர்ப்பம்: கடத்தி மரத்தில் கட்டி தீவைக்கப்பட்ட பஞ்சாப் பெண் சோசியல் மீடியா பிரபலம்
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் மஞ்ஜீத் கவுர்(28). சோசியல் மீடியா பிரபலமான கவுர் கடந்த ஜூலை மாதம் சண்டிகரில் மதுபானக்கடை ஒன்றுக்கு அருகில் தனக்கு தெரிந்த இரண்டு பேரால் காரில் கடத்திச்செல்லப்பட்டார். மொரிண்டா என்ற நகரத்திற்கு கவுரை கடத்தி சென்று அடித்து உதைத்தனர். பின்னர் அங்கிருந்த ஒரு மல்பெர்ரி மரத்தில் கட்டி வைத்து தீவைத்தனர். கவுரின் நண்பர் ஒருவர் போர்வை ஒன்றால் கவுர் மீது பற்றிய தீயை அணைத்து மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மொரிண்டாவில் இருந்து மொஹாலி மருத்துவமனைக்கு கவுர் மாற்றப்பட்டார். அங்கிருந்து சண்டிகருக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இரண்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதில் இருந்து கவுர் மயக்க நிலையில் இருந்தார்.
ஆனால் இடையில் அவருக்கு சுயநினைவு வந்தது. திடீரென கவுரின் உடல் நிலை மோசம் அடைந்து சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார். கவுரின் தாயார் இது தொடர்பாக போலீஸில் கொடுத்துள்ள புகாரில், ஜூலை 3 ஆம் தேதி, சண்டிகரில் உள்ள செக்டார் 34 இல் உள்ள ஒரு மதுபானக் கடைக்கு அருகில், சுபி மற்றும் பிண்டா ஆகிய இரண்டு பேர் கவுரை காரில் கடத்தி சென்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
கவுர் என்ன காரணத்திற்காக கடத்தி தாக்கப்பட்டார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மஞ்ஜித் கவுர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் ஆவார். அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். அந்த மகனும் கவுரின் முன்னாள் கணவரோடு இருக்கிறார். ஆனால் கவுர் தற்போது இறந்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. கவுர் இறந்தபோது அவர் 7 மாதம் கர்ப்பமாக இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


