ஆம்பூர்: பச்சிளம் குழந்தை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை; தாய், தந்தையால் அரங்கேறிய கொடூரம்; 4 பேர் கைது

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மாங்காதோப்பு பாஷா நகர்ப் பகுதியில் வசிக்கும் டீ மாஸ்டர் தொழிலாளி ரஹமத்துல்லா, வயது 38. இவரின் மனைவி ஹவாமா. இவர்களுக்குத் திருமணமாகி 17 ஆண்டுகளாகிறது. ஏற்கெனவே இரு ஆண் பிள்ளைகள் மற்றும் இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 14-ம் தேதி ஹவாமாவுக்கு 5-வது பிரசவம் நடந்தது. இதில், அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனாலும், பெண் குழந்தை என்பதால் அவர்களுக்கு வளர்க்க விருப்பமில்லையாம். குடும்ப வறுமையைக் காரணமாகச் சொல்லி, தங்களின் உறவினர்கள் மூலமாக கடந்த 23-ம் தேதி பெங்களூருவைச் சேர்ந்த ஷம்ரின்தாஜ் என்பவரிடம் ரூ.1 லட்சத்துக்கு ரஹமத்துல்லா, ஹவாமா தம்பதியினர் தங்களின் பெண் குழந்தையை விற்பனைச் செய்திருக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட தாய்

இதுபற்றி, திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு ரகசியமாக புகார்ச் சென்றது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி, ஆம்பூர் நகரக் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில், போலீஸார் தனிப்படை அமைத்து குழந்தையை மீட்க முயன்றனர். பெங்களூரு சென்று குழந்தையை மீட்ட போலீஸார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து குழந்தையின் பெற்றோர் ரஹமத்துல்லா, ஹவாமா மற்றும் குழந்தையை பணம் கொடுத்து வாங்கிய பெங்களூருவைச் சேர்ந்த ஷம்ரின் தாஜ், அவரின் கணவர் அக்பர் பாஷா ஆகிய 4 பேரையும் கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்கப்பட்ட பெண் குழந்தை, மாவட்ட குழந்தைகள் நலக் குழுவினரின் பாதுகாப்பில் இருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.