Sigma: அதற்கு ஜேசன் சஞ்சய் அளித்த பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது! - சந்தீப் கிஷன் பேட்டி

முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சிக்மா படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

இப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படம் பற்றி நம் சினிமா விகடனுக்கு அளித்த பேட்டியில் அவர் பகிர்ந்திருக்கிறார்.

Sigma Movie Stills

அவர் பேசுகையில், "இயக்குநர் ஜேசன் சஞ்சய் படம் இயக்கப் போகிறார் என்ற தகவல் பேசப்பட்டபோது, எனக்கும் அதுகுறித்த செய்தி கிடைத்திருந்தது. அப்போது திடீரென ஒரு நாள் எனது நண்பரும் கிரியேட்டிவ் புரொடியூசருமான சுனீஷ் எனக்கு போன் செய்து, சஞ்சய் என்னை நேரில் சந்திக்க விரும்புவதாகக் கூறினார்.

வழக்கமாக நான் அறிமுக இயக்குநர்களுடன் பணிபுரியவே விரும்புவேன். ஆனால் சஞ்சய்யின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்ததை என்னால் எதிர்பார்க்கவே முடியவில்லை.

இதையடுத்து, கதையைக் கேட்பதற்காக அவரை ஹைதராபாத் வர முடியுமா என்று கேட்டிருந்தேன். சஞ்சய்யும் ஹைதராபாத் வந்து சுமார் மூன்று மணி நேரம் மிகத் தெளிவாக கதையை விவரித்தார்.

படத்தின் மீது அவருக்கிருந்த ஆர்வம் எனக்கு மிகவும் பிடித்துப்போக, அங்கிருந்தே எங்கள் பயணம் தொடங்கியது. உண்மையில் இது ராயன் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, அதாவது 2024 ஏப்ரல் மாதத்திலேயே பேசப்பட்டு உறுதி செய்யப்பட்ட கதை.

திட்டமிட்டபடி 2024 டிசம்பரிலேயே படப்பிடிப்பைத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் என்னுடைய வேறொரு படத்தின் அவசர படப்பிடிப்பு காரணமாக, தொடர்ச்சியாக 57 நாட்கள் இரவும் பகலும் வேலை செய்ய வேண்டியிருந்தது.

எனது சூழ்நிலையைப் புரிந்து கொண்ட சஞ்சய், படப்பிடிப்பை இரண்டு மாதங்கள் தள்ளிவைத்து, இறுதியாக 2025 மார்ச் மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்கினார்." என்றவர், " சிக்மா கதையைக் கேட்டு முடித்ததும், வழக்கமாக அனைத்து இயக்குநர்களிடமும் கேட்பது போல, "ஏன் இந்த கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்தீர்கள்?" என்று சஞ்சய்யிடமும் கேட்டேன்.

ஏனெனில் ஒரு இயக்குநர் தனது முதல் கதையை மிகுந்த நேசிப்போடு எழுதியிருப்பார். அதில் நான் எவ்வாறு பொருந்துகிறேன் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினேன்.

Sundeep Kishan
Sundeep Kishan

சஞ்சய் அதற்கு அளித்த பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. எனது பழைய திரைப்படங்களை ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டு, எந்த படத்தில் எனது நடிப்பு அவருக்குப் பிடித்திருந்தது என்றும், ஏன் என்னை இந்த கதாபாத்திரத்திற்குத் தேர்ந்தெடுக்க விரும்புகிறார் என்பதையும் மிகவும் தெளிவாக விளக்கினார்.

படப்பிடிப்பு தளத்திலும் எங்கள் இருவருக்கும் இடையே ஒரு அழகான நட்பு இருந்தது. அவருக்கு என்ன தேவை என்பதில் அவர் மிகத் தெளிவாக இருந்தார்; அதனால் அவர் எதிர்பார்ப்பதை அப்படியே வழங்குவது எங்களுக்கு எளிதாக இருந்தது.

முதல் படம் இயக்கும்போது அனைவரின் பார்வையும் தன் மீது இருக்கும் என்பதை உணர்ந்து, தான் கற்பனை செய்ததை அப்படியே திரையில் கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்." எனப் பகிர்ந்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.