கேப்டனுக்கு ஏற்பட்ட திடீர் காயம்.. வைபவ் சூர்யவன்ஷி புதிய கேப்டன் என அறிவிப்பு...
15 வயது இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, துலீப் டிராபி அரையிறுதியில் திடீரென ஈஸ்ட் சோன் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று கவனம் ஈர்த்துள்ளார். சென்ட்ரல் சோனுக்கு எதிரான போட்டியில், வழக்கமான கேப்டன் இஷான் கிஷன் வலது கையில் காயம் ஏற்பட்டு மைதானத்தை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, துணைக் கேப்டனாக இருந்த வைபவ் அணியை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றார்.
போட்டியின் 19-வது ஓவரில் இந்த மாற்றம் நடந்தது. விக்கெட் கீப்பராக இருந்த இஷான் கிஷனுக்கு பந்து கையில் பட்டதைத் தொடர்ந்து மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் கையில் கட்டுடன் காணப்பட்ட நிலையில், குமார் குஷாக்ரா விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டார். இதையடுத்து வெறும் 15 வயதான வைபவ், சீனியர் முதல் தர கிரிக்கெட்டில் முதல்முறையாக கேப்டனாக களமிறங்கினார்.
கேப்டன் பொறுப்பு கிடைத்த உடனேயே வைபவ் தனது முடிவெடுக்கும் திறனையும் வெளிப்படுத்தினார். சென்ட்ரல் சோன் வீரர் ஆர்யன் ஜுயல் விவகாரத்தில் அவர் எடுத்த DRS முடிவு வெற்றிகரமாக அமைந்தது. இதனால் அணியினருடன் உற்சாகமாக கொண்டாடிய வைபவின் காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றன.
துலீப் டிராபியின் முதல் போட்டியில் பேட்டிங்கில் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை காட்டியிருந்தார். 2024-ல் ரஞ்சி டிராபியில் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், இப்போது இளம் வயதிலேயே தலைமைப் பொறுப்பையும் பெற்றிருப்பது இந்திய கிரிக்கெட்டில் எதிர்காலத்துக்கான முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

