நேபாளம்: 3 நாள்களுக்கு பிறகு இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 6 வயது சிறுமி - துளிர்ந்த நம்பிக்கை!
பல நூறு பேரைக் கொன்ற நேபாள வெள்ளப் பேரிடரில் சின்ன ஆச்சர்யமும் நடந்துள்ளது.
கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 26) காலை 9 மணியளவில் பனிப்பாறை சரிந்து நேபாளத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டது.
இந்த வெள்ளம் தொடங்கியதே நேபாளத்தில் உள்ள ரசுவா மாவட்டத்தில்தான்.
ரசுவா மாவட்டம் முழுவதுமே வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால், அங்கே மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன... வருகின்றன.
ரசுவா மாவட்டத்தில் உள்ளது திமுரே கிராமம். வெள்ளிக்கிழமை மாலை (ஆகஸ்ட் 28) இந்தக் கிராமத்தில் வழக்கம்போல மீட்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
அப்போது சேறு மற்றும் இடிபாடுகளுக்கு அடியிலிருந்து மெல்லிய அழுக்குரல் கேட்டுள்ளது.
அந்த இடிபாடுகளை அப்புறப்படுத்தி பார்த்தப்போது, அங்கே 6 வயது சிறுமி இருந்திருக்கிறார்.
கிட்டத்தட்ட மூன்று நாள்கள் இடிபாடுகளுக்கு கீழே சிறுமி இருந்திருக்கிறார்.
சிறுமியை மீட்டு ஆரம்பத்தில் திமுரேயில் உள்ள ஏ.பி.எஃப் (APF) எல்லைப் பாதுகாப்பு முகாமில் அவருக்குச் சிகிச்சை கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், அவர் உடல்நிலை மோசமாக இருந்ததால், கூடுதல் மருத்துவ வசதி கொண்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.
இதனால், வெள்ளிக்கிழமை மாலையே, சிறுமியை ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டுவிற்கு அழைத்துச் செல்ல அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
ஆனால், மோசமான வானிலை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக அந்தப் பயணம் தள்ளிப்போனது.
பின்னர், சனிக்கிழமை மதியம், வானிலை சீராக சிறுமி காத்மாண்டுவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தற்போது அந்தச் சிறுமி தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இடிபாடுகளுக்கு இடையே இன்னும் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வரும் மீட்புக் குழுவினருக்கு இந்தச் சிறுமி ஒரு நம்பிக்கை!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


