சென்னை: வி.சி.க பிரமுகர் கொலை - நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறிய பின்னணி!
சென்னை தாம்பரத்தை அடுத்த திருநீர்மலை பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் என்கிற மைனாகுட்டி (40). விசிக மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளராக பதவி வகித்து வந்தார். தற்போது குடும்பத்தினருடன் கே.கே.நகர் பகுதியில் வசித்து வந்தார். சம்பவத்தன்று திருநீர்மலை அம்பேத்கர் சிலை அருகே நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது 3 பைக்குகளில் ஹெல்மெட் அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் அன்பழகனை மட்டும் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றது. பின்னர் அன்பழகனின் நண்பர்கள், ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், வி.சி.க பிரமுகர் அன்பழகன் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து சங்கர்நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், அன்பழகனின் சடலத்தை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் ஆட்டோ, பைக்குகளில் வந்த கும்பல், இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து சங்கர்நகர் போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட வி.சி.க பிரமுகர் அன்பழகன் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 14 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் கடந்த 2009- ம் ஆண்டு, திருநீர்மலை பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரையும் 2021ம் ஆண்டு பம்மல் நாகல்கேணியைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகரான கணேசன் என்பவரையும் கொலை செய்த வழக்குகள் முக்கியமானவை. கணேசன் கொலை வழக்கில் அன்பழகனும் அவரின் நண்பர் நாகல்கேணியைச் சேர்ந்த வீனஸ் என்பவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த அன்பழகன், கட்டடவேலைக்குப் பயன்படுத்தப்படும் சரள் மண் பிசினஸ் செய்து வந்தார். அதனால் அன்பழகனுக்கு வருமானம் அதிகரித்தது. பிசினஸ் தொடர்பாக வீனஸிக்கும் அன்பழகனுக்கும் முன்விரோதம் ஏற்பட்டிருக்கிறது. இதுதவிர தி.மு.க பிரமுகர் கணேசன் கொலை வழக்கிலும் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்திருக்கிறது. நண்பர்களாக இருந்த அன்பழகன், வீனஸ் ஆகிய இரு தரப்பும் அடிக்கடி மோதி வந்தது. அதனால்தான் அன்பழகன் தன்னுடைய இருப்பிடத்தைக் கூட கே.கே.நகருக்கு மாற்றினார். இந்தநிலையில்தான் கூலிப்படை மூலம் அன்பழகனை வீனஸ் கொலை செய்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வீனஸ் உள்பட சிலரைக் கைது செய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

