Hi Movie Review: சிரிப்பும் சென்டிமென்ட்டும் கலந்த சிம்பிள் குடும்ப சித்திரம்! கலகலக்க வைக்கிறதா?
காதலில் தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்திக்கும் மயில்சாமி (கவின்), ‘அரேஞ்ச்டு மேரேஜ் வேண்டாம்; காதலித்துத்தான் திருமணம் செய்துகொள்வேன்’ என்ற முடிவுடன் வீட்டைவிட்டு சென்னைக்கு வருகிறார். இன்னொரு புறம், விருப்பமில்லாத ஒருவருக்குத் திருமணம் செய்துவைக்க முயலும் குடும்பத்திடமிருந்து தப்பித்து சென்னைக்கு வருகிறார் தேவயானி (நயன்தாரா). அங்கே தேவயானியைச் சந்திக்கும் மயில், அவர்மீது காதல் கொள்கிறார். ஆனால், தனது காதலைச் சொல்வதற்கு முன்பாகவே ஒரு பிரச்னையால் இருவரையும் தேடி அவர்களது குடும்பங்கள் சென்னைக்கு வந்துவிடுகின்றன. குடும்பத்தினரிடமிருந்து தப்பிக்கவும், தேவயானியிடம் தனது காதலைச் சொல்லவும் மயில்சாமி ஒரு பொய்யைச் சொல்கிறார். அந்தப் பொய்யைக் காப்பாற்ற அவர் அடுத்தடுத்து சொல்லும் பொய்களும், அவற்றுக்குள் சிக்கித் தவிக்கும் இரண்டு குடும்பங்களும்தான் இந்த ‘Hi’.
வெகுளித்தனமும் குழந்தைத்தனமும் கலந்த கொங்கு மண்டல இளைஞர் மயில்சாமியாக, தனக்குப் பழக்கப்பட்ட ஜோனில் அழகாகப் பொருந்துகிறார் கவின். வசனங்களே இல்லாத காட்சிகளில்கூட குறும்புத்தனமான உடல்மொழியால் கலகலப்பைக் கூட்டும் அவர், உணர்வுபூர்வமான காட்சிகளிலும் குறை வைக்கவில்லை. தொடர்ந்து சீரியஸான பாத்திரங்களில் நடித்து வரும் நயன்தாராவுக்கு, சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு துறுதுறுப்பான வேடம். மயில்சாமியுடனான காட்சிகளில் உற்சாகமாக வலம் வருபவர், தேவயானியின் உணர்வுபூர்வமான தருணங்களுக்கு இன்னுமே ஆழம் கூட்டியிருக்கலாம். கவின் - நயன்தாரா இடையேயான கெமிஸ்ட்ரி நட்பு ஏரியாவில் பாஸானாலும், காதலிலும் எமோஷனிலும் தடுமாறவே செய்திருக்கிறது.
மயிலின் நண்பராக ஆதித்யா கதிரின் கவுன்ட்டர்கள் காமெடிக்குக் கைகொடுக்கின்றன. தனது கடைசித் திரைப்படத்தில் நிறைவான பாத்திரத்தில் தோன்றியிருக்கும் பாக்யராஜும் கவனம் ஈர்க்கிறார். அதேபோல, பிற சீனியர்கள் ராதிகாவும் பிரபுவும் தேர்ந்த நடிப்பால் தங்களது பாத்திரங்களுக்கு வலுசேர்க்கின்றனர். இவர்களுடன் சத்யன், ஃபெப்சி விஜயன், குரேஷி, காவ்யா அறிவுமணி எனப் பலரும் திரையை நிறைக்கிறார்கள். ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும், அவர்களில் பெரும்பாலானோருக்குத் தங்களது இருப்பைப் பதிவு செய்வதற்கான தருணங்கள் கிடைத்திருப்பது சிறப்பு.

கலர்ஃபுல்லான ஃபேமிலி என்டர்டெயினருக்குத் தேவையான வண்ணமயமான ஒளிப்பதிவை வழங்கியிருக்கிறது ராஜேஷ் சுக்லாவின் கேமரா. இதோ க்ளைமாக்ஸ் எனப் போக்கு காட்டியே அளவுக்கு அதிகமாக நீளும் இரண்டாம் பாதியை எடிட்டர் பிலோமின் ராஜ் இன்னும் கொஞ்சம் ஸ்ட்ரிக்டாக சுருக்கியிருக்கலாம். ஜென் மார்ட்டினின் இசையில் ‘ரசகுல்லா’, ‘குடிகார நெஞ்சு’ உள்ளிட்ட பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் இலகுவான மனநிலைக்குச் சரியாகப் பொருந்துகின்றன.
பெரிய கூட்டுக்குடும்பம், ஏராளமான கதாபாத்திரங்கள், கல்யாணக் கலாட்டா, காதல், காமெடி, சென்டிமென்ட் என 90-கள் மற்றும் 2000-களின் ஃபேமிலி என்டர்டெயினர்களை நினைவூட்டும் ஓர் உலகத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன். அந்தப் பழக்கப்பட்ட களத்துக்குள் ஒரு கலகலப்பான ‘ஃபீல் குட்’ படத்தைக் கொடுக்கும் முயற்சியில் பெருமளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.
வித்தியாசமான கதை, கணிக்க முடியாத ட்விஸ்ட் என எதையும் நம்பாமல், பழக்கப்பட்ட மீட்டரில் ஒரு கலகலப்பான படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார். நிறைவான கதாபாத்திரங்கள், ஜாலியான காட்சிகள், பாடல்கள், ‘ஃபீல் குட்’ க்ளைமாக்ஸ் எனத் தனக்குத் தேவையான அம்சங்களைக் கிட்டத்தட்டச் சரியான விகிதத்தில் படத்தில் கோத்திருக்கிறார். முதல் பாதியில் காமெடியின் துணையுடன் வேகமாக நகரும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் குடும்ப சென்டிமென்ட்டுக்கு அதிக இடம் கொடுக்கும்போது சற்றுத் தடுமாறுகிறது. சில உணர்வுபூர்வமான பகுதிகளும் தேவைக்கு அதிகமாகவே நீள்கின்றன. 144 நிமிடப் படத்தில் இன்னும் 10-15 நிமிடங்களைத் தயக்கமின்றிக் குறைத்திருக்கலாம்.

திரைக்கதையின் வசதிக்காக லாஜிக்கையும் மிகவும் இலகுவாகவே கையாண்டிருக்கிறார்கள். இத்தனை உறவினர்கள் நிறைந்த வீட்டில் அந்தப் பொய்யை இவ்வளவு காலம் எப்படி மறைக்க முடிகிறது, மயில் யாரைக் காதலிக்கிறார் என்பதை தேவயானி புரிந்துகொள்ள இவ்வளவு தாமதமாவது ஏன், இத்தனை குழப்பங்களுக்கும் களேபரங்களுக்கும் தேவயானி தலையசைப்பது ஏன் எனப் பல கேள்விகள் எழுகின்றன. படமும் அவற்றுக்குப் பதில் சொல்லப் பெரிதாக மெனக்கெடவில்லை. சில நகைச்சுவைகளும் அவ்வப்போது இலக்கைத் தவறுகின்றன. தேவயானி இறுதியில் எடுக்கும் முடிவுகளும் நம்பகத்தன்மையுடன் அமையவில்லை. இருப்பினும், படம் தனது எல்லையை உணர்ந்து அதற்குள்ளாகவே பயணிப்பதால், இந்தக் குறைகளை ஓரளவு கடந்து செல்ல முடிகிறது.
சிம்பிள் ஒன்லைனில் சிரிப்பும் சென்டிமென்ட்டும் கலந்து, திருப்திகரமான ஃபேமிலி என்டர்டெயினராக ஒரு கலகலப்பான ‘ஹாய்’ சொல்கிறது இந்த ‘Hi’!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

